கல்லூரி மாணவர்கள் என்றாலே கேட்ஜட்களோடு கேட்ஜட்களாகப் பிணைந்து கிடப்பவர்கள் என்று சொல்பவர்களா நீங்கள்? சென்னை, தி.நகரில் இருக்கும் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரிக்குச் சென்றால் உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.
“ஏய்… அந்த மக்குல மண்புழு உரத்தைப் போட்டுட்டேன். நீ அந்தத் தொட்டியில போடு…”
“குரோட்டன்ஸையும் ரோஜா செடியையும் வாங்கறதுக்கு ஒரு ஆன்ட்டி வருவாங்கப்பா… மறக்காம அந்த இரண்டு செடிங்களையும் அவங்ககிட்ட கொடுத்திடுங்க….”
இப்படியான வாக்கியங்களை, இந்தக் கல்லூரியின் வளாகத்தில் மிகவும் சகஜமாகக் கேட்கலாம். சுமார் 300 மாணவிகள் இந்தக் கல்லூரியில் இருக்கிறார்கள். இவர்களின் சர்வசாதாரணமான உரையாடல்கள் இவை. அந்தக் கல்லூரியின் மொட்டை மாடியைப் பார்த்தால் அப்படியே அசந்துபோவீர்கள். அது என்ன கல்லூரியா, நர்சரி கார்டனா, பண்ணை வீடா? என்ற சந்தேகமே உங்களுக்கு வந்துவிடும். அப்படி ஒரு பசுமைப் புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறார்கள் இந்த மாணவிகள்.
விதை போட்ட புராஜக்ட்
எனாக்டஸ் (Enactus) இந்தியா தன்னார்வத் தொண்டு நிறுவனம் மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வைத் தூண்டும் திட்டங்களுக்கான போட்டிகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்தாண்டுக்கான போட்டி அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டிக்காக எனாக்டஸ் ஷாசுன் குழு (Enactus shasun Team) மூலம் மண்புழு உரங்களைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் மாடித் தோட்டங்கள் உருவாக்கும் திட்டத்தை புராஜக்டாக அளிக்க உள்ளனர். இந்தத் திட்டத்தின் பெயர் ஹரித் யாஹ்வி (Harith Yahvi). இதற்காக கல்லூரியின் மேல் தளத்தை மாணவிகளுக்கு ஒதுக்கித் தந்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
“ஏறக்குறைய 300 மாணவிகளை ஆர்கனைஸ் பண்ணினோம். இந்தப் புராஜக்ட செயல்படுத்துவதற்கு கைடாக ஜி.உமாமகேஸ்வரியையும் எ.எபினேசரையும் நியமிச்சோம்” என்றார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.பூர்ணா.
முறையான பயிற்சி
இயற்கையான முறையில் செடி, கொடிகளை வளர்க்கும் ஆர்வத்தை மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட உடனேயே, மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் முறையை நேரடியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில். அத்துடன் அச்சிரப்பாக்கத்துக்கு மாணவிகளை அழைத்துச் சென்று அங்கு விவசாய நிலத்திலேயே நேரடி பயிற்சிகளையும் அளித்துள்ளார்கள்.
அதேபோல் கரும்பு சக்கையிலிருந்து மண்புழு உரங்களைத் தயாரிக்கும் முறையை படாளம் சர்க்கரை ஆலைக்குச் சென்று மாணவிகள் அறிந்திருக்கிறார்கள். இந்தப் பயிற்சிகளின் காரணமாக மாணவிகள் பெயிண்ட் டப்பா முதல் சிறிய மக், பக்கெட் வரை பல பொருட்களில் பூ, குரோட்டன்ஸ் போன்ற வகைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள். அருகில் வசிப்பவர்கள் தோட்டத்தைக் கவனித்து, செடிகளைக் கேட்கும்போது, செடியின் வகைக்கேற்ப குறைந்தபட்சம் 30 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150 வரையான விலையில் இவற்றை விற்கவும் செய்கிறார்கள்.
இந்தத் திட்டத்துக்குத் தலைவராக இருப்பவர் மாணவி ஸ்வேதா. “ஸ்வேதா, லஹரி ராவ், கிருத்திகா, ப்ரியங்கா, நித்யஸ்ரீ ஆகியோர் அடுத்த மாசம் டெல்லியில் நடக்கும் Enactus போட்டியில இந்தத் திட்டத்த விளக்கப் போறாங்க” என்றார் மாணவிகளின் கைடான ஜி.உமாமகேஸ்வரி.
எதிலும் பசுமையை வளர்க்கலாம்
இந்த புராஜக்ட் மாணவிகளுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.படிக்கும் காலத்திலேயே இயற்கை முறையில், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக எப்படிச் செடிகளை வளர்க்கலாம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுகிறார்கள்.
வீட்டில் இடவசதி இருந்தும் எப்படிச் செடியை வளர்ப்பது என்று தெரியாதவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் விரும்பும் வகையில் மாடியிலோ, சமையலறையிலோ, பால்கனியிலோ, வரவேற்பு அறையிலோ, வீட்டின் முகப்பிலோ, வீட்டின் சுவரில் செங்குத்தாகவோ (vertical) பலவிதமான செடி, கொடிகளை வளர்ப்பதற்கு உதவுகிறார்கள். “எங்கள் வீட்டுல எங்கயும் செடி வளர்க்க முடியாதுன்னு சொல்றவங்க வீட்டுல மூங்கிலிலேயே செடி வளர்த்துத் தொங்கும் தோட்டம் போடச் சொல்லித் தர்றோம்” என்கிறார் எனாக்டஸ் ஷாசுன் குழுவின் மாணவர் தலைவர் ஸ்வேதா.