இளமை புதுமை

கிரேசி காமெடியன் சதீஷ்

கா.இசக்கி முத்து

சிவகார்த்திகேயனுடன் மெரினாவில் எதிர் நீச்சல் அடித்த சதீஷ், அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் ‘கத்தி', விஷாலுடன் ‘ஆம்பள' எனத் தனது திரையுலக வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார். 2015-ம் ஆண்டு வெள்ளித் திரையில் தனுஷ் - வேல்ராஜ் இணையும் படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவிருக்கும் சதீஷ், கிரேசி மோகன் நாடகக் குழுவில் இருந்தவர். இதுவரை 1200-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். நாடக அனுபவங்களைப் பற்றி இரவு நேர மார்கழிக் குளிரில் மெரினாவில் சதீஷிடம் பேசியதிலிருந்து...

கிரேசி மோகன் நாடகக் குழுவில் எப்படி இணைந்தீர்கள்?

‘மைக்கேல் மதன காமராஜன்' படத்தைப் பார்க்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்தப் படம் பார்த்ததில் இருந்தே எனக்கு அவர்கிட்ட சேர ஆசை. வாணி மஹால்ல அவருடைய நாடகங்கள் நடக்கும். அங்கே போய் “சார் என்னுடைய மாமா கிருஷ்ணமூர்த்தி, கிரேசி மோகன் நாடகங்களில் நடிச்சுட்டு இருக்கார். அவருடைய நம்பர் கொடுத்தீங்கன்னா போய்ப் பார்த்துவிடுவேன்” என்றேன்.

“அவர் நம்பர் எல்லாம் என்கிட்ட இல்லை. வேண்டுமானால் கிரேசி மோகன் நம்பர் தருகிறேன். அவர்கிட்ட கேட்டு வாங்கிக்கோங்க” என்று நம்பர் மட்டுமன்றி வீட்டு விலாசமும் கொடுத்தார்கள். அவர் வீட்டுக்கே போனேன். திருவிளையாடலை வைத்து ‘நவீன திருவிளையாடல்’ என்று எழுதியதை விவரித்தபோது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அடுத்த வாரத்தில் இருந்து நாடகத்திற்கு வாங்க என்றார்.

முதல்ல சேர்ந்த உடனே, நாடகங்களில் சேர் எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு ஆள் வரவில்லை. உடனே நானே போய் “சார். நான் பண்றேன்” என்றவுடன் பயந்தார்கள். கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு சரி என்றவுடன், பயப்படாமல் சொதப்பாமல் வசனத்தைப் பேசிவிட்டேன்.

அதற்குப் பிறகு பெரிய வேடங்கள் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவருடைய நாடகங்களில் சீனு வேடம்தான் முக்கிய மானதாக இருக்கும். அதுவும் பண்ணினேன்.

கிரேசி மோகனிடம் இருந்து கற்றுக்கொண்டது என்றால் எதைச் சொல்லுவீர்கள்?

அவர் சாதாரணமாக எது பேசினாலும், அதற்குள் ஏதாவது ஒரு ஜோக் இருக்கும். அதைக் கற்றுக்கொண்டேன். அவருடைய காமெடி யாருடைய மனதையும் புண்படுத்தாத மாதிரி இருக்கும். அதுவும் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். ‘மான் கராத்தே' படத்தில் “இது காமெடியா… இருங்க தனியாப் போய் சிரிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லுவது எல்லாம் அவருடைய பாணி காமெடிதான்.

வெள்ளித்திரை நடிகராகிவிட்டீர்கள். மறுபடியும் நாடகங்களில் நடிப்பீர்களா?

நாடகங்களில் மறுபடியும் நடிப்பேன் என்பதில் சந்தேகமில்லை. அவ்வப்போது ஆசை வரும். கிரேசி மோகன் சார் நாடகங்கள் நடக்கும்போது, நான் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நண்பர்களைப் பார்க்கப் போவேன். அப்போது எல்லாம் எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கும். ஏனென்றால், நாடகங்களில் என்ன பண்ணினாலும் உடனே அதற்கான ரிசல்ட் தெரியும். படங்கள் என்றால் நடித்து முடித்து, எடிட் பண்ணி, டப்பிங் பேசி, பின்னணி இசை சேர்த்து அது திரையரங்கிற்கு வந்தால்தான் முடிவு என்ன என்பது தெரியும். நாடகங்களில் படைப்பாற்றலுக்கு நிறைய இடங்கள் உண்டு. கண்டிப்பாக மீண்டும் நாடகங்களில் நடிப்பேன்.

