இளமை புதுமை

மாமதுரையை போற்றும் இளைஞன்!

கே.கே.மகேஷ்

நம்மிடம் கேமராவும் இருந்து இளமையும் இருந்தால் என்ன செய்வோம்? இயற்கையையும், நம் வீட்டுக் குழந்தைகளையும் படம்பிடிப்போம். செல்போன் கேமராவாக இருந்தால் செல்ஃபியாக எடுத்துத் தள்ளுவோம்.

மதுரை இளைஞர் அருண் தன் ஊரின் சிறப்புகளை உலகறியச் செய்ய ஒளிப்படக் கலையைப் பயன்படுத்திவருகிறார். தாயின் முகக் குறிப்புகள் மழலைக்கு புன்னகையைத் தருவதைப் போல, மதுரையின் ஒவ்வொரு இடமும் இவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது போலும். மதுரையின் அழகைப் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவந்த அவர், முத்திரை பதித்தது சித்திரைத் திருவிழா ஒளிப்படங்களில்தான்.

மிகத் தீவிரமான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் காரணத்தால் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் ஒளிப்படம் எடுக்க யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. பத்திரிகையாளர்களே ஒவ்வொரு முறையும் போலீஸ் பாஸ் வாங்கி வர வேண்டும் என்று நிபந்தனை உள்ளது.

ஆனால், இந்த ஆண்டு கோவில் ஒளிப்படக் கலைஞர் என்ற அடையாள அட்டையுடன், கோயிலின் மூலை முடுக்கெல்லாம் ஒளிப்படம் எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறது கோயில் நிர்வாகம். காரணம், அவரது முந்தைய சித்திரைத் திருவிழா புகைப்படங்கள்!

மதுரையைச் சுற்றிய கழுதைகூட வெளியே போகாது என்பார்கள் என்று சொல்லும் அவர், வெளிவீதிகளுக்கு உட்பட்ட பண்டைய மதுரையிலேயே பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்தவர். வாழ்கிறவர். அதனால் தானோ என்னவோ, மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாத மதுரை அவரது கண்களுக்கு மட்டும் காட்சியாகிறது. அதைத்தான் அவரும் ஒளிப்படமாகப் பதிவுசெய்து வருகிறார். தன்னுடைய தாத்தாவும், அப்பாவும் ஒளிப்படக் கலைஞர்கள் என்பதால் தனக்கு இயற்கையாகவே போட்டோ எடுக்கும் ஆர்வம் வந்தது என்கிறார்.

திருவிழாக்காலங்களில் ஒளிப்படம் எடுத்த அரை மணி நேரத்துக்குள் அவற்றை பேஸ்புக்கில் பதிவிட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்காகவே காத்திருக்கும் வெளியூர், வெளிநாடு வாழ் மதுரைக்காரர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு, நெஞ்சுருக நன்றி சொல்கிறார்கள். சிலர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சியைக் கண்டிப்பாக படம் எடுத்துப் போடுங்கள் என்று கேட்டதுடன், காலையிலேயே போன் செய்து ஞாபகமும் படுத்தினார்கள் என்கிறார் உற்சாகமாக. அதுதான் தனக்கு உற்சாக டானிக் என்று சொல்கிறார்.

குணா அமுதன் போன்ற சீனியர்களும் இதேமாதிரியான பணியைச் செய்கிறார்கள். இருப்பினும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை தனக்கான கௌரவமாகக் கருதுகிறார் அருண். “நான் இதுவரை எடுத்துள்ள ஒளிப்படங்கள் மிகக்குறைவுதான்.

ஆயுள் முழுக்க மதுரையின் பெருமையைச் சொல்லும் ஒளிப்படங்களை எடுக்க வேண்டும் என்பது என் ஆசை” என்கிறார் ஆர்வத்துடன் அருண்.

அருண்

SCROLL FOR NEXT