புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுள் குறைந்துவிடும் எனும் மூடநம்பிக்கை நிலவியது ஒரு காலம். எதற்கெடுத்தாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வது இந்தக் காலம். அதுவும் செல்ஃபி மோகம் கட்டுக்கடங்காமல் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.
சமீப காலங்களில் விபரீதமாக எடுக்கப்பட்ட செல்ஃபிகளில் சில:
காளை இருக்கு மூளை இருக்கா?
ரணகளத்திலும் இந்தப் பயலுக்கு எவ்வளவு சேட்டை பாருங்க! டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த காளை ஓட்டம் (bull run) போட்டியில் பங்கேற்றார் இவர். மாடு அவரை முட்டி தள்ளச் சில நானோ நொடிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் செல்ஃபி எடுத்துள்ளார். இதை வீரம் என்பதா, கிறுக்குத் தனம் என்பதா?
ரயில் ரகளை
புகைப்படம் எடுக்க உலகத்தில் எங்குமே இடம் இல்லாத மாதிரி இவர் எங்கே நின்று செல்ஃபி எடுக்கிறார் பாருங்கள்! ரயில் என்ஜினின் முன்புறத்தில் உட்கார்ந்திருந்த ரயில் கண்டக்டர் காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஷூ இவர் தலையில் எத்தித் தள்ள விழுந்து படுகாயமடைந்தார். ஆனால் தப்பிச்சோம் பிழைச்சோம் என இருக்காமல், தான் ரயிலில் அடிபட்டு விழுந்த செல்ஃபி வீடியோவை யூ டியூபில் பெருமையாக வெளியிட்டார்.
கோண மூஞ்சி
‘செல்லோ டேப் செல்ஃபிஸ்’ என்ற பெயரில் நாக்கு, மூக்கு, நெற்றி, கண்ணு எனக் கண்ணு மண்ணு தெரியாமல் செல்லோ டேப்பால் சுற்றிச் சுற்றி ஒட்டிவைத்து நல்லா இருக்கும் முகத்தைக் கோண மூஞ்சாக மாற்றி செல்ஃபி பிடிப்பதும் ஒரு ஸ்டைல்!
சினிமா தியேட்டரா, ஆபரேஷன் தியேட்டரா?
அறுவை சிகிச்சை செய்யும்போதே தலையில் கொம்பு வைத்து, கேலியும் கிண்டலுமாக போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இந்த அநியாயச் சம்பவம் 2014-ல் ஆகஸ்ட் மாதம் சீனாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது. மருத்துவர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டதாலும், நோயாளியை அவமதித்தாலும் பொதுமக்கள் இந்தச் செல்ஃபி புகைப்படத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள்.
அதன் எதிர்வினையாகக் கடந்த டிசம்பர் மாதம் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற அனைவரும் அப்போது அந்த மருத்துவமனையின் தலைவராக இருந்த மருத்துவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர், மூன்று மாதச் சம்பளத்தை அபராதமாகக் கட்டும்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.
செல்ஃபி டாட்டூ
முதலில் அழுக்கு வடியும் முகத்தோடு, குரங்கு சேஷ்டை காண்பித்துக் குளியலறையில் நின்றபடி செல்ஃபி புகைப்படம் எடுத்தார் இவர். பின்பு செல்ஃபி ஸ்டைலில் கேமராவும் கையுமாக எடுக்கப்பட்ட செல்ஃபியை டாட்டூவாகக் கையில் வரைந்து அதையும் செல்ஃபி பிடித்திருக்கிறார் இவர்.
செத்தாலும் விடாது
இதைக் காட்டிலும் மோசமான செல்ஃபி இருக்க முடியாது. சவப்பெட்டியின் முன்னால் செல்ஃபி எடுத்திருக்கிறார் இந்த இளம் பெண். துக்கம் நிறைந்த சூழலில்கூட செல்ஃபி மோகம் பிடித்து ஆட்டுகிறது என்றால் அந்த மோகத்தை என்னவென்று சொல்ல!