இளமை புதுமை

ஜோக் காதல் கவிதைகள்

பேயோன்

உன்னை முதன்முதலில் பார்த்தபோது

உன் பெயர்கூடத் தெரியாதெனக்கு

இப்போது இனிஷியல் முதற்கொண்டு தெரியும்.

அழகான பாதங்களில்

செருப்பின்றி நடக்கிறாய்

டைல்ஸ் தரையே ஆனாலும்

வீணாகிறதுன் பாத ஸ்பரிசம்.

கைரேகை சோதிடம் பார்க்க

எனக்குன் மலர்க்கரத்தைத் தருகிறாய்

அதை ஆண்டு அனுபவித்துவிட்டுத்

திருப்பித் தந்த பின்பு சிரிக்கிறேன்

எனக்குச் சோதிடம் தெரியாதென

மோதிர விரலை பூமத்திய ரேகை

எனச் சொன்னபோதே தெரியும்

என்று நீயுஞ்சிரிக்கிறாய்.

ரோஜாவைப் பார்க்கும்போது

உன் ஞாபகம் வருகிறது

உன் பெயர் ரோஜா

என்பதாலோ என்னவோ.

ஆனால் ரோஜாக்களைப்

பார்க்கும்போது வருவதில்லை

உன் பெயர் ரோஜாக்கள் அல்ல

என்பதாலோ என்னவோ.

குடையோ ஒதுங்கிடமோ

இல்லாத பெருமழையில்

தொப்பலாக நனைந்தபோதுதான்

பர்ஸில் உன் புகைப்படம்

நினைவுக்கு வந்தது

அட, உன் புகைப்படமும்

தொப்பலாக நனைந்திருக்கிறதே!

சத்தமில்லாமல் முத்தமே

கொடுக்க வராதா என்று

கிசுகிசுப்பாய்க் கடிந்துகொள்கிறாய்

நாங்களெல்லாம் அப்படித்தான்.

உனக்கொரு கட்டவுட் வைத்து

அதை என் முத்தங்களால்

அபிஷேகம் செய்யும் வரை

ஆறாது இந்த மனது!

ஒரு முத்தம்

ஒரே ஒரு முத்தம்

அதுவும் எனக்காகத்தான் கேட்கிறேன்

அதையும் உன்னிடம் மட்டும்தான் கேட்கிறேன்

அதற்கே இந்த கலாட்டா

இணையத்தில் பிரபலமான பெயர் பேயோன். நக்கல், நையாண்டி, எகத்தாளத்திற்கு பெயர் பெற்ற அனானி எழுத்தாளர் இவர். காதலர் தினத்தையொட்டி அவர் எழுதிய பத்து கவிதைகளிலிருந்து சில கவிதைகள் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன...

இது காமெடி மட்டுமே காயப்படுத்த அல்ல.

SCROLL FOR NEXT