ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் ஆரோக்கிய மாநாட்டில் “எங்கள் நாடுகளின் நிகழ்காலமும் நாங்கள்தான், எதிர்காலமும் நாங்கள்தான். அதனால்தான் எங்கள் குரலை எங்கள் உரிமைகளுக்காகப் பயன்படுத்துகிறோம்” என்று உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார் எமிலின் கேப்ரெரா. கவுதமாலாவிலிருந்து பங்கேற்க வந்திருந்த அவருக்கு 15 வயது.
1996வரை உள்நாட்டுப் போர்களால் மிகவும் சீர்குலைந்திருந்த நாடாக கவுதமாலா இருந்தது. எங்கும் வறுமை; கல்வியறிவின்மை; பெண்கள் கல்வி கற்பதில்லை. அப்படியே கற்றாலும் 13, 14 வயதில் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.
16 வயதுக்குள் ஒரு குழந்தைக்குத் தாயாகிவிடுவார்கள். போதிய ஊட்டச்சத்தின்மை, மருத்துவம் இல்லாமல் ஏராளமான பெண்கள் உயிரிழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளும் இந்நாட்டில் அதிகம்.
எமிலினும் எல்பாவும்
கவுதமாலாவில் மகளிர் கல்வி மற்றும் தன்னிறைவுக்காகச் சில தன்னார்வ அமைப்புகள் கவுதமாலாவில் இயங்கிவருகின்றன. எமிலினும் அவருடைய தோழி எல்பாவும் தங்கள் 12 வயதில் ‘லெட் கர்ல்ஸ் லீட்’ (Let girls lead) அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்களைத் திரட்டினர்.
2013-ல் பெண்கள் முன்னேற்றம் குறித்த ஒரு கூட்டம் உள்ளூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எமிலின், மேயரிடம் தங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொன்னார். ஒரு சிறுமி தன் எதிரில் நின்று கேள்வி கேட்பதை அந்த மேயரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கலகலவெனச் சிரித்தார். தன்னுடைய நேரத்தை வீணாக்கிவிட்டதாகவும் கோபப்பட்டார்.
மனம் தளராத தோழிகள்
எமிலினும் அவருடைய தோழியும் கொஞ்சமும் கலங்கவில்லை. தங்களுடைய வேலைகளில் கூடுதல் அக்கறை செலுத்தினார்கள். தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள். இந்தச் சிறு பெண்களின் முயற்சிகளை வெளியுலகுக்குத் தெரிவிக்க முன்வந்தார் ஆவணப்பட இயக்குநர் லிசா ரஸ்ஸல்.
‘பாடர்’ (poder) என்ற தலைப்பில் ஏராளமான பெண்களின் கதைகள் இப்படத்தில் பதிவுசெய்யப்பட்டன. வெறும் பிரச்சினைகளை மட்டும் காட்சிப்படுத்தாமல், இன்று கவுதமாலா பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் அழகாக எடுத்துக் காட்டியது இந்தப் படம். கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
மாற்றங்களை ஏற்படுத்திய படம்
இந்த ஆவணப்படத்தை அரசாங்க அதிகாரிகள் பார்த்தனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் இப்படத்தின் பிரச்சினை பேசுபொருளானது. படிப்படியாக அரசாங்கம் பெண்களின் பிரச்சினைகளுக்குச் செவிகொடுக்க ஆரம்பித்தது. இன்று பெண்களின் கல்விக்கும் ஆரோக்கியத்துக்கும் அரசு நிதி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
எமிலினுக்கு அழைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கவனத்துக்குச் சென்றது ஆவணப்படம். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த மாநாட்டில் எமிலின் பங்கேற்று, உரையாற்றும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
முதல் முறையாக விமானம் ஏறினார் எமிலின். நியூயார்க்கில் நடந்த மாநாட்டில், தென் அமெரிக்கத் தொல்குடிகளான மாயன் இனத்தவர்கள் அணியும் பிரத்யேக சட்டையை அணிந்துகொண்டார். இது அவரே வடிவமைத்தது. ஏராளமான பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கு முன்னால் ஸ்பானிய மொழியில் உரை நிகழ்த்தினார்.
“உலகம் முழுவதும் இருக்கும் பெண்களுக்காகத்தான் நான் பேச வந்திருக்கிறேன். பெண்களுக்குக் கல்வி அளிப்பதன் மூலம் குடும்பங்களை மட்டும் அல்லாது நாட்டையே உயர்த்த முடியும். தலைமைப் பண்புகள் இயல்பாகவே பெண்களிடம் இருக்கின்றன. அதிகாரங்களை வழங்கினால் சமூகத்தையே மாற்றக்கூடிய சக்தி பெண்களுக்கு இருக்கிறது. அதற்கு நாங்களே உதாரணம்.
பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள். பெண்களின் முயற்சியில் இந்த உலகம் ஆரோக்கியமான மாற்றத்தைச் சந்திக்கும்” என்று கம்பீரமாக உரையாற்றி முடித்தார் எமிலின். 15 வயதாகும் எமிலின் அவரது சக வயது தோழிகளைவிட வித்தியாசமானவராக இருக்கிறார். தற்போது எமிலினின் எதிர்கால லட்சியம் என்னவென்று அவரிடம் கேட்டால் அவரது திட்டங்கள் வியப்பிலாழ்த்தும்.
“முதலில் எங்கள் மக்களின் தலைவராக வேண்டும். பிறகு எங்கள் நாட்டின் அதிபராக வேண்டும். அப்போதுதான் குழந்தைகள், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர்களை முன்னேற்ற முடியும்” என்கிறார் லட்சியப் பெண் எமிலின்.