நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் டிஜிட்டல் லாக்கர் வசதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை ஒன்றாம் தேதி அன்று அறிமுகப்படுத்த உள்ளார். இந்த டிஜிட்டல் லாக்கர் வசதி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் டிஜிட்டல் ஆவணங்களை இணையத்தில் சேமித்துவைப்பதற்கான இடம் வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவற்றையும், பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை போன்றவற்றையும் டிஜிட்டல் ஆவணமாக மாற்றிச் சேமித்துக்கொள்ள முடியும்.
அரசாங்க அலுவல் நிமித்தமாகத் தேவைப்படும்போது அதிலிருந்தே பரிமாறிக்கொள்ள முடியும். இனி சான்றிதழ்களைத் தூக்கிக்கொண்டு ஜெராக்ஸ் கடைக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது.
மாநிலப் பட்டாம்பூச்சி
இந்தியாவில் முதன்முறையாக மகாராஷ்டிர அரசு மாநிலப் பட்டாம்பூச்சியாக ப்ளூ மார்மான் வகை பட்டாம்பூச்சியைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படக்கூடிய இந்த வகை பட்டாம்பூச்சி இந்தியாவில் காணப்படும் பட்டாம்பூச்சிகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த வகை பட்டாம்பூச்சிகளின் மீது போதிய அக்கறை செலுத்தப்படாததால் அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மகாராஷ்டிர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
சோனியின் ப்ளே ஸ்டேஷன்- 4
கம்ப்யூட்டர் கேம்கள் குழந்தைகளைப் போலவே இளைஞர்களுக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம்தான். நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக ப்ளே ஸ்டேஷன் முன் உட்கார்ந்து வீட்டில் திட்டு வாங்குபவர்கள் அதிகம். இவர்களுக்கு மேலும் திட்டு வாங்கித்தரும் வேளை வரப்போகுது. வேறொண்ணுமில்ல, உங்களைப் பரவசப்படுத்தும் பலவகை விளையாட்டுகளைத் தன்னுள்ளே கொண்ட சோனி நிறுவனத்தின் அடுத்த ப்ளே ஸ்டேஷன் விரைவில் வரவிருக்கிறது.
விளையாட்டுப் பிரியர்களை தன்வசப்படுத்தப்போகும் இந்த ப்ளே ஸ்டேஷன்-4, 1டெரா பைட் ஸ்டோரேஜ் கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் ஜூலை 15-ம் தேதி அன்று விற்பனைக்கு வரவுள்ளது இது. இதன் விலை என்ன என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை. ப்ளே ஸ்டேஷன் வரப்போகிற செய்தியைச் சொல்லும் சோனி நிறுவனத்தின் ப்ளே ஸ்டேஷன் வலைப்பூவில் விலை பற்றிய விவரம் இல்லை.