சாதனா
புதைகுழியில் சிக்கி மீள்வது, பனிப்பாறைக்குக் கீழே உள்ள நீரில் மூர்ச்சையாகி வெளிவருவது, காட்டாற்றை நீந்திக் கடப்பது என அபாயகரமான இயற்கைச் சூழல்களுக்குத் தன்னை ஒப்படைத்துவிட்டு அதிலிருந்து போராடி உயிர் தப்பிக்கும் திகிலூட்டும் நிகழ்ச்சிதான் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’. இதன் கதாநாயகன் பேர் க்ரில்ஸ். டிஸ்கவரி தொலைக்காட்சியின் இந்நிகழ்ச்சியில் பேர் க்ரில்ஸூடன் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட பகுதி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான முன்னோட்டம்தான் இந்த வார டிரெண்டிங்.
மோடியின் துணிச்சலை, சாகச முகத்தை இந்நிகழ்ச்சி வெளிக்கொணரும் என்ற பாராட்டு மழை ஒரு புறம். “நாட்டை ஆள வேண்டியவருக்குக் காட்டுக்குள்ள என்ன வேலை?” என்பது போன்ற கேலியும் கிண்டலும் மறுபுறம். ஏற்கெனவே பேர் க்ரில்ஸ் இந்திய ரசிகர்களுக்கு நல்ல பரிச்சயம் ஆனவர் என்றாலும், இந்த நிகழ்ச்சி அவரை இன்னும் இந்தியர்களுடன் நெருக்கமாக்கும் என்ற கருத்துகளும் இணையத்தில் உலாவருகின்றன. இதுவரை ஒரு சாகச நிகழ்ச்சியை வழங்கும் முரட்டு மனிதனாக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த பேர் க்ரில்ஸின் நிகழ்ச்சிகள் முற்றிலும் மாறுபட்டவை.
ராணுவம் டூ தொலைக்காட்சி
தற்போது 45 வயதான எட்வர்ட் மைக்கேல் பேர் க்ரில்ஸ் இங்கிலாந்தின் முன்னாள் கடற்படைத் தளபதியும் அரசியல்வாதியுமான மிக்கி க்ரில்லின் மகன். லண்டனில் பிறந்து வளர்ந்த பேர் க்ரில்ஸ் 20 வயதில் இங்கிலாந்தின் சிறப்பு ராணுவப் படை வீரராகச் சேர்ந்தார். சாகச விரும்பியான இவர், ராணுவத்திலும் அச்சுறுத்தும் போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். ராட்சதப் பனிப்பாறைகள் நிறைந்த வட அட்லாண்டிக் ஆர்க்டிக் கடலில் காற்று ஊதப்பட்ட சாதாரண ரப்பர் படகில் தூண்டில் போட்டு 6,000 கிலோமீட்டர் கடற்பரப்பைக் கடப்பது, 25 ஆயிரம் அடி உயரத்தில் வெப்பக் காற்று பலூனில் மிதந்தபடி இரவு உணவை அருந்துவது போன்ற சாகசங்களை ராணுவத்தில் பணிபுரிந்த காலத்திலேயே செய்துவந்த அவருக்கு 2006-ல் டிஸ்கவரி தொலைக்காட்சி அழைப்புவிடுத்தது.
உலகின் மிக ஆபத்தான, கரடுமுரடான பிரதேசங்களில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சவால் மிகுந்த ‘மேன் வெசஸ் வைல்ட்’ நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்று கேட்டது. அன்று தொடங்கியது இந்தச் சவால். கடந்த 13 ஆண்டுகளாக எரிமலை, பள்ளத்தாக்கு, பனிமலை எனப் பேர் க்ரில்ஸ் தடம் பதிக்காத பிரதேசங்களே இல்லை. ஏழு சீசனை இந்நிகழ்ச்சி கடந்துவிட்டது. இந்த முயற்சிகளுக்குப் பரிசுகளாக முதுகுத்தண்டு எலும்பு முறிவு, தோள்பட்டை எலும்பு முறிவு போன்றவை கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
அன்று ஒபாமா, இன்று மோடி
இந்த நிகழ்ச்சிக்கு அவ்வப்போது சில விஐபிகளையும் அழைத்துச் செல்கிறார் இவர். அலாஸ்காவின் பனிகாட்டுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை அழைத்துச் செல்லும்படி 2015-ல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து பேர் க்ரில்ஸூக்கு அழைப்பு வந்தது. அன்றைக்குப் பூமி வெப்பமடைதலையும் பருவநிலை மாற்றத்தையும் நேரடியாகப் பார்த்து உணர பேர் க்ரில்ஸோடு அலாஸ்காவுக்குச் சென்றதாகச் சொன்னார் ஒபாமா. இன்று காட்டுயிர் பாதுகாப்பின் அவசியத்தை உலகுக்கு உணர்த்த பேர் க்ரில்ஸோடு இந்தியாவின் காட்டுக்குள் சென்றதாகச் சொல்கிறார் மோடி.
அடுத்து எந்த விஐபி மிஸ்டர் பேர் க்ரில்ஸ்?