இளமை புதுமை

சிறை செல்ல ஆசைதான்!

என்.கெளரி

கைதிகள், சிறை அதிகாரிகள், காவலர்கள் சூழ சிறைச்சாலையில் சாப்பிடுவதைப் பற்றி பெரும்பாலும் யாரும் சிந்தித்திருக்க மாட்டோம். ஆனால், சிறைச்சாலையில் சாப்பிடும் வித்தியாசமான அனுபவத்தை மக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் இயங்கி வருகிறது கைதி கிச்சன் ரெஸ்டாரண்ட் (Kaidi Kitchen Restaurant).

ஒரு கருப்பொருளை மையமாக வைத்து வடிவமைக்கப்படும் உணவகங்களுக்கு மக்களிடம் எப்போதும் ஒருவித வரவேற்பு இருக்கும். அந்த வகையில், இந்த சிறைச்சாலைக் கருப்பொருளுக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது.

“இந்த சிறைச்சாலை தீம் மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. கைதி கிச்சனின் மெனுவில் இருக்கும் இத்தாலி, இந்தியா, சீனா, மெக்ஸிகோ, தாய்லாந்து, லெபனான், மங்கோலியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் உணவு வகைகளும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. அதோடு, பனீர் உணவு வகைகள் மற்றும் பன்னாட்டு சைவ உணவு வகைகள் கைதி கிச்சனின் சிறப்பம்சங்கள்”, என்கிறார் அதன் மேலாளர் மகேஷ்.

சிறைச்சாலைக்குச் சென்று சாப்பிடுவது என்பது நடைமுறையில் செய்ய முடியாத ஒரு காரியம். ஆனால் அந்த அனுபவத்தைக் கைதி கிச்சன் ரெஸ்டாரண்ட் வழங்குவதால், ஆரம்பித்த ஒரே மாதத்தில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த இடமாக மாறியிருக்கிறது.

“சிறை அதிகாரிகள், காவலர்கள், கைதிகள் சீருடைகளைக் கேட்டு வாங்கி அணிந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது இங்கே வரும் பெரும்பாலான இளைஞர்களுக்குப் பிடித்தமான செயல்”, என்கிறார் மகேஷ்.

சிறை அதிகாரிகள் உணவு ஆர்டர் எடுக்க, கைதிகளின் உடையில் சர்வர்கள் உணவு பரிமாறுவது, சிறைக் கம்பிகளுக்குள் அமர்ந்து சாப்பிடுவது என முற்றிலும் எதிர்ப்பார்க்க முடியாத ஒரு உற்சாகமான அனுபவத்தை வழங்குகிறது இந்தக் கைதி கிச்சன் ரெஸ்டாரண்ட்.

SCROLL FOR NEXT