ஃபேக்கிங் நியூஸ் (Faking News) இணையதளத்துக்குப் பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. அன்றாட நிகழ்வுகளை வைத்தே முழுக்க முழுக்க பொய்யான செய்திகளை வழங்கி நெட்டிசன்களைச் சிரிக்க வைப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆளேயில்லை.
இவர்களுடைய பேஸ்புக் பக்கத்துக்கும் நெட்டிசன்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. கிட்டத்தட்ட பத்து லட்சம் லைக்குகளுடன் பேஸ்புக்கையும் ஃபேக்கிங் நியூஸ் பக்கம் கலக்கிக்கொண்டிருக்கிறது.
ஃபேக்கிங் நியூஸ் செய்திகளில் அடிபடாமல் தப்பித்த நபர்கள் கிடையவே கிடையாது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சுற்றுப்பயணத்தைப் பற்றிய இவர்களது செய்திகள் நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கின்றன.
ஒருவேளை, அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமராக இருந்திருந்தால் ஒபாமாவின் இந்திய பயணம் எப்படியிருந்திருக்கும் என்ற இவர்களது கற்பனையில் வெளியாகி இருக்கும் படங்கள் பேஸ்புக்கில் அதிகமாகப் பகிரப்பட்டிருக்கின்றன. ‘டெல்லியில் அமைத்திருந்த 15,000 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் ஒபாமாவின் இந்திய பயணத்துக்குப் பிறகு காணவில்லை’,
‘டெல்லிவாசிகள் அனைவரும் ஒபாமாவின் பயணத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என இவர்கள் வெளியிடும் செய்திகள் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால், அந்தச் செய்திகளை முழுமையாகப் பொய் என்றும் ஒதுக்கிவிடமுடியாதபடி இருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி நிருபர்கள் என யாரும் இவர்களுடைய கழுகுப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது.
இப்போது இளைஞர்கள் சந்திக்கும் நவீன பிரச்சினைகளையும் காமெடி செய்திகளாக்கி வெளியிடுகிறார்கள். சுற்றி நடக்கும் சமூக நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளும்போது பாதிக்கப்படாமல் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றதளம் இந்த ஃபேக்கிங் நியூஸ்.