ஒருநாள் முல்லா நஸ்ரூதீன் தங்கியிருந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க சில வெளிநாட்டு யாத்ரீகர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு உதவ ஒரு ஆள் வேண்டும் என்பதால் அரசன், முல்லாவை அழைத்து அந்த யாத்ரீகர்களிடம் போய்ப் பேசும்படி சொன்னார். முல்லாவுக்கு மனமில்லை. எப்படியாவது இதைத் தட்டிக்கழிக்கப் பார்த்தார். அரசன் வலியுறுத்தியதால் வேறு வழியில்லாமல் ஒருமனதாக ஒத்துக்கொண்டு யாத்ரீகர்களைச் சந்திக்கச் செல்கிறார்.
யாத்ரீகர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, “நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
அவர்களில் ஒருவர் எல்லோருக்கு மாக, “தெரியாது” என்றார்.
“உங்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது. நீங்கள் எதுவும் தெரியாதவர்கள்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். அரசன் மீண்டும் போய் அவர்களிடம் பேசச் சொன்னார்.
“நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என மீண்டும் அவர்களைப் பார்த்து முல்லா கேட்டார்.
இந்த முறை உஷாரான யாத்ரீகர்கள் ஒரே குரலில், “தெரியும்” என்றனர்.
“ஓ! நல்லது. அப்படியானால் நான் உங்களுக்கு எதுவும் கூறத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். அரசனோ மீண்டும் ஒருமுறை போகச் சொல்லி வற்புறுத்தினார்.
“நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என மீண்டும் அவர்களைப் பார்த்து முல்லா கேட்டார்.
இந்த முறை முல்லாவைச் சமாளிப்பது குறித்து யாத்ரீகர்கள் கலந்தாலோசித்து, படு உஷாரான ஒரு பதிலைத் தயாரித்து வைத்திருந்தனர், “எங்களில் சிலருக்குத் தெரியும். சிலருக்குத் தெரியாது” என்றனர்.
“அப்படியானால் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு முல்லா மீண்டும் திரும்பிவிட்டார்.
அரசன் முல்லாவை மீண்டும் போகச் சொல்லி வற்புறுத்தவில்லை.