ரூட்டு தல என்னும் வார்த்தையைப் பொதுவாகச் சென்னையில் இருக்கிற கல்லூரிகளில் கேட்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் கதாநாயகன் ரூட்டு தலயாதான் இருப்பார். சென்னையில் ரூட்டு தலைக்குப் பிரபலமான கல்லூரிகள் என்றால் சென்னை மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி இரண்டும்தான். ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு தல இருப்பார். பேருந்து ரூட்டுக்கு ஒரு தல, ரயில் ரூட்டுக்கு ஒரு தலன்னு தனித்தனியா இருப்பாங்க. ரூட்டு தலனா ஒரே ரகள தான், பத்துப் பதினைந்து பசங்க ஒன்னு சேர்ந்து கானா பாடிகிட்டு அடிதடி பண்ணிகிட்டு இருப்பாங்கன்னு தான் எல்லோருமே நினைச்சுகிட்டு இருக்கோம். ஆனா இவங்க சந்தோஷமா இருக்கறது மட்டுமில்லாம சமூக சேவையும் பண்றாங்க.
அப்படி என்ன நல்லது பண்றாங்க? ரூட்டு தலயை எப்படித் தேர்வு செய்றாங்க? இவர் பசங்களுக்காக எந்த மாதிரியான உதவிகள் செய்கிறார்? இப்படி நமக்குள் எழும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள சென்னை மாநிலக் கல்லூரி திருவள்ளூர் ரூட்டு தல ஜெய்சிங்கைச் சந்தித்துக் கேட்டோம். இவர் தற்போது மாநிலக் கல்லூரியில் முதுகலைப் புள்ளியியல் முதலாம் ஆண்டு படித்துகொண்டிருக்கிறார். இதுவரை நாம் அறியாத பல தகவல்களை இவர் கூறினார்.
கடந்த 10-15 வருடங்களாக ரூட்டு தல நடைமுறையில் உள்ளது. ஒரே ரூட்டில் செல்லும் அனைத்து மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ரூட்டு தல. இதன் மூலம் அனைத்து மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து பாட்டு பாடிக்கொண்டே ஜாலியாகக் கல்லூரிக்குச் செல்வார்கள். அந்தச் சமயத்தில் ஒரே ரூட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து இவர் சரியாக இருப்பார், நமக்காகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்பார் என்று ஒருமனதாக முடிவு செய்து ரூட்டு தலையைத் தேர்வு செய்வார்கள். அப்படி மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் தான் ஜெய்சிங். ஆனால் சமீபகாலமாகப் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் கையில் ஸ்மார்ட் போன் வைத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் பேஸ்புக், வாட்ஸ் அப் என மூழ்கிவிடுகிறார்கள். அதனால் பயணத்தின் சுவாரசியம் குறைந்துவிட்டது என ஆதங்கப்படுகிறார் இவர்.
ரூட்டு தல என்றாலே அடிதடி பண்றவங்க, கலாய்க்கிறவங்கன்னு ஓர் எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் “உண்மையில் நாங்கள் அப்படிக் கிடையாது” என்று சொன்ன இவர், ரூட்டு தலயின் முக்கிய நோக்கம் அந்த ரூட்டில் வரும் மாணவனுக்கோ மாணவிக்கோ ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சரி செய்வதுதான் என்றார்.
இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும்போது மட்டுமே ஒரு மாணவன் ரூட்டு தலயாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் கடந்த வருடம் 2013-14-ல் திருவள்ளூர் ரூட்டு தலயாக இருந்துள்ளார். இவருடைய ரூட்டில் வரும் பையனாலோ பெண்ணாலோ தேர்வு கட்டணமோ கல்லூரிக் கட்டணமோ செலுத்த முடியவில்லை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து பணம் வசூலித்து உதவுகிறார்கள். யார் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். “ஒருவருடைய சந்தோஷத்தில் பங்குகொள்வதைவிடத் துக்கத்தில் கண்டிப்பாகப் பங்குகொள்வோம். எங்கள் ரூட்டு பையனுக்குப் பிறந்தநாள் வந்தால் போதும் கேக் கட் பண்ணி செம ரகளையா கொண்டாடுவோம்.” என்றார் ஜெய்சிங்.
இவர் ரூட்டு தலயாக இருந்தபோது தனது ரூட்டில் உள்ள அனைத்து மாணவர்களுடைய தொலைபேசி எண்களையும் ரத்தப்பிரிவு போன்ற தகவல்களையும் சேமித்து வைத்திருந்தாராம். “எப்போது யார் தொலைபேசியில் தொடர்புகொண்டாலும் தேவைப்படும் ரத்தப் பிரிவுக்கு ஏற்பாடு செய்வேன். சில சமயம் நடுராத்திரி 12 மணிக்குகூட எனக்கு அழைப்பு வந்துள்ளது. ஒருமுறை 12 மணிக்கு சென்று ரத்தம் கொடுத்தேன் அப்படிக் கொடுத்தும் அந்த மாணவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் என் நண்பனின் சகோதரன். இன்றுவரை அதை நினைத்து வருந்துகிறேன்” என்று வருத்தம் தொனிக்கக் கூறினார். இன்றும்கூட ரத்தம் தேவைப்பட்டால் இவரைத் தொடர்புகொள்கிறார்கள் என்றும் இவரும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருவதாகவும் கூறும்போதே பலருக்கு உதவிய சந்தோஷம் முகத்தில் ஒளிர்ந்தது.
இவர் கூறியதைக் கேட்கும்போது ரூட்டு தல பற்றிய மேம்போக்கான எண்ணம் மறைந்து, இவர்கள் செய்யும் நன்மைகள் மட்டுமே தெரிகின்றன.