நேபாளப் பயணத்தைக் கருவாக வைத்து ‘பாஸிட்டிவ்ஸ்’(Positives) என்னும் அழகான ஒளிப்படக் கண்காட்சியை நடத்தி முடித்திருக்கின்றனர் எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவிகள்.
மாணவிகளின் ஒளிப்படக் கலைத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளமாக இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவிகள் எடுத்திருந்த 3,000 ஒளிப்படங்களிலிருந்து 200 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
“ஒளிப்படங்கள் எடுப்பதில் இருக்கும் பல்வேறு அம்சங்களையும், நுணுக்கங்களையும் பயண ஒளிப்படங்களைக் கையாளும்போது எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். அதைக் கருத்தில்கொண்டு ஏற்பாடு செய்ததுதான் இந்த நேபாளப் பயணம். அந்த வகையில், மாணவிகள் இந்தப் பயணத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியின் ஒளிப்படப் பேராசிரியர் அமலோர்.
‘பாஸிட்டிவ்ஸ்’ ஒளிப்படக் கண்காட்சியில் நேபாளப் பயணம் மட்டுமல்லாமல் மாணவிகள் இந்தக் கல்வியாண்டில் வெவ்வேறு தருணங்களில் எடுத்த ஒளிப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒளிப்படங்கள் ஜல்லிக்கட்டு, எப்போதும் ஆர்ப்பாட்டத்துடனும் அழகுடனும் இருக்கும் சென்னையின் தெருக்கள், கேரளாவின் தெய்யம் கலை, கோயில் திருவிழாக்கள் போன்ற நம் நாட்டின் கலாசாரப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும்படி இருந்தன. இந்த அம்சம் கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நேபாளத் தலைநகரம் காத்மாண்டுவின் குறுகிய தெருக்களையும், இமய மலையின் பிரம்மாண்டத்தையும், கோயில்களையும் தங்கள் ஒளிப்படங்களில் பதிவுசெய்திருந்தனர் மாணவிகள். அதிலும் குறிப்பாக, நேபாள மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பதிவுசெய்திருந்த படங்களும், அவர்களின் உருவப் படங்களும் கண்காட்சிக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் அமைந்திருந்தன.
“இந்த நேபாளப் பயணம் அங்கிருக்கும் மக்களின் கலாசாரம், அன்றாட வாழ்வியல் முறை, இயற்கை அழகு போன்றவற்றைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இருந்தது. அத்துடன், நேபாளத்தின் கலாச்சார அடையாளங்களை எங்கள் ஒளிப்படங்கள் மூலம் பிரதிபலித்தது சிறந்த அனுபவமாக இருந்தது” என்கிறார் மாணவி நீரஜா.
சென்னை லலித் கலா அகாடமியில் ஜனவரி 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பிரபல ஒளிப்படக் கலைஞர்களும், திரைப்படக் கலைஞர்களும் கலந்துகொள்கின்றனர். இந்த ‘பாஸிட்டிவ்ஸ்’ ஒளிப்படக் கண்காட்சியை நடிகர் சிவகுமார் தொடங்கிவைத்தார்.