தொழில்முறை கேமரா இல்லாமலே உங்களுடைய போட்டோகிராஃபி திறமைகளைக் காட்டுவதற்கான சில வழிமுறைகள்...
‘கேமரா வைத்திருக்கும் குரங்கு எல்லாமே தன்னை போட்டோகிராஃபராக நினைத்துக்கொள்கிறது’ என்ற ஜோக் பேஸ்புக்கில் மிகவும் பிரபலம். நல்ல ‘ரெஸ்லுயூஷன்’ கேமரா உள்ள போன் வைத்திருக்கும் யாரும் போட்டோகிராஃபி திறமையைக்காட்டத் தனியாக எஸ்எல்ஆர் கேமரா வாங்கத்தேவையில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. மொபைல் போட்டோகிராஃபிக்கான இலக்கணம் மிகவும் எளிமையானது. அது ‘கிளிக், எடிட், ஷேர்’ என்பதுதான்.
இப்போது நல்ல கேமராவுடன் வரும் போன்களால் நல்ல தருணங்களைப் பதிவுசெய்வது எளிமையாகிவிட்டது.‘புரொஃபஷனல் கேமரா’ இல்லை என்ற காரணத்தால் எந்தத் தருணத்தையும் யாரும் இப்போது தவறவிடுவதில்லை. போனில் எடுக்கும் படங்களை உடனடியாக எடிட் செய்யும் ஆப்ஸ்களும் நிறைய வந்துவிட்டன. அவற்றில் விஎஸ்கோ(VSCO), இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அழகியல் ஃபில்ட்டர்கள் இருக்கின்றன.
இந்த ஆப்ஸ்கள் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், சாதாரண படங்களைச் சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் திறன்படைத்தவையாகவும் இருக்கின்றன. போட்டோகிராஃபியைத் தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு, ஹேஷ்டேக்(#) வித்தை மிகவும் உதவிசெய்கிறது. “மொபைல் போட்டோகிராஃபி சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த எடிட்டிங் ஆப்ஸ்கள் புதியவர்களுக்கும், தொழில்முறை போட்டோகிராஃபர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மங்கலாக்குகிறது. பேஸ்புக் ஆல்பங்கள் இப்போது பழசாகிவிட்டன. ஒரு நேரத்தில், ஒரு படம் என்பதுதான் இப்போதைய டிரண்டு” என்கிறார் குழந்தை உரிமைகளைக் கற்பிக்கும் ஸ்ரேயோ.
இவர், வேலை காரணமாக பல நகரங்களுக்குச் செல்லும்போது, மொபைலில் இருக்கும் கேமராதான் முக்கியமான தருணங்களைப் பதிவுசெய்துகொள்ள உதவுகிறது என்று சொல்கிறார்.
“உலகம் முழுவதும் மக்கள் எதைப் படம் எடுக்கிறார்கள், அந்தப் படங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ளவது இப்போது எளிமையாக இருக்கிறது. நான் பார்க்கும் படங்கள், அவற்றில் எனக்குப் பிடிக்கும் படங்கள் போன்றவற்றில் இருந்துதான் புதுமையான விஷயங்களை உருவாக்குகிறேன். இதில் இன்ஸ்டாகிராமின் வீச்சு வியக்கும்விதத்தில் இருக்கிறது. நம் நாட்டில் இருப்பவர்களைக் கடந்து, என்னால் துருக்கி, பாகிஸ்தான், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் இருப்பவர்களையும் தொடரமுடிகிறது” என்கிறார் ஸ்ரேயா.
சிலர் விஎஸ்கோ, இன்ஸ்டாகிராம் பற்றி வியக்கும்போது, இன்னும் சிலர் அவற்றை தங்களை மூழ்கடித்துக்கொள்ளும் விஷயமாகக் கருதுகிறார்கள். “என்னுடைய ஐபோனை படங்கள் எடுப்பதற்காகதான் அதிகமாகப் பயன்படுத்துவேன். இந்தப் பழக்கம் என்னை எப்போதும் இல்லாத அளவுக்கு பிஸியாக வைத்திருக்கிறது. நான் பயிற்சிபெற்ற ஒளிப்படக்கலைஞர் அல்ல. எனக்கு கேமரா பற்றியோ, அதன் நுட்பங்களைப் பற்றியோ, லென்ஸ்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. எனக்கு அழகான காட்சிகளைப் பதிவுசெய்யப் பிடிக்கும். அவற்றைச் செய்வதற்கு என் போன் உதவிசெய்கிறது. அந்தப் படங்களுக்குப் பாராட்டுகளும், விமர்சனங்களும் கிடைக்கின்றன. மற்றவர்களுடைய படங்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் மதுவந்தி செந்தில்குமார்.
அமெரிக்காவின் முதலீட்டாளரும், வால் ஸ்ட்ரீட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆய்வாளர் மேரி மீக்கர் ‘இணையதள டிரண்டுகள் 2013’ ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் ‘மக்கள் இப்போது நாள் ஒன்றுக்கு ஐம்பது கோடி படங்களைப் பகிர்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார். “மொபைல் போட்டோகிராஃபி உடனடித் தீர்வாகவும், நிகழ்-நேரப் பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளவும் வழிசெய்கிறது. பார்வையாளர்களை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கும் வசிதியையும் வழங்குகிறது” என்கிறார் மதுவந்தி.
இன்ஸ்டாகிராம் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர்களுக்கும் உதவிசெய்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நபரால் எடுக்கப்பட்ட படங்களை ஒரே ஒரு ஹேஸ்டேக்கால் கண்டுபிடிக்க இன்ஸ்டாகிராம் அவர்களுக்கு உதவிசெய்கிறது. “இது பரந்த பார்வையாளர்களை உருவாக்குவதற்கு வழிசெய்கிறது. பிற ஒளிப்படக் கலைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக இதில் பதிவிடும் படங்கள் அமைகின்றன. நான் ஒரு பறவையை #காந்திப்பெட்டில் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால், நான் அந்த இடத்தில் ஏற்கெனவே பலரும் எடுத்து இருக்கும் படங்களை உடனடியாகப் பார்க்க முடியும். இந்த வகையில் இது பார்வையாளர்களுக்கும் உதவிசெய்யும். அதனால், படங்களைச் சரியாகவும், புதுமையாகவும் ஹேஷ்டேக் செய்வது முக்கியம்” என்கிறார் இஸ்மாயில் ஷெரிஃப்.
தமிழில்: என். கௌரி