இளமை புதுமை

பென்சிலும் கேமராவும் சேர்ந்தால்

ம.சுசித்ரா

ஒரு சாதாரண கேன்வாஸ் காகிதத்தில் வரையப்பட்ட ஓவியம்தான். ஆனால் அது உங்களைப் பார்த்துத் தாவிக் குதிக்கும்! ஏனென்றால் அது வெறும் ஓவியம் அல்ல. ஓவியக் கலையும், ஒளிப்படக் கலையும் கலந்த கலவை. கற்பனையும், யதார்த்தமும் கை கோக்கும் தருணம். பென்சிலும், கேமராவும் கண்ணாமூச்சி ஆடும் விளையாட்டு. அந்தப் படத்துக்குள் அவர் இருக்கிறாரா அல்லது அவருக்குள் அந்த படம் இருக்கிறதா? தெரியாது.

இதில் எது நிஜம், எது கற்பனை? புரியாது. பரிமாணங்கள் குறித்த நம் புரிதல்கள் அத்தனையும் கவிழ்ந்து விழும் ஆப்டிகல் இல்யூஷன் வகையைச் சேர்ந்தவை இந்தப் படங்கள். ஒரு படத்தில் கேமரா கொண்டு படம் எடுப்பதுபோலத் தன்னைத் தானே வரைந்திருக்கிறார் படத்தில் காணப்படும் நபர். பென்சில் ஓவியத்துக்கு எதிரில் ஒரு ராட்சச பென்சிலைக் கையில் பிடித்தபடி அவரே உட்கார்ந்திருக்கிறார்.

13 அடி நீளம் 10 அடி அகலமுள்ள பிரம்மாண்டமான கேன்வாஸ் காகிதத்தில் இந்தப் படம் வரையப்பட்டுள்ளது. நிஜமான அவரும், அவர் வரைந்த ஓவியமும் சேர்த்து ஒளிப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அசாத்தியமான இத்தகைய 3டி ஓவியங்களை கரித் துண்டுகள் மற்றும் பென்சில் கொண்டு வரைபவர் பென் ஹேன்.

ஃபரிடா கலோ, வான் காக் போன்றவர்கள் சுய உருவச் சித்திரங்களை வரைந்து ஓவிய வரலாற்றைப் புரட்டிப்போட்டவர்கள். அப்படி பட்டவர்களைக் கடந்த கால சரித்திரமாக மட்டுமே காண முடியும் என்னும் ஏக்கத்தைத் தீர்க்க வந்த அற்புத நிகழ்காலக் கலைஞன் பென் ஹேன்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த பென் ஹேன் இதழியல் பட்டதாரி. ஓவியம், டிஜிட்டல் ஒளிப்படக் கலை, பியானோ மற்றும் டிரம்ஸ் போன்ற இசைக் கருவிகளும் கற்றுத் தேர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக பல கலைகளை ஒருங்கிணைத்து அவர் வரைந்த ஓவியங்கள் ஐரோப்பா முழுவதும் பேசப்படுகின்றன. சமீப காலமாக அவர் ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அதற்கு முக்கியக் காரணம் பென்சில் Vs கேமரா (Pencil Vs Camera) என்ற பெயரில் 2010 முதல் அவர் வரைந்து வரும் தொடர் ஓவியங்கள்.

வரைதல் மற்றும் ஒளிப்படக் கலை இரண்டையும் எப்படி இணைத்துப் பார்க்கத் தோன்றியது எனக் கேட்பவர்களிடம், “ஒரு ஓவியனாக மட்டும் இருப்பது அல்லது ஒளிப்படக் கலைஞனாக மட்டும் இருப்பது. இந்த இரண்டு நிலையும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆகையால் இவ்விரண்டையும் இணைத்தால் எப்படி இருக்கும் என யோசிக்கத் தொடங்கினேன். விளைவு பென்சில் Vs கேமரா எனும் புதிய பாணி” எனக் கூறுகிறார் பென்.

பென்னுடைய அத்தனை ஓவியங்களிலும் அவருடைய கை விரல்கள் காணப்படும். பார்வையாளர், கலைஞர், கலைப் படைப்பு இவை மூன்றையும் இணைக்கும் புள்ளி அது. 2012 முதல் பெனின் பென்சில் Vs கேமரா பாணி பல ஸ்மார்ட் போன்களின் முகப்பு படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT