‘ஊட்டி, கொடைக்கானல் மலர்க் கண்காட்சிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த முருங்கைக்காய் ஈஃபில் டவர், முள்ளங்கி அன்னப்பறவை’ என்று பத்திரிகைகளில் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். இல்லையெனில், வாட்ஸ் அப்பில் பரவிய சில்லி சிக்கன் (மிளகாயில் செய்யப்பட்ட கோழி) போட்டோவாவது உங்கள் கண்ணில் பட்டிருக்கும். புன்னகைக்கவும், புல்லரிக்கவும் வைத்த அந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.இளஞ்செழியன்.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் கேட்டரிங் படித்த இளைஞர். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் உலகம் முழுக்க நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிய, இவரோ சொந்த ஊரில் இருந்து கொண்டே உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில், சென்னையில் நடந்த வெஜிடபிள்ஸ் ஹார்விங் போட்டியில் இந்தியா முழுக்க இருந்து ஐந்து நட்சத்திர, 7 நட்சத்திர ஹோட்டல்கள் சார்பில் பல அணிகள் கலந்து கொண்டன. அதில் தனி நபராக பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.
வெறும் டைம்பாஸ் இல்லை
“எல்லா பசங்களும் கிரிக்கெட் ஆடப் போகும் போது, நான் பூசணி, பப்பாளின்னு எதையாவது வாங்கி செதுக்கிக்கிட்டு இருப்பேன். டைம் பாஸுக்காக ஆரம்பித்த காய்கறி சிற்ப கலை, பிறகு என் வாழ்க்கையாகவே ஆகிவிட்டது. ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் மட்டும்
சிற்பம் செதுக்கிய நான் கடந்த 5 ஆண்டுகளாக ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி மலர்க்கண்காட்சிகள், சாரல் விழாக்கள், அரசு பொருட்காட்சிகள் என்று சிற்பங்களை செதுக்கிவருகிறேன்” என்கிறார்.
2010-ஆம் ஆண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் தமிழறிஞர்கள் 60 பேரின் உருவங்களை பூசணிக்காய்களில் சிற்பங்களாகச் செதுக்கி வைத்து, அன்றைய முதல்வர் மு.கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர் இளஞ்செழியன்.
கேரளா, பிகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் பல சிற்பங்களைக் காட்சிப்படுத்தி யிருக்கிறார்.
கிண்டல் போச்சு புகழ் வந்தாச்சு!
“நம்மூர் பொங்கல் பண்டிகையைப் போல தாய்லாந்து விவசாயத் திருவிழாவில் 14ம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வரும் ஒரு கலைதான் காய்கறி, பழங்களில் சிற்பம் செதுக்குவது. காய்கறி சிற்பக்கலையில் தாய்லாந்து ஸ்டைல், ரஷ்ய ஸ்டைல், அமெரிக்க ஸ்டைல் என்று இருக்கிறது.அதைப் போல நம்மூரில் விளைகிற காய்களைக் கொண்டு இந்திய ஸ்டைல் என்று புதிதாக ஒன்றை பிரபலப்படுத்த வேண்டும்” என்னும் ஆசையோடு இருக்கிறார் இளஞ்செழியன்.
“படைப்பாளிகள் அதிகம் உருவானால்தான் ஒரு கலை வளர்ச்சியடையும். எனவே, காய்கறி சிற்ப கலைஞர்களை உருவாக்கும் நோக்கத்தோடு யாழ் காய்கறி சிற்பக்கலையகம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறேன். ‘தேனியில இருந்துக்கிட்டு உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலை? ஒழுங்கா வெளிநாட்டுக்குப் போகலாம்ல’ என்று ஆரம்பத்தில் கிண்டலடித்தார்கள்.
இப்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர், ஒரு வாரப் பயிற்சிக்காக என்னைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று தன்னம்பிக்கையோடு பேசும் இளஞ்செழியன் கலையை பிரபலப்படுத்துவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகவும் சொல்லிக் கொடுக்கிறார்.
கைவசம் திறமை இருக்கு
“மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அசாத்தியமான திறமை இருக்கும். எனவே, அத்தகைய குழந்தைகளில் ஒருவரை இந்த சிற்பக்கலையில் உலக சாதனை படைக்க வைக்க வேண்டும் என்பது என் கனவு” எனச் சொல்லும்போது இளஞ்செழியனின் கண்கள் ஒளிர்கின்றன. வாய் பேசிக்கொண்டிருக்கும்போதே, காய்கறிகள் மீது கத்தி விளையாடிக் கொண்டிருந்தது. பேசி முடிக்கையில் அவை கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும், புத்தாண்டு வாழ்த்துக்களாகவும் புத்துருவம் பெற்றிருந்தன.
தென்மாவட்ட மக்களின் வளமான வாழ்வுக்காக முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கின் பிறந்த நாளான ஜனவரி 15ம் தேதி 152 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக காய்கறி ஓவியம் வரைவது, அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற உள்ள உலக அளவிலான கார்விங் போட்டியில் சாதிப்பதுதான் இவருடைய அடுத்த இலக்கு.