ஐ.டி. நிறுவனங்களில் ஆண்களும் பெண்களும் ஒரே அலுவலகத்தில் ஒரே மாதிரியான வசதிகளுடன் பணி புரியலாம். ஆங்கிலம் பேசுபவர்கள், கோட் சூட் போட்ட அதிகாரிகள், இருக்கும் அலுவலகங்களில் பாலினப் பாகுபாடுகள் இருக்காது என்று இதுவரை நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. கண்ணாடி மேஜைகளும் நவீனக் கணினிகளும் கொண்ட ஏ.சி. அறைகளிலும் பாலினப் பாகுபாடுகளும் பாலியல் துன்புறுத்தல்களும் நிலவுகின்றன.
பெண் இயக்குநர் உண்டா?
இந்திய சந்தைக் கட்டுப்பாட்டு நிறுவனமான ‘செபி’ கடந்த ஏப்ரல் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு கார்பரேட் நிறுவனத்திலும் குறைந்தது ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும். அவ்வாறு மாற்றாதவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் என்றும் ஒவ்வொரு நாள் தாமதத்துக்கும் ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த நேரிடும் என்றும் உத்தரவிட்டது. கடந்த ஆண்டும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதை அமலாக்குவதற்கான அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் 30 சதவீத நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குநர்கூட இல்லை. அடையாளத்துக்கு ஒரு பெண் இயக்குநர் என்ற நிலையில்தான் 70 சதவீத நிறுவனங்கள் உள்ளன. ஒன்றுக்கும் அதிகமான பெண் இயக்குநர்களை இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் மட்டுமே நியமித்திருந்தன. டி.சி.எஸ். போன்ற மிகப்பெரும் ஐ.டி. நிறுவனங்களில் ஒருவர் மட்டுமே பெண் இயக்குநராக உள்ளார். மிகப்பெரும் நிறுவனமான ஹெச்.சி.எல். உயர்மட்ட நிர்வாகத்தினர் தங்களது குடும்பங்களிலிருந்தே பெண்களை நியமித்திருந்தனர் (தகவல்: இந்தியா ஸ்பெண்ட் என்ற ஆய்வு இணையதளம்).
சலுகைகள் மறுக்கப்படுகின்றனவா?
எட்டு லட்சம் பெண் தொழிலாளர்களைக் கொண்டுள்ள ஐ.டி. துறையில் இந்த நிலைதான். 2013-ம் ஆண்டில் நாஸ்காம் வெளியிட்ட விபரங்களின்படி, 2004 -ம் ஆண்டு 20 சதவீதமாக இருந்த ஐ.டி. பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 2012 -ம் ஆண்டு 30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தொடக்க நிலைப் பணியாளர்களாக நுழைவோரில் 40 சதவீதம் பெண்களாக இருந்தால், மேலாளர் பொறுப்புகளில் 20 -25 சதவீதம் மட்டுமே பெண்கள். அதற்கும் மேல் பொறுப்புகளுக்குச் செல்லச் செல்ல இந்த எண்ணிக்கை இன்னும் குறைகிறது.
முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களின் சதவீதம் குறையும்போது, அது பணிச் சூழலிலும் பிரதிபலிக்கும். பாலினப் பாகுபாடுகளுக்கும், சலுகைகள் மறுக்கப்படவும் இது முக்கியமான காரணமாகும்.
ஒரு பெண்ணுக்கு எல்லாத் துறையிலும் பேறுகாலச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஐ.டி. துறையில் பேறுகாலச் சலுகைகள் பொருளாதார இழப்பாகவே பார்க்கப்படுகின்றன. ஐ.டி. பணியாளர் நந்தினியிடம் பேசும்போது இதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அவர், “குழந்தைப் பேறு பற்றி யோசிக்கவே தயக்கமாக உள்ளது. புராஜெக்ட் முடியும் வரை உடன் இருக்க மாட்டோம் என்று நினைத்து அலட்சியப்படுத்துவார்கள். பேறுகால விடுப்பு எடுப்பவர்களுக்கு அந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு கிடைக்காது” என்கிறார்.
மற்றொரு ஐ.டி. பணியாளர் சுகந்தி, “எனது திருமணத்துக்கு இரண்டு வாரம் விடுமுறை கேட்டிருந்தேன். தர மறுத்து விட்டார்கள். இந்தத் துறையே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன், வேலையையும் ராஜினாமா செய்து விட்டேன். இப்போது வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகிவருகிறேன்” என்று விரக்தியுடன் தெரிவித்தார்.
பணியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்பது விதி. சமீபத்தில் பணி நீக்கத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்ற ரேகா என்ற கர்ப்பிணிப் பெண்ணின் வழக்கு, இதற்குச் சரியான உதாரணம். ரேகா கர்ப்பிணியாக இருப்பது தெரியாததால்தான், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்று சம்பந்தப்பட்ட ஐ.டி. நிறுவனம் நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தது.
பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?
இரவுப் போக்குவரத்து உள்ளிட்ட பிற வசதிகளும் இயந்திர கதியிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உமா மகேஸ்வரி என்ற ஐ.டி. பணியாளர் பாலியல் வல்லுறவுக்காளாகிக் கொல்லப்பட்டார். இரவுப் பணி முடித்து திரும்பும்போது உரிய போக்குவரத்து வசதி கிடைக்காமல்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பணியாற்றும் நிலையில், ‘இங்கு அனைத்தும் கணினிமயம், அவர் போக்குவரத்து வசதி கோரியிருந்தார்.
ஆனால் ஒரு எண்ணைப் பிழையாக அழுத்திவிட்டார். இதனால் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது’ என்பதுதான் மேற்சொன்ன சம்பவத்தில் ஐ.டி. நிறுவனம் கொடுத்த விளக்கம். இரவில் பணிபுரிந்து தனியாக வீட்டுக்குச் செல்லும் பெண்களுக்கு வாகன வசதி கிடைக்கும் ஏற்பாட்டை, இவ்வளவு சிக்கலானதாகவும் அலட்சியமாகவுமா வைத்திருப்பது என்ற நியாயமான கேள்வி உடனடியாக அனைவர் மனதிலும் எழத்தான் செய்கிறது.
இளம்பெண்கள் அதிக எண்ணிக்கையில் வீட்டைத் தாண்டி வெளியேவந்து வேலையென்று தேடி வருவது ஐ.டி. நிறுவனங்களின் வாசல்களில்தான். ஐ.டி. பணி அவர்களுக்கு வாழ்வில் ஒரு புதிய கதவைத் திறந்து வைத்தாலும், கூடவே இது போன்ற சிக்கல்களுக்கு அவர்களை உள்ளாக்குகிறது.
நிறுவனத்துக்குள் அவர்கள் எவ்விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறியாமலேயே ஐ.டி. பணியாளர்களின் வாழ்க்கை முறை, பாலியல் உரிமைகள் குறித்துப் பல விதமான விமர்சனங்கள் வெளி உலகில் நிலவுகின்றன. இந்த விமர்சனங்கள் என்னென்ன, அவை ஆதாரமில்லாமல் பேசப்படுகின்றனவா, இவற்றால் ஐ.டி. பணியாளர்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்து அடுத்த வாரம் அலசுவோம்.