இளமை புதுமை

கொழுப்பை Facebook நீக்குமா?

ரோஹின்

இளைஞர்கள் அதிகமாகப் புழங்கக் கூடிய இடமாக ஃபேஸ்புக் இருப்பதால் அதில் எவ்வளவு சுவாரசியம் உள்ளதோ அதே அளவு சர்ச்சைகளும் உண்டு. யாராவது ஒருவர் தனது ஸ்டேட்டஸில் திடீரென ஒரு திரியைக் கொளுத்திப் போடுவார். அது சகட்டுமேனிக்கு வெடித்துத் தள்ளும். சில நாட்களில் புஸ்வாணமாகிவிடும்.

இப்போது அப்படி ஒரு திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறது எண்டேஞ்சர்டு பாடிஸ் (Endangered Bodies) என்னும் அமைப்பு. அப்படி என்ன ஸ்டேட்டஸ் போட்டிருக்குது இந்த அமைப்புன்னு கேட்குறீங்களா? சர்ச்சையைக் கிளப்பியிருப்பது இந்த அமைப்பின் ஸ்டேட்டஸ் அல்ல. ஃபேஸ்புக்கின் ஸ்டேட்டஸே சர்ச்சையாகி இருக்கிறது. ஸ்டேட்டஸில் என்ன சர்ச்சை?

நீங்கள் என்னவாக உங்களை உணர்கிறீர்களோ அதைப் பதிவிட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா, சந்தோஷமாக இருக்கிறீர்களா, வருத்தத்தில் இருக்கிறீர்களா, காதலில் விழுந்துள்ளீர்களா, தனிமையில் வாடுகிறீர்களா இப்படி 118 விதமான உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தும் வகையிலான பட்டியல் உள்ளது.

இந்தப் பட்டியல் உங்களுக்குத் திருப்தி தராவிட்டால், நீங்கள் வேறு எப்படி உங்களை உணர்கிறீர்களோ அதையும் நீங்கள் தெரியப்படுத்தலாம். அதற்கும் தனி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுகளில் ஒன்றாகக் கொழுப்பும் (fat) அதன் ஸ்மைலியும் இடம்பெற்றுள்ளது. இதுதான் சர்ச்சைக்குக் காரணம். இதை நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பு போர்க்கொடியை உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

உடம்பின் ஆரோக்கியத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எண்டேஞ்சர்டு பாடிஸ் அமைப்பு. எனவே, நான் கொழுப்பாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டால் அது உடம்பு தொடர்பான அவமான உணர்வை வெளிப்படுத்தும் என்பதுடன் சுய அழிவு எண்ணங்களுக்கும் வழி வகுக்கும் என அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும் கொழுப்பு என்பது ஓர் உணர்வு அல்ல என்பதையும், உணவு மூலமாக உடம்பில் சேரும் சத்துப் பொருளே கொழுப்பு என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. ஆகவே உடம்பு தொடர்பான எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த வாய்ப்பையும் அது தொடர்பான ஸ்மைலியையும் உணர்வுகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மனுச் செய்துள்ளது. இந்த மனுவில் 14,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது தவிர ட்விட்டரில் #fatisnotafeeling என்னும் ஹேஷ்டேக் ஏற்படுத்தி அதன் மூலமும் ஃபேஸ்புக்குக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

ஃபேஸ்புக்கில் ஃபீலிங் ஃபேட் என ஸ்டேட்டஸ் போடும்போது, அவர்கள் குண்டாக இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளப்பட்டுக் கேலி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஃபேஸ்புக்கில் உலவும் பிறரின் உணவுப் பழக்கத்தையும் இது பாதிக்கும் எனவே ஃபீலிங் ஃபேட் எனப்படும் இந்த உணர்வு அகற்றப்பட வேண்டியது அவசியம் என இந்த அமைப்பு கூறியுள்ளது.

“அனைவரும் ஃபேஸ்புக்கைத் தங்களது உணர்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், ஒத்திசைவான நண்பர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவுமே பயன்படுத்துகிறார்கள். மேலும் தங்களது ஸ்டேட்டஸை வெளியிடும்போது அவர்கள் எப்படி தங்களை உணர்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே உணர்வுகள் அடங்கிய பட்டியல் உள்ளது. அதில் எதை வேண்டுமானாலும் பயனாளிகள் தேர்வுசெய்துகொள்ளலாம்.

அவர்களாகவே ஒன்றைச் சொல்லவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் பயனாளிகள் தந்த தகவல் அடிப்படையிலேயே வழங்கியுள்ளோம்” என்று தெரிவிக்கிறது ஃபேஸ்புக் தரப்பு. மொத்தத்தில் இப்போதைக்குக் கொழுப்பை நீக்கப்போவதில்லை என்பதைச் சூசகமாக வலியுறுத்தியுள்ளது ஃபேஸ்புக்.

SCROLL FOR NEXT