ஆண்டுகளில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், நண்பர்கள் தினம் எனக் கிராமப்புறங்கள் வரை கொண்டாடப்படும் தினங்கள் பெருகிவிட்டன. சமீபத்தில் பெண்கள் தினத்தைக்கூடக் கடந்தோம். இந்தத் தினங்கள் எல்லாம் எதற்காக?
குறைந்தபட்சம் நம் எந்திரமயமான வாழ்க்கையில் நம்மை உருவாக்கியவர்களுக்காக, நம்மை உற்சாகப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறுவதற்காகவே இத்தினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியெனில் நாம் இத்தினங்களில் மட்டுமே நன்றி கூறுபவர்களாக உள்ளோமா?
நமது அவசரத்தில் அருகிலேயே வாழ்பவர்களைக்கூட அங்கீகரிக்க நாம் மறந்துவிட்டோமா? நன்றி கூறுவதற்குக்கூட அமெரிக்காவில் ஒரு தினத்தையே உருவாக்கியுள்ளார்கள். நன்றியை மனதளவில் உணர்தல் மட்டுமல்ல, நன்றியை உரியவர்களிடம் சொல்வது ஒருவரின் ஆரோக்கியத்தை உயர்த்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நன்றி சொல்வதை வெறும் சம்பிரதாயம் என்று நினைத்துச் சொல்லாமல் இருக்கிறோம். பெரிய உதவியை ஒருவர் செய்யும்போது மட்டுமே நன்றி சொல்ல வேண்டுமென்றும் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நன்றி சொல்வது, நன்றியை மரியாதை இல்லாததாய் ஆக்கிவிடும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒருவருக்கு நன்றி சொல்வதால் அவரைச் சார்ந்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுவது நல்லதல்ல என்பதாலும் சிலர் நன்றியைத் தவிர்க்கின்றனர்.
ஒருவரிடம் நன்றி சொல்லும்போதோ அதை இரண்டு நொடிகள் செலவழித்து ஒரு குறிப்பாகக் கொடுக்கும்போதோ அதைப் பெற்றுக்கொள்பவரின் முகம் ஒளிர்வதை அவசர வாழ்க்கையில் நாம் மறந்தே போனோம். நன்றி என்பது ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. அது முற்றிலும் அந்நியமான ஒரு நபரிடம் சொல்லப்பட்டாலும்கூட.
நன்றி ஆரோக்கியத்தைத் தரும்
தனக்கு நல்லது செய்பவர்களைக் குறித்த நன்றியறிதலோடு ஒரு நாளை தொடங்கும் ஒருவர் அன்று முழுவதும் வாழ்க்கையைப் பாசிட்டிவாக எதிர்கொள்கிறார் என்று எழுத்தாளர் ஷான் ஆக்கர் கூறுகிறார். நரம்புகளைத் தூண்டும் டோபமைன் சுரந்து மூளையின் செயல்திறனையும் படைப்பூக்கத்தையும் தூண்டுகிறது என்கிறார்.
இதனால் பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கமுடியும். டோபமைன் ரத்தநாளங்களில் சீரான ரத்த ஓட்டத்தையும், சரியான உணவுப் பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒப்பிடத் தேவை இல்லை
இங்கிலாந்தில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சக மாணவர்களிடம் உளப்பூர்வமாகப் பகிரும் மாணவர்கள் மன அழுத்தம் குறைவானவர்களாகவும் சமூக ரீதியாக நல்ல உறவுகளை வைத்திருப்பவர்களாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவர் ஷீலா ராஜ், நன்றியை வெளிப்படுத்தும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைவு கொண்டவர்களாக இருப்பதாகவும் அடுத்தவர்களுடன் தங்களை அதிகம் ஒப்பிட்டுக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார்.
காதலிலும் உறவிலும் நன்றி அவசியம்
ஆண்களைவிடப் பெண்கள் தங்களுக்கு உதவி செய்பவர்கள் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அதைத் தெரிவிப்பதில் கூடுதலான கவனம் கொண்டவர்களாக உள்ளனர். நன்றியுணர்வு போதாது. அதைத் தெரிவிப்பதும் அவசியம் என்ற எண்ணம் ஆண்களிடம் குறைவாகவே உள்ளது என்கிறார் உளவியல் மருத்துவர் சாரா அல்கோ. நன்றி சொல்லாத ஒரு ஆணை நம்ப இயலாதவர் என்றே ஒரு பெண் மனம் எண்ணக்கூடும்.
அம்மாவுக்கு நன்றி சொல்லுங்கள். அப்பாவுக்கு, நண்பருக்கு, தோழிக்கு, காதலருக்கு, காதலிக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, கடைக்காரருக்கு, பேருந்து நடத்துனருக்கு, போக்குவரத்துக் காவல்காரருக்கு, வீட்டுப் பணிப்பெண்ணுக்கு எனச் சகலருக்கும் ஒரு நாள் நன்றி சொல்லிப் பாருங்கள்…அந்த நாள் மாறும்.