மறக்க முடியாத சம்பவம் எதுவும் இருக்கிறதா?

ஒரு தடவை நாடகம் ஏற்பாடு பண்ணியவர்கள் வீட்டில், நாடகக் குழுவினர் அனைவருக்கும் சாப்பாடு போட்டாங்க. எங்க குழுவில் நடராஜன் என்ற மேக்கப்மேன் இருந்தார். அவருக்கு அவ்வளவாக இங்கிலீஷ் தெரியாது. நாடகம் ஏற்பாடு பண்ணியவங்களோட மனைவி பரிமாறிக்கிட்டு இருந்தாங்க. நடராஜன் வந்து சாப்பாடு போடும்போது, போதும் என்பதற்கு ஆங்கிலத்தில் “Dont touch me”, “Don’t touch me” என்றார். என்ன சார் சொன்னீங்க என்றேன். போதும் என்பதை ஆங்கிலத்தில் சொன்னேன் என்றார்.

நான் உடனே இதை கிரேசி மோகன் சார்கிட்ட சொன்னேன். அவருடைய காமெடி பாணியில் “போதும் என்பதை இப்படிச் சொன்னான். வேணும் என்பதை சொல்லியிருந்தால் என்னவாகி இருக்கும்?” என்றார். இப்போதுவரை அந்த காமெடியை மறக்கவே முடியாது.

சினிமா வாய்ப்பு எப்படி அமைந்தது?

சினிமாவில் யாரெல்லாம் தெரியுமோ அவங்களை எல்லாம் எனது நாடகத்துக்கு வரச் சொல்லி ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவேன். 'பொய் சொல்ல போறோம்' படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதுவதாக இருந்தது. அப்போது “டேய். நான்தான் வசனம் எழுதுறேன்.

அந்த படத்துல உனக்கு ஒரு நல்ல ரோல் இருக்கு” என்று சொன்னார். அப்போது இயக்குநர் விஜய் சாரை ‘ஜுராசிக் பேபி’ என்ற நாடகத்திற்கு அழைத்தேன். அதில் ஜுராசிக் பேபியாக நான்தான் நடித்தேன். இயக்குநர் விஜய் பார்த்துவிட்டு ரொம்ப நல்லா பண்ணுறீங்க என்று பாராட்டினார்.

‘பொய் சொல்ல போறோம்' படத்தில் கிரேசி மோகன் சாரால் பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதற்குள் இயக்குநர் விஜயுடன் நான் நண்பராகிவிட்டேன். “என் அடுத்த படத்தில் வேலை செய்றீங்களா?” என்று அவர் கேட்டார். அப்படி ஆரம்பித்தது என்னுடைய திரையுலக வாழ்க்கை. அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் வேலை செய்தேன். அவர் எடுத்த 'மதராசப்பட்டினம்' படத்தில் மூலம் சினிமாவில் நடிகனாக அறிமுகமானேன்.

பல படங்களில் பணியாற்றுகிறீர்கள். ஆனால் உங்களது பெயர் காமெடி நடிகர் என்றுதானே வருகிறது?

நான் பண்ணும் படங்களில் மட்டுமே பணியாற்றுகிறேன். மற்ற படங்களுக் கெல்லாம் பணியாற்றுவதில்லை. ‘எதிர் நீச்சல்' படத்தில் முழுக்கதையும் இருந்தது. அதில் காமெடி வசனங்களில் நானும் சிவாவும் சேர்ந்து செய்தோம். அதே மாதிரி, ‘மான் கராத்தே' படத்தில் முதல் நாள் டிஸ்கஷனில் இருந்து நானும் சிவாவும் சேர்ந்து வேலை செய்திருக்கிறோம். தனியாக எழுதிக் கொடுப்பது அந்த மாதிரி எல்லாம் கிடையாது. நான் ஒரு காமெடியன், அதனால் அந்த மாதிரி பண்ணுவது என்னோட கேரியருக்கு நல்லது என்று பார்க்கிறேன்.

அஞ்சலியோட கல்யாணம்னு கேள்விப்பட்டோம். எப்போது?

நீங்க வேற... அந்த அஞ்சலி கிசுகிசு எப்படி வந்ததுனு தெரியல. நான் இதுவரைக்கும் அஞ்சலியை நேரில் பார்த்துப் பேசியதுகூட கிடையாது. நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான்.

SCROLL FOR NEXT