கவரும் வகையில் ஆங்கிலத்தில் பேசத் தெரியாது, சாதாரண உடை, மிகச் சாமானிய தோற்றம். ஆனாலும், அச்சிறுவர்களின் உரையை ஆர்வமாகக் கேட்கிறார்கள் கட்டிடக் கலைக் கல்லூரி மாணவர்கள். திருச்சி, சென்னை உட்பட பல நகரங்களில் கண்காட்சி நடத்துவதுடன் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும் அவர்கள் புதுச்சேரி அருகேயுள்ள கிராமப் பகுதியான சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.
குப்பையில் தூக்கி எறியும் கழிவுப் பொருட்களைக் கலைப் பொருட்களாக மாற்றுவதுதான் இக்கிராமச் சிறுவர்களின் சிறப்பம்சம். விநாயகர், பாய்மரக் கப்பல், சைக்கிள், விலங்குகள் தொடங்கி நகைகள்வரை உருவாக்கி அசத்துகின்றனர்.
திருச்சி, சென்னையில் தனியார் கட்டிடக் கலைக் கல்லூரிகள், புதுச்சேரியில் பல்கலைக்கழக மாசுகட்டுப்பாட்டுத் துறை, புதுச்சேரியில் பல தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்குச் சென்று கலை வகுப்புகள் எடுக்கிறார்கள் அரசுப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்களான ராகேஷ், மகேஸ்வரன், தமிழ்ச்செல்வன், ராகுல்காந்தி, முருகன் மற்றும் 8-ம் வகுப்பு சீனிவாசன் ஆகியோர். இவர்கள் அனைவரும் புதுச்சேரி கிராமப் பகுதியிலுள்ள சேலியமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கற்கும் ஆர்வம் கொண்ட இவர்களுக்குச் செலவு செய்யும் குடும்பச் சூழல் இல்லை. அப்போது நுண்கலை ஆசிரியரான உமாபதி இவர்கள் ஊரில் பயனற்றுக் கிடக்கும் தென்னை குருத்து, பனை ஓலை எனச் சாதாரண பொருட்களில் இருந்து பொம்மை செய்யக் கற்றுத் தந்துள்ளார். அதிலிருந்து பல பொருட்களைச் சிறுவர்களே உருவாக்கத் தொடங்கினார்கள். பல இடங்களில் கண்காட்சி நடத்தியுள்ளார்கள். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இவர்களிடம் பொருட்களை விலைகொடுத்து வாங்கியதுடன் மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள்.
இதைத் தங்களால் மறக்கவே முடியாது என்கிறார்கள் மாணவர்கள். முதலில் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி கிடைத்திருக்கிறது. அதையடுத்து திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் கல்லூரிகளில் கட்டிடக் கலை படிக்கும் மாணவர்களிடம் தங்கள் திறனை வெளிப்படுத்தும் கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார்கள்.
முதலில் கல்லூரிக்குச் சென்ற போது மேடையில் ஏறக் கூச்சமாக இருந்தது எனச் சொல்லும் மாணவர்கள், அதையடுத்து மிகச் சாதாரணமாகப் பேசத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்கள். “சாதாரணப் பொருளைக் கொண்டு கலைப் பொருட்களைச் செய்வதால் பலரும் பாராட்டுகிறார்கள். பள்ளியில் படிக்கும்போதே கல்லூரிகளுக்கெல்லாம் போய்ப் பேசுவதால் எங்க ஸ்கூல் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும்தான் ரொம்ப சந்தோஷம்” என்று உற்சாகப்படுகிறார்கள் இந்த மாணவர்கள்.
திருச்சி கண்காட்சியில் பல படைப்புகளைப் பலரும் ஆர்வத்துடன் வாங்கி மாணவர்களைக் கவுரவித்தது அவர்கள் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் சரியான அங்கீகாரம் என்றார் இப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றும் உமாபதி. படைப்புகளைப் புத்தகமாக வெளியிட ஓவியர் மருது ஆலோசனை தெரிவித்துள்ளார். அதைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.
பள்ளியைச் சுற்றி இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் உதவியுடனேயே இந்தக் கலைப்பொருட்களை உருவாக்குகிறார்கள். பெண்களைக் கவரும் ஆபரணங்கள், விலங்குகள், கலைப் பொருட்கள், கடவுள்கள் என டிசைன் செய்தும் அசத்தியுள்ளார்கள். டிசைன் செய்வதிலும், கற்பனையில் புதிய படைப்புகளை உருவாக்குவதிலும் தன்னால்கூடத் தன் மாணவர்களுடன் போட்டியிட முடியாது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் உமாபதி. “பலருக்கு ஆர்க்கிடெக் படிக்க வாய்ப்பு தருவதாக இப்போதே பல கல்லூரிகளில் உறுதி தரத் தொடங்கியுள்ளதே அவர்களின் திறமைக்குச் சான்று” என்கிறார் பெருமிதப் புன்னகையுடன்.
படங்கள் : எம். சாம்ராஜ்