திரைப்படங்களில் பேசத் தயங்கும் பலவற்றை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் தளமாக யூடியூப் மாறியுள்ளது. சீரியஸான விஷயங்கள் மட்டுமல்ல அவ்வளவாகக் கையாளப்படாத பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இணைந்து வாழுதல், தன்பாலின ஈர்ப்பு போன்ற வழக்கத்துக்கு மாறான வாழ்க்கை முறைகளை மட்டும்தான் வெப் சீரிஸ் பேசவேண்டுமா, நவீனச் சூழலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மலரும் நட்பு,காதல், மோதல், சிநேகம் என வெவ்வேறான உறவின் சாயல்களை இயல்பாக நகைச்சுவையுடன் பேசலாமே என்கிறது ‘ஆவ்சம் மச்சி’ (Awesome Machi) என்ற யூடியூப்சீரிஸ்.
‘பிளாக் ஷீப்’ யூடியூப் வீடியோக்களில் அறிமுகமான இனியன் ‘ஆவ்சம் மச்சி’ மூலம் இளைஞர்கள் மனத்தில் இடம்பிடித்திருக்கிறார். இவரும் ரேடியோ மிர்ச்சி ஆர்.ஜெ.ராகவியும் இணைந்து கலகலப்பான தோழன் - தோழியாகக் கலக்குகிறார்கள். தன்னுடைய பெயரிலேயே இனியன் திரையில் தோன்றுகிறார். அவருடைய நெடுநெடு உயரத்துக்கு நேர்மாறான தோற்றத்தில் இருப்பதால், ‘மினியன்’-ஆக வருகிறார் ராகவி.
இதில் சுவாரசியம் என்னவென்றால், இனியனுக்கும் மினியனுக்கும் காதலி, காதலன் இருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரங்களும் சில வீடியோக்களில் வந்துபோகின்றன. ஆனால், இந்த உற்ற சிநேகிதர்கள் பிரிவதே இல்லை. ‘Bestie Series’-ல் இப்படியான ஏகப்பட்ட குறும்படங்களை இருவரும் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
தோழன் மீது அதீதமான பிரியமும் அதிகாரமும் கொண்ட தோழி எப்படி நடந்துகொள்வாள், உற்ற தோழியுடன் ஒரு நாள் செலவிடுவது எப்படிப்பட்டது, காதலன் – தோழன் இருவருமே அருகில் இருக்கும்போது இருவருடனும் இணக்கமாகவும் இயல்பாகவும் பழகும் தோழி என ஆண்-பெண் நட்பின் பல பரிமாணங்களைக் காட்டி, ‘இதுவல்லவோ நட்பு’ என்று சொல்லவைக்கிறார்கள்.