இளமை புதுமை

கீதம் சங்கீதம்

பாலா

கர்னாடக இசையை ஏதோ மைலாப்பூர், மாம்பலம், அடையாறில் வசிப்பவர்கள் மட்டுமே எளிதில் கற்று, அதில் தேர்ச்சியும் பெற முடியும் என்ற பொதுவான கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது சமீபத்தில் சென்னையில் நடந்த இசைப்போட்டி வெற்றியாளர்களின் பட்டியல்.

சென்னையின் ‘TAG’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு.சாரியுடன், ஸ்ருதி மாத இதழ் மற்றும் மியூஸிக் ஃபாரம் இணைந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘TAG’ குழும அரங்கத்தில் இசைப் போட்டி நடத்தப்பட்டது. தினம் மூன்று போட்டியாளர்கள், தலா 50 நிமிடம் வீதம் பாட்டுக் கச்சேரியை நிகழ்த்தித் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஆறு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்ட போட்டியாளர்களுள் ஐந்து பேரைத் தேர்வுச் செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அரங்கத்தில் ரசிகர்களுடன் அமர்ந்தபடி திறனாய்வு செய்தனர். பாடகரும், மருத்துவருமான சுந்தர் நடுநிலைத் தேர்வாளராகச் செயல்பட்டார். அவரின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

”பொதுவாக தரம் நன்றாகவே இருந்தது. ஆனால் குரல் வளம் பற்றியும் அதன் தன்மை பற்றியும் பங்கெடுத்துக்கொண்ட யாருமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல் திரும்பத்திரும்ப குறிப்பிட்ட சில ராகங்களையே பாடினார்கள். தாளம் பற்றியும், தாளக் கோர்வைகள் பற்றி அவர்களின் அறிதல் சிறப்பாகவே இருந்தது. கொடுக்கப்பட்ட 55 நிமிடங்களுக்குள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், போட்டியாளர்கள் நன்குச் செயல்பட்டது சந்தோஷமாக இருந்தது.”

இவ்வாறு நடத்தப்பட்ட கச்சேரிகளில் இந்த வருடம் சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் மற்ற ஊர்களிலிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும், ஏன் வெளி நாடுகளிலிருந்தும் இளம் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

போட்டியின் முடிவுகள் ஆச்சரியம் அளித்தன. ஏனெனில், தேர்வு செய்யப்பட்ட ஐவருமே வெளியூரைச் சேர்ந்தவர்கள்.

தேர்வானவர்கள்:

1) எஸ்.கே.மஹதி-கோழிக்கோடு 2) என்.சிவகணேஷ், பெங்களூரூ 3) ஏ.அனுபம் ஷங்கர், புது தில்லி 4) க்ருதி பட், அமெரிக்கா 5) கே.ஆர்.ஹரிகிருஷ்ணன், மூழிக்குளம், இவர்களுக்கு தலா ரூ. 5,000/- மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதைத் தவிர வெற்றிபெற்றவர்களுள் இருவருக்கு இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ‘கர்நாடக இசையின் நாளைய வித்வான்கள்’ என்ற ஆறு நாள் இசை விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்று ஆர்.டி.சாரி கூறினார்.

SCROLL FOR NEXT