இளம் பருவத்தில் காதல் பூப்பது இயல்பு.
“காதல் இனம் பார்ப்பதில்லை
அது மதம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுமே” என எளிதாக எழுதிவிடுகிறார்கள் கவிஞர்கள். ஆனால், யதார்த்தத்தில் சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல்தான் அது நடக்கிறதா?
சந்தோஷமாகத் துள்ளித் திரிய வேண்டிய வயதில், சாதியமைப்பின் காரணமாக இளைஞர்களின் இறகுகள் வெட்டி எறியப்படுகின்றன. ஆசைகளைச் சுமந்த காதலர்களை ஆளாளுக்குப் பந்தாடுகிறார்கள். அதிலும் சாதிரீதியில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையோ குரூர முகம் காட்டுகிறது. சமூகம் பேசாமல் வேடிக்கை பார்ப்பதுபோலத்தான் எல்லாம் நடக்கிறது.
சாதியை எதிர்த்தும் சமூகநீதிக்காகவும் எவ்வளவு குரல்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஒலிக்கின்றன. ஆனாலும் அவற்றின் சத்தம் சாதுரியமாக அடக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், சாதிய அடக்குமுறை ஆவணங்கள், வைரல் ஆகி இணையத்தில் பரவுகின்றன. தர்மபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ் எனத் தொடரும் அவலங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று ஆதங்கப்பகிறார்கள் பல்வேறு சமூக இயக்கங்கள் சார்பில் இயங்கிவரும் இளைஞர்கள்.
எங்கிருந்து வருகிறது?
“இன்றைய இளைஞர்களில் 75 சதவீதம் பேரிடம் சாதிய உணர்வு இல்லை. மீதமுள்ள 25 சதவீதம் பேர் கிராமத்து இளைஞர்கள். அவர்களிடமிருந்துதான் சாதிரீதியான தாக்குதல்கள் வருகின்றன” என்கிறார் தி.க. இளைஞர் அணியைச் சார்ந்த செல்வேந்திரன். பெரும்பாலான சாதி சங்கத் தலைவர்கள் கிராமங்கள்-சிற்றூர்களில் இருந்தே புறப்படுகிறார்கள். கிராமத்தில் உள்ள இளைஞர்களிடம், ‘நாம் அடக்கி ஆண்ட பரம்பரை’ என்று அவர்கள் உசுப்பி விடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
இப்படி உசுப்பி விடும்போது, யாரை அடக்கி ஆண்டோம் என்ற கேள்வி இளைஞர்களுக்கு எழும். அப்போது குறிப்பிட்ட ஒரு சாதியைச் சாதித் தலைவர்கள் கை காட்டிவிடுகிறார்கள். அதிலிருந்தே இனம்புரியாத வெறுப்பு ஏற்படுகிறது. கொலை செய்யும் அளவுக்கு இளைஞர்களுக்கு வன்மம் ஏற்படுகிறது. இவற்றைத் தடுப்பதில் அரசுக்குப் பெரும் பங்கு உள்ளது” என்கிறார் அவர்.
என்ன உரிமை?
“காதலிக்கிறேன் என்று ஒரு பெண் வந்து நிற்கும்போது அவளைப் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட ஆண் எப்படிப்பட்டவர்?, அவர் தங்களுடைய மகளைக் காலத்துக்கும் வைத்துக் காப்பாற்றுவாரா என்று பார்க்கலாம், அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வைச் சொல்லி, கொலை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பெற்றவர்களுக்கு அவர்களுடைய பெண் மீது இல்லாத அக்கறை சாதிப் பேரைச் சொல்லி வலம்வரும் குழுக்களுக்கு எங்கிருந்து வருகிறது?" என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோபிகா ஸ்ரீ கேள்வி எழுப்புகிறார்.
பொதுவாகச் சாதியின் பெயரால் நிகழும் கொலைச் சம்பவங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை. ஓட்டு அரசியலுக்காக அவை இயற்றப்படுவதில்லை. அப்படியே இயற்றப்பட்டாலும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை” என்பது இவருடைய ஆதங்கம்.
கண்காணிப்பகம் தேவை
சாதிய தாக்குதல்களைத் தவிர்க்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பகங்கள் தேவை என்கிறார் இளந்தமிழகம் இயக்கத்தைச் சேர்ந்த தீப்தி.
“சாதிப் பிரச்சினை என்பது இந்தியா முழுவதுமே ஆழமாக வேர்விட்டுள்ளதால், மாநில கண்காணிப்பகங்கள் மட்டுமன்றி தேசியளவிலும் தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்று ‘சாதிய அடக்குமுறை தடுப்பு ஆணையம்’என்னும் சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த ஆணையம் ஒவ்வொரு கிராமத்தையும் கண்காணிக்க வேண்டும்” என்று அவர் எதிர்பார்க்கிறார்.
இன்றைக்குப் பாதி சாதிச்சண்டைகள் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும்தான் நடக்கிறது என்று கூறும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த கமல், “திருச்செங்கோடு கோகுல்ராஜ் மரணத்தைக் கண்டித்து என்னோட நண்பன் ஒருவன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தான். உடனே ஒரு கும்பல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, என் நண்பனின் பேஸ்புக் பக்கத்தில் அசிங்கமான வார்த்தைகளால் கமெண்ட் போட்டிருந்தனர்” என்கிறார்.
என்ன ஏதுவென்று தெரியாமல் கிராமப்புறங்களில் சாதிய ஈகோ கட்டமைத்துவிடப்படுகிறது என்றும், அதன் வெளிப்பாடாகத்தான் கொலைகள் அரங்கேறுகின்றன, சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கிறேன் என்று சிலர் சாதிய வன்மங்களை வளர்த்துவிடுகிறார்கள் அதுமாதிரியான சங்கங்களையும் கட்சிகளையும் அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கமல் கூறுகிறார்.
மனிதர்கள் அல்ல
“நகரத்தில் இருந்து ஒரு நண்பனை வீட்டுக்கு அழைத்துப் போனால் அவனது சாதியைக் கேட்காத ஊரார், ஊரில் உள்ள தலித் இளைஞனை வீட்டுக்கு அழைத்துப் போனால் சர்ச்சை ஆக்குகிறார்கள்” என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் இளந்தமிழகம் இயக்கத்தின் தீபன் குமார்.
“இங்கே எல்லோருக்குமே ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. சாதிச் சங்கத்தினர் அற்ப எண்ணத்தில் கொலை செய்கிறார்கள். உருவமற்ற சாதியைக் கொண்டாட ரத்தமும் சதையுமான மனிதர்களைக் கொலை செய்பவர்களை மனிதர்களாகக் கருதவே முடியாது” என்று முடிக்கிறார் அவர்.
நீங்க என்ன சொல்றீங்க?
உலகம் முழுவதும் காதல் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படு கின்றன. கல்வி, நவீன வளர்ச்சிகள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், நம் நாட்டில் மட்டும் காதல் வலிந்து முறிக்கப்படுகிறது. சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் சுயலாபத்துக்காகக் காதலிப்பவர்களைக் கொல்கிறார்களா? சாதியைக் காரணம் காட்டி தங்கள் வாரிசுகளையும், இளைஞர்களையும் இப்படிக் கொல்வதற்குப் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள், விவாதிப்போம்.
உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி:
இளமை புதுமை, தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600002
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in