இளமை புதுமை

ஒலிம்பிக்கை நோக்கி இரண்டு பேர்

வி.சீனிவாசன்

ஒவ்வொரு வீராங்கனையின் கனவு - கேத்தன் பிரீத்தி

சேலம், ஹோலி ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார் கேத்தன் பிரீத்தி. 13 வயதில் காலடி எடுத்து வைத்துள்ள கேத்தன் பிரீத்தி மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வாங்கியவர். இருப்பினும் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய அவர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய அளவிலான ஓப்பன் பிரிவு நீச்சல் போட்டியில் 25 வயது வரையிலான நீச்சல் வீரர்களுடன் கலந்து கொண்ட போட்டியில் பங்கேற்று ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

“ஏழு ஆண்டுகளுக்கு முன், தேக்கடியில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்தில் சிக்கி, பயணிகள் பலர் இறந்தனர். இந்தச் செய்தியை அறிந்த எனது தந்தை நீர்நிலைகளில் தற்காத்து கொள்ளக்கூடிய வகையில் நீச்சல் பயிற்சியில் என்னைச் சேர்த்து விட்டார். தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி எடுக்கிறேன். ஒவ்வொரு நீச்சல் வீராங்கனைக்கும் ஒலிம்பிக் கனவு இருக்கும். எனக்கும் தங்கம் வெல்ல ஆசை” என்கிறார்.

அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன் - அஸ்வின் ரோஸ்

சேலம், குளூனிமெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி யான அஸ்வின் ரோஸ் முகத்தில் பூரிப்பு பொங்கிவழிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தேசிய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளி பதக்கத்துடன் ஊர் திரும்பியுள்ளார். அஸ்வின் ரோஸ் உற்சாகம் பொங்கிட இந்தப் பதக்கத்தை மறைந்த தந்தை செல்வநாதனுக்கு அர்ப்பணிப்பதாக கூறுகிறார்.

இவரது சகோதரி ஏஞ்சலா ரோஸ், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்று, மருத்துவ கல்லூரியில் விளையாட்டு பிரிவில் இடம்பிடித்தவர். தந்தை செல்வநாதன், கால்பந்து விளையாட்டு வீரர். அவர் அளித்த ஊக்கம்தான் இருவரையும் இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

“ஏழு ஆண்டுகளாக பள்ளி வகுப்பறை விட்டதும், நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 14 வயது பிரிவில் தேசிய அளவில் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றேன். ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே லட்சியம்” என்கிறார் அஸ்வின் ரோஸ்.

படங்கள்: எஸ்.குருபிரசாத்

SCROLL FOR NEXT