தொழில்முறை நாடகக் குழுக்களும் தொழில்முறை சாராத கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய நாடகக் குழுக்களும் பங்கெடுத்த நாடகப் போட்டியை தியேட்டர் மகம் சார்பாக அதன் நிறுவனர் மதுவந்தி அருண் நடத்தினார்.
ஏறக்குறைய 20 நாடகக் குழுக்களிலிருந்து ஐந்து நாடகங்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயின. இந்த ஐந்து நாடகங்களும் மியூசியம் அரங்கில் நடத்தப்பட்டன. இதில் சிறந்த நாடகத்துக்கு கே.பாலச்சந்தர் நினைவுச் சுழற் கேடயமும் ரொக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரமும் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. பங்கெடுத்த ஐந்து நாடகங்களுமே இயக்கம், நகைச்சுவை, கதை போன்ற அம்சங்களில் தனித்தன்மையோடு விளங்கின.
சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற படைப்பான சீதை மார்க் சீயக்காய்த்தூள் கதையை நாடகமாக்கியிருந்தது, பாத்திமா பாபுவின் FAB தியேட்டர்.
ஏழ்மையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டும் ஓவியனுக்குப் பெரிய பணி செய்வதற்கான வாய்ப்பு வருகிறது. மாதிரிக்கு ஒரு படத்தை வரைந்து காட்டச் சொல்கிறார்கள். கடவுள் சீதையைச் சீயக்காய்த்தூள் விளம்பரத்துக்காக வரைந்திருப்பார். படத்தில் இன்னும் சற்றுக் கவர்ச்சியைக் கூட்ட வேண்டும். அப்போதுதான் உனக்கு அட்வான்ஸ் கிடைக்கும் என்பார்கள். ஆபாசம் தன்னுடைய கலையில் பிரதிபலிக்கக் கூடாது என்னும் கொள்கை உடையவன் அந்த ஓவியன். ஏழ்மையின் காரணமாக அந்த ஓவியன் தன்னுடைய கொள்கையிலிருந்து நழுவினானா இல்லையா என்பதுதான் கிளைமேக்ஸ்.
தியேட்டர் நிஷா குழுவினர் ஜெயகாந்தனின் ஒரு சிறுகதையையும் சுஜாதாவின் இரண்டு சிறுகதைகளையும் 30 நிமிடங்களில் நாடகமாக நடித்துக் காட்டினர்.
சினர்ஜியா குழுவினரின் ‘தமிழுக்குத் தா’ நாடகம், தங்கம் தமிழன் எம்.எல்.ஏ. எனும் கதாபாத்திரத்தின் அரசியல் கலந்த நையாண்டி ரசிக்கத்தக்கதாக இருந்தது.
எஸ்.எஸ்.என். கல்விக் குழுமத்தின் சாரல் கூத்துப் பட்டறை, ‘கலாட்டா சம்மந்தம்’ என்னும் நகைச்சுவை நாடகத்தை நடத்தியது. சாமுவேல், ஷானு, ரீனு பாத்திரங் களின் வழியே அமையும் சுவாரஸ்யமான ஒரு காதல் பயணம் இது.
மேக்ட்ரிக்ஸ் என்னும் குழுவினர் வசனம் இல்லாமல், தங்களின் உடல்மொழி, முக பாவனை கொண்டே தற்கொலைக்குத் தயாராகும் நான்கு இளைஞர்களின் கதையை நடித்துக் காட்டினர்.
ஐந்து நாடகங்கள் அரங்கேறிய பின், பரிசளிப்பதற்காக மேடையேறிய ஒய்.ஜி.மகேந்திரன், தன்னுடைய நாடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சிறந்த நாடகம் மற்றும் சிறந்த இயக்குநருக்காக, கே.பாலச்சந்தர் நினைவுச் சுழற் கேடயத்தை, பாத்திமா பாபுவின் FAB தியேட்டர் பெற்றது. சிறந்த நடிகர்களுக்கான விருதை தியேட்டர் நிஷா குழுவின் சித்தாந்தும், எஸ்.எஸ்.என். கல்விக் குழுமத்தின் சாரல் கூத்துப்பட்டறையின் கிருஷ்ண ப்ரியாவும் பெற்றனர்.
மதியம் 3 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடந்ததால் அரங்கில் இளைஞர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேடையில் செய்துகொண்டே, இந்த நாடக விழாவைக் குறித்து அரங்கில் இருந்தவர்களிடம் கருத்து கேட்டார்கள்.
“நான் இதுவரை ஆங்கில நாடகங்கள்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இத்தனை தமிழ் நாடகங்களை இப்போதுதான் பார்க்கிறேன். ஆங்கில நாடகங்களில் நவீனம் அதிகம் இருக்கும். தமிழ் நாடகங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தன. இதுபோன்ற முயற்சிகள் அடிக்கடி நடக்க வேண்டும்” என்றார் ஒரு கல்லூரி மாணவர்.
ஆக, தமிழில் நாடகங்கள் போட்டால் இளைஞர்கள் பார்க்கமாட்டார்கள் என்னும் சிலரின் பழைய வாதத்தை ‘ஓவர்-ரூல்’ செய்தது இந்த நாடக விழா.