மாணவர் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மதுரையைச் சேர்ந்த கோபி ஷங்கர் ஒரு உதாரணம். மதுரையில் இருந்தபடியே, டெல்லியில் உள்ள ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் இருந்த விதியை மாற்றியிருக்கிறார் கோபி.
என் இடம் எங்கே?
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்ததும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அழகியல் மற்றும் நுண்கலை பட்டப்படிப்பில் சேர முடிவெடுத்த இவர், அதற்கான முயற்சியில் இறங்கினார்.
அப்போது விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்துள்ளது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துப் படிப்பில் சேர விரும்பவில்லை. அதன் பிறகு நடந்ததைச் சொல்கிறார் கோபி.
“பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நான், அது தொடர்பாகப் பல பல்கலைக்கழக கருத்தரங்குகளிலும் பேசியிருக்கிறேன். 2 வருடங்களுக்கு முன், கல்கத்தா அருகே ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது, அங்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டது. கல்வி தொடர்பாக மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினையை அந்த மாணவர்களிடம் தெரிவித்தேன்” என்கிறார் உற்சாகமாக.
தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் அக்பர் சௌத்ரி, செயலாளர் பிரவின் ஆகியோரைத் தொடர்புகொண்டார் கோபி. தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க 4 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வந்துவிட்ட நிலையைச் சுட்டிக்காட்டினார். நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்னமும் 3-ம் பாலினத்தவருக்கான உரிமை மறுக்கப்படுவது வேதனை தருகிறது என முறையிட்டார்.
மாணவர் சக்தி
அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் அதிர்வலைகள் எழுந்தன. “மாணவன் என்ற விசிட்டிங் கார்டு போதும், உலகின் எந்த மூலையிலும் உள்ள மற்றொரு மாணவனைத் தொடர்புகொள்ள. அவர்கள் மனப்பூர்வமாக உதவுவார்கள். என் பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்த மாணவர் பேரவை நிர்வாகிகள், பல்கலைக்கழக கல்விக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர். அதன் பின்னரும், கோரிக்கை நிறைவேறாததால் மாணவர் பேரவை சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து இந்த (2015-16) கல்வியாண்டு முதல் விண்ணப்பப் படிவத்தில் ஆண், பெண்ணைத் தவிர, பிறர் என்ற வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதன் காரணமாக, நான் மட்டுமின்றி நிறைய மாணவர்கள் தங்கள் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று பெருமையாகச் சொல்கிறார் கோபி ஷங்கர்.
பேஸ்புக்கில் எதிரொலி
மூன்றாம் பாலினத்தவருக்காக ‘சிருஷ்டி மதுரை’ என்ற அமைப்பை நடத்தி வரும் கோபி, மனித இனத்தில் ஆண், பெண்ணைத் தவிர 25 வகைப் பாலினங்கள் இருப்பதாக ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பாலினங்களுக்கு பால்நடுனர், இருனர், முழுனர், பாலிலி என்று தமிழிலேயே பெயரும் சூட்டியுள்ளார். இவரது முயற்சியால் தற்போது ஆண், பெண் தவிர இந்த 25 வகைப் பாலினங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் வசதி பேஸ்புக்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெற்றிக்கான அங்கீகாரம் எங்கே?
பால் புதுமையினர் பற்றி உலகின் பல நாட்டுப் பல்கலைக்கழகங்களின் 85 செமினார்களில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ள இவருக்கு விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் இருக்கிறது. தமிழகத்தில் சர்வதேசத் தரத்துடன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தான் சார்ந்துள்ள சிருஷ்டி அமைப்பின் சார்பில், மத்திய விளையாட்டு அமைச்சர் முதல் செயலாளர் வரை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
காரணம் கேட்டால், “அண்டை மாநிலமான கேரளத்தில் மத்திய, மாநில அரசுகளின் விளையாட்டுப் பயிற்சி மையங்கள் மாவட்டத்திற்கு மூன்று நான்கு உள்ளன. ஆனால் தமிழகத்தில் மிகக்குறைவாக இருப்பதால், விளையாட்டுத் துறையில் தமிழ்ப் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. எனவே தான் இந்த மையத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். விளையாட்டுத் துறையின் பக்கம் என் கவனம் திரும்புவதற்கு, சாந்தி சௌந்தரராஜன்தான் காரணம்” என்கிறார்.
ஆசிய அளவிலான தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்ப்பெண் தான் சாந்தி. தேசிய அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சர்வதேச போட்டிகளில் 11 பதக்கங்களையும் வென்ற சாந்தி, 2006ல் தோஹாவில் நடந்த ஆசிய அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற பிறகு பாலியல் அடையாளச் சர்ச்சையில் சிக்கினார்.
பாலினப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் அவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவரது பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாதபடி தடையும் விதிக்கப்பட்டது.
சாதனை படைத்தபோது தமிழக அரசு வழங்கிய ரூ.15 லட்சம் பரிசுத்தொகையை வைத்து தன் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் ஒரு தடகளப் பயிற்சி மையத்தைத் தொடங்கிய சாந்தி, ஏழை, எளிய குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தார். ஆனால், வறுமை காரணமாக அந்த மையத்தை அவரால் நடத்த முடியாமல் போய்விட்டது. தற்போது நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தற்காலிகப் பயிற்சியாளராக இருக்கிறார்.
“என்னால்தான் சாதிக்க முடியாமல் போய்விட்டது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களில் ஒருவரையாவது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வைப்பதே லட்சியம் என்று வாழ்கிறார் சாந்தி. அவருக்காகவும், திறமையான ஏழைக் குழந்தைகளுக்காகவும் தான் சர்வதேச தரத்தில் விளையாட்டு ஆணையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்கிறார் கோபி.