இளமை புதுமை

ஜில் மலை ஏற்றம்

விக்கி

இமயமலை ஏற்றத்துக்குச் சிறந்த வழிகாட்டி யூத் ஹாஸ்டல் அசோசியேஷன்தான். பல மலையேற்றத் திட்டங்களை இவர்கள் சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துகிறார்கள். ஜம்மு மற்றும் காஷ்மீர், டார்ஜிலிங் போன்ற பல பயணத் திட்டங்கள் உண்டு. பத்து நாட்களைக் கொண்ட சர் பாஸ் என்ற திட்டம்தான் பெரியது. இதற்கு கசோல் முகாமிலிருந்து கிளம்ப வேண்டும்.

கசோல் முகாம்

இது கிட்டத்தட்ட ராணுவ முகாம் மாதிரிதான். இந்த முதன்மைப் பயிற்சிகள், மலை ஏற உறுதுணையாக இருக்கும். மலை மேல் ஏற, ஏற ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முகாமில் தங்க வேண்டும். ஆனால் அங்கெல்லாம் இந்தப் பயிற்சிகள் கிடையாது.

வழிகாட்டி

ஒவ்வொரு நாளும் சுமார் ஐம்பது பேர் கொண்ட குழு கிளம்பும். ஒவ்வொரு குழுவுக்கும் முன்னே ஒன்று, கடைசியில் ஒன்று என இரண்டு வழிகாட்டிகள் வருவார்கள். கூடவே பழக்கப்பட்ட நாய்களும் வழி தவறிவிடாமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். இரண்டாவது நாளே கிராமங்களைத் தாண்டி, மனிதர்கள் அற்ற வனப்பகுதி வந்துவிடும்.

அனுபவம் புதுமை

ஒவ்வொரு நாளும் மண், சேறு, வனத்தோட்டம், பச்சை போர்த்திய மலை, பனி மூடிய மலை, வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற பளிங்கு நீர், பாறைகளுக்கு இடையே ஒற்றையடிப் பாதை, இடையிடையே தார் சாலை, அதில் நடந்து செல்லும் வர்னோ ஆடுகள் என்று இடங்கள் ஒவ்வொன்றும் வர்ணஜாலம் காட்டும்.

இன்ப அதிர்ச்சி

ஒவ்வொரு முகாம் தளத்திலும் கேண்டீன் உண்டு. தங்குவதற்கு டெண்ட் உண்டு. கிராமங்கள் இல்லாத பகுதிகளில், பளிங்கு போல் இருக்கும் பனி உருகி ஓடி வரும் நதி நீரை அள்ளி அப்படியே குடிக்கலாம்.

ரக்சாக்

மலையேறு பவர்களுக்கான பிரத்யேக பை ரக்சாக், கசோல் முகாமில் கிடைக்கும் இந்தப் பையில் மலைகளில் ஏற வசதியாக டிராக் சூட், ஷூ, இள வெயிலைத் தாங்க தொப்பி, கூலிங் கிளாஸ் என அனைத்தையும் `பக்கா` வாக வைத்துக் கொள்ளலாம்.

இயற்கையின் தாலாட்டு

சில் வண்டுகளின் ரீங்காரம். காது மடலை உறையவைக்கும் குளிர் காற்று, கைக்கெட்டும் தூரத்தில் காணப்படும் நிலவின் முழு ஒளி, குளுமைக்குக் குளிர் சேர்க்கும். அமைதியின் அழகு. மெளனத்தின் ஏகாந்தம். வாழ்நாளில் அனுபவித்தறியாத ஆனந்தம்.

முகாம்கள்

கோராதாட்ச் முகாம். இது சுமார் 10,000 அடி உயரத்தில் இருக்கிறது. அதனையடுத்து ஷிர்மி முகாம். சுமார் 11,000 அடியில் அமைந்துள்ளது. இம்முகாம்களை அடைய கடந்து வந்த பாதை எல்லாம் கல்லும், மண்ணும் கலந்து இருந்த மலைப்பாதை. சுமார் 12,500 அடி உயரத்தில் அமைந்துள்ள டில்லா லோட்னி முகாமை அடைந்தால், சுற்றிலும் பனி மலை சூழ்ந்து இருக்க, சுரீர் எனக் குத்தும் பனிக்காற்று தாலாட்டும்.

சர் பாஸ் சிகரம்

பச்சைப் போர்வை போர்த்தி இருந்த மலை, திடீரென்று பனி என்னும் வெள்ளைப் போர்வை போர்த்திக் கொள்கிறது. காட்சி அழகில் தன்னை மறந்தால் தடுக்கி விழ வேண்டியதுதான். பனியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி மலை ஏறினால் சர்பாஸ் சிகரம்.

இயற்கை கொஞ்சும் மலைத் தொடரை சுமார் பதினாலாயிரம் அடி உயரத்தில் இருந்த சிகரத்தில் இருந்து பார்ப்பது ஆனந்தம். கண்ணால் அள்ளிப் பருகிய இயற்கை அழகு மனதில் நிறைகிறது.

மேலும் விவரங்களுக்கு >www.yhaindia.org

படங்கள்: கிருஷ்ணக்குமார்

SCROLL FOR NEXT