போனில் பேசிக் கொண்டிருக் கிறீர்கள். “அவரோட அட்ரஸா? சொல்றேன் எழுதிக்க” என்றதும் நமது கைகள் பரபரக்கும். அப்போதான் பேனாவையும், பேப்பரையும் தேடுவோம். கிடைக்காது. பதற்றத்தில் எரிச்சல்படுவோம். இனிமேல் அதெல்லாம் வேண்டவே வேண்டாம்.
பேப்பரில் மட்டும் அல்ல, உள்ளங்கையில், சுவரில், தரையில், பக்கத்தில் இருப்பவரின் முதுகு, எதிரில் இருப்பவர் முகம் உள்பட எதில் வேண்டுமானாலும் எழுதலாம். அப்படிப்பட்ட மாயப் பேனா தயாராகிவிட்டது.
இஸ்ரேலைச் சேர்ந்த ஓடிஎம் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் ‘ப்பிரி’எனும் அந்த மாயப் பேனாவைத் தயாரித்துவிட்டது. செல்போன், டாப்லெட்,லேப்டாப் உள்ளிட்ட ப்ளூடூத் டெக்னாலஜி உள்ள எந்த ஒரு கருவியிலும் அது இணைந்துகொள்ளும். அந்த மாயப் பேனாவை வைத்துக் குழந்தைகள் ஓவியம் வரையலாம்.
பெரியவர்கள் குறிப்புகள் எழுதலாம். பெரிய திரையில் வரைபடம் வைத்து விவாதிக்கும் பெரிய மனிதர்கள் ஒவ்வொருவரும் அதில் தங்கள் குறிப்புகளை வரைந்து விவாதத்தைத் தெளிவாக நடத்தலாம்.
ஆபீஸ்,ஒன்நோட் போன்ற மென்பொருள்களிலும் இது இணைந்துகொள்ளும்.
எதிலும் எங்கேயும் எழுதலாம். உலகமே உங்கள் பேப்பர்தான்.
சும்மா எழுதுவதற்கு மட்டுமா? அதுவே ஒரு ப்ளூடூத் ஹெட்செட். காதிலே மாட்டிக்கொண்டு பேசலாம். இசை கேட்கலாம். எஸ்எம்எஸ்களை அனுப்பலாம்.
இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மாயப்பேனா 30 கிராம் எடையில் 8.5 மில்லிமீட்டர் அகலத்தில் இருக்கும். அடுத்த வருடம் சந்தைக்கும் வருகிறது. சுமார் 12 ஆயிரம் ரூபாய் வரை விலை இருக்கலாம்.
இது பற்றி அறிய: >https://goo.gl/JItrBw