நீங்கள் சென்னை போன்ற நகரத்தில் தினமும் பேருந்துப் பயணம்/ரயில் பயணம் மேற்கொள்பவரா? அப்படியானல் நீங்கள் ஒரு காட்சியைத் தவிர்க்க முடியாது; பயணிகளில் பெரும்பாலானவர்கள், இளைஞர் முதல் வயதானோர் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போன் உடன் , காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்-ஆப் , ஃபேஸ் புக் பார்த்துக் கொண்டும் வருவார்கள். எனது பேருந்துப் பயணத்தில் தினமும் இந்தக் காட்சியைப் பார்ப்பேன். இது போதாதென்று இருசக்கர வாகன ஓட்டிகளும்கூட காதில் ஹெட்செட் மாட்டி அதற்கு மேல் ஹெல்மெட்டும் மாட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள். கார் ஓட்டிகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்படிச் செல்லும்போது அவசரமாக வரும் ஆம்புலன்ஸின் சைரன் ஒலியும், பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும் அவர்களுக்குக் கேட்பதில்லை. சாலையில் எதிர்ப்படும் காட்சிகள் அவர்களைப் பொறுத்தவரை ஒரு மெளனப் படத்தின் காட்சிகள்போல் நகரும் என நினைத்துக்கொள்வேன்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் தினமும் சென்றுவரும் பேருந்துத் தடம்தான் என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு இடையில் உள்ள நிறுத்தங்கள் என்னென்ன என்பது தெரியாது. கவனம் எல்லாம் கையில் இருக்கும் செல்போனிலும், காதில் கேட்கும் பாடலிலும்தான் இருக்கும். சொல்லப் போனால் கட்டளைகளுக்குப் பழக்கப்பட்ட ரோபோ மாதிரி தினமும் ஒரே இடத்திற்கு வந்து திரும்பிக்கொண்டிருப்போம்.
திடீரென யாராவது புதியவர்கள், ‘அடுத்த ஸ்டாப் என்ன?’ என்று கேட்டுவிட்டால் திடீரென என்ன சொல்வதென்றே தெரியாது. நான் எதற்கு அதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய இளம் தலைமுறையிடம் இருக்கிறது.
ஆனால் உலகம் என்பது நமக்கு வெளியிலும் இருக்கிறது. நம்முடைய படுக்கை அறையும், செல்போனும் மட்டும் உலகம் அல்ல. வெளியில் உள்ள இந்த உலகத்தின் ஒவ்வொரு சின்னச் சின்ன பாதிப்பும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால் இதை நீங்கள் புறந்தள்ள முடியாது.
இசையை ஆழ்ந்து ரசிப்பது மனதிற்கு ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காக எப்போது ஹெட்செட் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. பேருந்து பயணங்களின் போதெல்லாம், ஜன்னல் வழியாகப் பல விஷயங்களை உள்வாங்கலாம். நம்முடன் பயணிக்கும் மனிதர்களைப் பாருங்கள். செல்போனை பைகளில் வைத்துவிட்டு அவர்களுடன் பழகுங்கள். ஒரு நல்ல சமூகம் இப்படித்தான் உருவாகும்.