பூமியின் தெற்கு அரைக்கோளத்தின் மீது ஏற்பட்ட கடுமையான சூரியப்புயல் பிரமாண்டமான துருவ ஒளியை உருவாக்கிக் காட்டிவிட்டுச் சென்றது. சூரியப் புயல் பூமியின் மீது நடத்திய தீபாவளிக் கொண்டாட்டங்களைப் போல அந்தக் காட்சிகள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை சூரியனில் ஏற்பட்ட மின்காந்த வெடிப்புகள் பூமியை வந்து சேர இரண்டு நாட்களை எடுத்துக்கொண்டதாம். கொலராடோவைச் சேர்ந்த வானியல் பருவநிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் தாமர் பெர்கர், இந்தச் சூரியப் புயல் எதிர்பார்த்ததைவிடப் பலமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
மின் கட்டமைப்புகள் மற்றும் ஜிபிஎஸ் அமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளை பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தாலும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்தச் சூரியப் புயல் ஏ4 என்று அழைக்கப்படுகிறது. ஏ4 என்றால் வலுவானது என்று பொருள். அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தினர் குறைவான தாக்கம் உள்ள சூரியப் புயலை ஏ1 என்றும் அதிக தாக்கம் உள்ளதை ஏ5 என்றும் அளவிடுகின்றனர்.
இந்த முறை சூரியப் புயல் நடத்திய வண்ணத் திருவிளையாடலை அதிக மக்கள் நேரில் காணமுடிந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மின்னசோட்டா மற்றும் விஸ்கான்சின் பகுதி மக்கள் இயற்கை நடத்தும் அற்புதக் காட்சிகளை ரசித்தனர்.
மின்னல் போன்ற காட்சிகள் எஸ்டோனியா மற்றும் அலாஸ்காவிலிருந்து கிளம்பியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகளான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்தக் காட்சிகளை மக்கள் கண்டுள்ளனர். பூமிக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் சூரியன் நடத்திய அற்புதத் திருவிழா இது.