நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைவிட இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் நடிகர் சல்மான் கானின் வழக்குதான். நடந்த சம்பவம் எல்லோருக்கும் அத்துப்படியாகத் தெரியும். 2002-ல் குடிபோதையில் சல்மான் கான் ஓட்டிச்சென்ற கார் நடைபாதையில் தூங்கியவர்களில் ஒருவரான நூருல்லா முகமது ஷரீப் மீது ஏறியதால் அவர் பலியானார். நால்வர் காயமடைந்தனர்.
சல்மான் கான் தப்பி ஓடினார். அவருடன் பயணித்த கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டில் விபத்து குறித்துச் சாட்சி அளித்தார். அதன் பின்னர் ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போனது. அவர் 2007-ல் காச நோயால் கேட்பாரற்றுக் கோரமாக இறந்துபோனார். விபத்து தொடர்பான அத்தனை சாட்சியங்களையும், ஆவணங்களையும் சல்மான் கானும் அவருடைய ஆதரவாளர்களும் சிதைக்க முற்பட்டனர்.
எல்லாவற்றையும் மீறி குற்றம் நிரூபிக்கப்பட்டு, சல்மான் கானுக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்கு முன்பாக அது எப்படி அமையும் என்பது தொடர்பாக இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீர்ப்பு வெளியானதும் ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒப்பாரி வைத்தது. பாலிவுட்டின் மற்ற கான்கள் நேரடியாக சல்மான் கான் வீட்டுக்குச் சென்று தைரியம் அளித்தனர். நடிகர், நடிகைகள் சோகத்தில் மூழ்கினர். சமூக வலைத்தளங்களில் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.
ஏழைகள் நாய்களா?
“நாங்கள் வறுமையில் வாடுகிறோம். சல்மான் கானுக்குத் தண்டனை கிடைப்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு இழப்பீடு வேண்டும்” என சல்மான் கான் கார் ஏறியதில் உயிரிழந்த நூருல்லாவின் மனைவியும், காயமடைந்தவர்களில் ஒருவரான அப்துல்லா ஷேக்கும் கூறினர். அந்த எதிர்வினைக்கு சல்மான் கான் மவுனம் சாதித்தார். ஆனால் பொங்கி எழுந்த பாலிவுட் பின்னணி பாடகர் அபிஜித்தும் பிரபலத் தங்க நகை டிசைனர் ஃபராகான் அலியும், “நடைபாதைகளில் படுத்துத் தூங்குவோர் நாய்கள்.
விபத்தில் அவர்கள் இறந்தது சரியே. இதற்காக டிரைவரைத் தண்டிப்பது சரியல்ல. இவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது…” என வாய்க்கு வந்தபடி பேசினார்கள். இதே கருத்தை வேறு கோணத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகக் கூறினார் இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி.
மறுபுறம் “தண்டனை சேதி கேட்டு இதயமே நொறுங்கியது போல உணர்ந்தேன்” எனத் தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி அழுதார். கான் என்பதாலேயே அவருக்கு இப்படியொரு அநீதி இழைக்கப்படுகிறது என்று பிதற்றினார்கள் சல்மானின் சில ரசிகர்கள்.
குற்றம் குற்றமே
தண்டனைத் தீர்ப்பு வந்த அன்றைக்கே சல்மான் கானின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, கையோடு ஜாமீன் அளித்தது நீதிமன்றம்.
இந்த விவகாரத்தில் இளைஞர்களின் மனநிலை என்ன எனப் பார்க்கலாம்...
“நான் சல்மான் கானின் தீவிர ரசிகைதான். அதற்காக அவர் என்ன செய்தாலும் அதை நான் ஆதரிக்க மாட்டேன்” எனக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சைனப் அலிகான். அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தால்தான் சினிமாத் துறையினர் பலர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் எனவும் அவர் சாடுகிறார்.
உயிருக்கு ஏது இழப்பீடு
“முதலில் குற்றத்துக்குப் பொறுப்பேற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சல்மான் கான் இழப்பீடு அளிக்க வேண்டும்” என்கிறார் சித்தூரைச் சேர்ந்த சக்தி லோகேஷ்.
ஆனால் எவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்தாலும் உயிருக்கு விலை கிடையாது. ஆகக் குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அளிக்கப்பட வேண்டும். அவரை ஆதரிப்பவர்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே என ஆவேசப்படுகிறார் மும்பையைச் சேர்ந்த எம். தீபாலி.
சல்மான் கான் நல்லவர், அவருக்கா இப்படியொரு கஷ்டம் எனப் பேசுபவர்கள் முட்டாள்கள் அல்லது சுயநலவாதிகள் என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக். “ஒரு பிரபலம் என்பதால்தான் இவ்வளவு ஆதரவு. ஒரு சாமானியர் ஒரு பிரபலத்தை விபத்தில் கொன்றிருந்தால் இதே மக்கள் குரல் என்னவாக இருக்கும்?” என கேட்கிறார் கார்த்திக்.
சினிமா மோகத்தின் உச்சம்
ஒரு குற்றம் நிகழ்ந்தவுடன் விசாரணைக்கு உட்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக வருடக் கணக்கில் அந்த வழக்கு இழுத்தடிக்கப் படும்போதே அங்கு நீதி சிதைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பணம் படைத்தவராக இருந்தால் எதுவுமே தப்பில்லை எனும் மனநிலை பரவிவருவதை இது காட்டுகிறது. இது மிகத் தவறான உதாரணம் என வருத்தம் கொள்கிறார் சென்னையில் மென் திறன் பயிற்சியாளராக வேலைபார்க்கும் ஜெய.
சினிமா மோகத்தின் உச்சக்கட்டமே சல்மான் கானுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் அனுதாபம் எனத் தோன்றுகிறது. சினிமாத் துறையினர் வெவ்வேறு காரணங்களுக்காக அவரை ஆதரிக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் படம் தயாரிக்க வேண்டும் அவர்களுக்கு. ஆனால் ரசிகர்கள் வெறும் பைத்தியக்காரர்கள் எனப் பொரிந்து தள்ளுகிறார் தஞ்சையைச் சேர்ந்த அன்பு நாதன்.
இறந்துபோன நூருல்லா மெஹ்பூப் கானின் மனைவிக்கு 10 லட்சம் ரூபாயும், கால் முறிந்துபோன அப்துல்லா ரவுத் ஷேக்கிற்கு மூன்று லட்சமும், காயமடைந்த மற்றவர்களுக்குத் தலா ஒன்றரை லட்சமும் சல்மான் கான் கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இறந்துபோன நூருல்லாவின் மனைவியிடம் திருமணத்துக்கான சான்றுகள் இல்லாததால் அவருக்கு இன்னமும் இழப்பீடு போய்ச் சேரவே இல்லை. ஆனால் அதெல்லாம் நம்முடைய கவலைப் பட்டியலில் இல்லையே!