ஒரு காலை உதிப்பது போன்ற புதுத் தன்மையுடன் தினந்தோறும் புதுப்புது ஸ்மார்ட் போன்கள் வந்துகுவிகின்றன. நேற்று வாங்கிய போன் இன்று பழையதாகிவிடுகிறது. வேறு அம்சங்களைத் தாங்கி நாளை புது போன் ஒன்று வரவிருக்கிறது என்ற அறிவிப்புகள் மொபைல் வாங்குவதை ஒத்திப்போட வைக்கின்றன.
இன்று புதுசு நாளை பழசு. இதுதான் ஸ்மார்ட் போன் உலகின் ஸ்லோகம். ஒரு ஸ்மார்ட் போனில் எத்தனை நவீன அம்சங்கள் உள்ளன என்பதைவிட அதில் எவ்வளவு அம்சங்களை நாம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பல அம்சங்களைத் தொடவே மாட்டோம்.
போன் பண்ணுவோம். வாட்ஸ் ஆப் வழியே வரும் தகவல்களை ஓய்வு வேளையில் பார்ப்போம். இளைஞராக இருந்தால் முடிந்தவரை செல்ஃபி எடுத்துத் தள்ளுவோம். கேண்டி க்ராஷ், டெம்பிள் ரன் என விளையாட்டுக்களின் பின்னே குழந்தைகள்போல் ஓடுவோம். கையில் உள்ள ஸ்மார்ட் போனில் பல சிறப்பு அம்சங்களைப் பயன்படுத்துகிறோமா?
தத்கல் டிக்கெட் ஒன்று முன்பதிவு செய்ய வேண்டும். ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். சரியாக ஒன்பதரைக்கு மின்சாரம் தடைப்பட்டுவிடுகிறது. உடனே மின் வாரியத்துக்கு போன் செய்கிறோம். மின் விநியோகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்கிறார். உடனே பதற்றமாகிவிடுகிறது.
கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதில் ஐஆர்சிடிசி அப்ளிகேஷனையும் வைத்திருக்கிறீர்கள். ஆனாலும் அதில் எட்டு முதல் 12 மணி வரை முன்பதிவு செய்ய முடியாது. இந்த நிலையை எப்படிச் சமாளிப்பீர்கள்? வழி இருக்கிறது. தொழில்நுட்பம் காட்டும் வழி மொபைல் ஹாட் ஸ்பாட். அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த வசதி இருக்கிறது. அதைப் பலர் பயன்படுத்திவரலாம், பயன்படுத்தாதவர்கள் அதைத் தெரிந்துகொள்வது நல்லது.
உங்கள் ஸ்மார்ட் போனில் செட்டிங்ஸுக்குச் செல்லுங்கள். அதில் Tethering & portable hotspot என்ற வசதியைக் காணலாம். சில வகை ஸ்மார்ட் போன்களில் more என இருக்கும். அதைத் தொட்டால் இந்த வசதியைக் காண முடியும். நோக்கியா எக்ஸ் எல் போன்ற ஸ்மார்ட் போன்களில் மொபைல் டேடா அண்ட் நெட்வொர்க்ஸின் கீழ் இந்த வசதி தரப்பட்டிருக்கும். அதைத் தொட்டால் வரும் பக்கத்தில் Portable Wi-fi hotspot என்ற வரி இடம்பெற்றிருக்கும். அதனெதிரே உள்ள சிறிய சதுரப் பெட்டியைத் தொடுங்கள். அது செலக்ட் ஆகிவிடும்.
அதன் கீழே Set-up Wi-fi hotspot என்ற வரியைத் தொடுங்கள். அது விரிந்து ஒரு புதிய பக்கம் வரும். அதில் நெட்வொர்க் எஸ்எஸ்ஐடி, அதன் கீழே செக்யூரிட்டி, பாஸ்வேர்டு ஆகியவை தென்படும். இவற்றைக் குறித்துக்கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் மறைக்கப்பட்டிருந்தால் ஷோ பாஸ்வேர்டு என்னும் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களால் பாஸ்வேர்டைக் காண முடியும். இந்த வசதியை ஆன் செய்துவிடுங்கள்.
இப்போது லேப்டாப்பிலோ ஸ்மார்ட் போனிலோ வைஃபையை ஆன் செய்து கொண்டால் இந்த நெட்வொர்க் எஸ்எஸஐடியைக் காண முடியும். அதன் கீழே நீங்கள் குறித்துவைத்திருக்கும் செக்யூரிட்டி பாஸ்வேர்டை உள்ளீடு செய்துவிட்டால் போதும். வைபை வசதி கிடைத்துவிடும். உங்களது ஸ்மார்ட் போனின் வைஃபை வசதியை இப்படிப் பகிர்ந்துகொள்ளலாம். இந்த வசதியை ஏற்படுத்திக்கொண்டால் மின் விநியோகம் தடைபட்டாலும் தத்கல் டிக்கெட்டை நீங்கள் எளிதாக எடுத்துவிடலாம். பணம் கொடுத்து வாங்கும் கருவியில் இருக்கும் இப்படியான வசதிகளை அனுபவித்து மகிழ்வோம்.