இளமை புதுமை

அன்பின் வழி எது?

எஸ்.வி.வேணுகோபாலன்

அது நடந்து முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டிருக்கும். என் வாழ்க்கையில் முதன்முறையாக கும்மிடிப்பூண்டி தாண்டி வடக்கே வெகு தூரம் பயணம் செய்து வாரணாசிக்குச் (காசி) சென்றேன். மாணவர் இயக்க மாநாட்டுப் பிரதிநிதியாகத் தமிழகத்திலிருந்து சென்ற குழுவில் நானும் ஒருவன். தெரியாத ஊர். மொழியோ அறவே தெரியாது. மதன் மோகன் மாளவியா பல்கலைக் கழகத்தின் பிரம்மாண்டமான மைதானத்தில் ஷாமியானா பந்தலில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கியிருந்தோம்.

மாநாடு முடிந்த அன்று இரவு அங்கேயே தங்கிக் காலையில் நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் புறப்பட ஏற்பாடு. விடியற்காலை கண் விழித்தபோது அருகே உட்கார்ந்துகொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்த உள்ளூர் தொண்டர் ஒருவர் இந்தியில் ஏதோ சோகத்தோடு பேசினார். அவர் கண்கள் கதறி அழக் காத்திருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. அருகே இருந்த இன்னொரு அன்பர் மொழிபெயர்த்துச் சொன்னபோது பெரு வியப்பு ஏற்பட்டது.

மூன்று நாட்கள் இராப்பகல் கண் இமைக்காது சேவை செய்து கொண்டிருந்த தொண்டர்களில் ஒருவரான அவரை அதிகம் போனால், இரண்டு மூன்று முறை பார்த்திருக்கக் கூடும். அவ்வளவுதான். அவரால் என்னை மறக்க முடியவில்லையாம். பிரிவின் துயரம் தாளாது எனது முகவரியாவது தந்துவிட்டுப் போகுமாறு கேட்கக் காத்திருக்கிறாராம். பல மாநிலங்களிலிருந்தும் பல நூறு பேர் கலந்து கொண்ட பெரிய திருவிழா அது. அவ்வளவு பெரிய ஜனத்திரளில் என்னை மட்டும் எப்படி இத்தனை நேசிக்கப் போயிற்று? மொழி தெரியாவிட்டாலும், தொண்டர் பணியில் இருந்தோரைச் சாப்பிட்டீர்களா, உறங்கப் போகவில்லையா, உங்களுக்கு ஏதாவது உதவலாமா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்த சிலரில் நானும் ஒருவன். அது அவரைக் கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன். புன்னகையோடு நன்றி தெரிவித்துவிட்டு, முகவரியை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு விடைபெற்றேன். அன்பு நிறைந்த அந்தப் பெரிய கண்கள் இன்னும் நினைவில் மிதக்கின்றன.

காசி எங்கே, சென்னை எங்கே; ஆயிரம் மைல் தொலைவு வித்தியாசம் அல்லவா, அவர் எங்கே இங்கு வரப் போகிறார் என நினைத்து ஊர் திரும்பியாயிற்று. ஆனால், மாதம் ஒரு அஞ்சலட்டை அவரிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவர் பெயர் சந்தோஷ். உடைந்த ஆங்கிலத்தில் அந்தச் சிறிய அஞ்லட்டையில் பெருக்கெடுத்தோடிய அவரது அன்பு திக்குமுக்காட வைத்தது. இப்படியே சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் திடீரென நான் வசிக்கும் எனது தாய்மாமன் வீட்டின் முன்னால் வந்து நின்றார் அவர். ஆடிப் போன எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் எல்லோரும் வெளியூர் சென்றிருந்த நேரம். கல்லூரி மாணவனான என்னிடம் கையில் பெரிய காசுமில்லை. அண்ணன் கொடுத்த சிறிய தொகையோடு அவரை வெளியே அழைத்துப் போய் உபசரித்துவிட்டு, காமராசர் இல்லம், வேகாத வெயிலில் மெரினா கடற்கரை என இரண்டு மூன்று முக்கிய இடங்களைச் சுற்றிக் காட்டிய பின் பரிதாபாக நான் நின்றபோது, என்னைப் பார்க்கத்தான் வந்ததாகவும், வேறு ஒன்றுமில்லை என்றும் சொல்லிவிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் போகலாம் என்றார். ரயில்வே பாஸ் வைத்திருந்த அவரை அன்று பிற்பகல் புறப்பட்ட ரயில் ஒன்றில் வழியனுப்பிவிட்டு மீண்டேன்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர் பொழிந்த அன்பைச் சரிவிகிதத்தில் அவர்பால் வெளிப்படுத்த முடிந்ததா, என்ற கேள்வி இன்றும் என்னுள் சுழன்றுகொண்டே இருக்கிறது.

SCROLL FOR NEXT