மு
ன்பு வீட்டுக்கொரு கவிஞர் என்றால், இன்று வீட்டுக்கொரு குறும்பட இயக்குநர். வீடியோ ரெக்கார்டிங் வசதியுடன் முப்பதாயிரம் ரூபாயில் டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் வந்துவிட்ட பிறகு குறும்பட உற்பத்தி தாறுமாறாகப் பெருகிவிட்டது. இவற்றில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை காதலும் காதல் நிமித்தமும்தான் கான்செப்ட்.
ஆனால், 25 வயது தினேஷ் என்கிற தமிழ் ஆப்தன் இதிலிருந்து விலகி, கவனிக்க வைத்திருக்கிறார். ஆவணப்படம், மியூசிக் வீடியோ ஆகிய இரண்டு வடிவங்களைச் சரியான கலவையில் இணைத்து ‘துப்பறிவு 2020’ என்ற தலைப்பில் ஒரு ஆவண - இசைக் காணொளியை உருவாக்கி, யூடியூப்பில் உலவவிட்டு வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களைத் தூய்மைப்படுத்துவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது தூய்மை இந்தியா திட்டம். ‘இலக்கை எட்ட முடியாத தூரத்துப் பச்சை’ என்று ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டு வரும் இதை, ஒரு குடிமகனின் உணர்வுபூர்வமான பார்வையில் முன்வைக்கிறது ‘துப்பறிவு 2020’ காணொளி.
“என் தாயவள் கலங்கிட விடுவேனோ…
என் தாயவள் கறைபட விடுவேனோ…
அவள் உடுத்திடும் சேலையைக் கிழித்திட விடுவேனோ…
விடுவேனோ நான் அவள் மகனல்லவா…”
- என்று மெலடியாகத் தொடங்கி, ராப், பாப், தமிழ் நாட்டுப்புற இசை எனப் பாடலின் மெட்டு பல இசை வடிவங்களின் கச்சிதமான சேர்க்கையால் கவர்ந்திழுக்கிறது. அதற்கேற்ப காட்சிகளோ மாசடைந்த நகரங்களின் நேரடி சான்றுகளாக நம் கண் முன்னால் விரிகின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியும் அம்பத்தூரின் ஒரு பகுதியும் சென்னைப் பெருநகரின் குப்பைக் கிடங்காக மாறிநிற்கும் அவலத்தைப் பறவைப் பார்வையாகக் காட்டியபடி, கங்கைக் கரையில் எரியும் சிதைகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் என இந்தியா முழுவதும் அழைத்துச்சென்று குப்பைகளுக்கு நடுவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தை உணர்த்துகிறது. காட்சிகளுக்குள் கொஞ்சம் சினிமாவுக்குரிய அம்சங்களையும் சேர்த்திருப்பதில் பார்வையாளர்களை முதல் பார்வையிலேயே பிரச்சினைகளுடன் இணைக்கும் தினேஷின் பிரச்சார முயற்சி சட்டென்று ஈர்க்கிறது.
சினிமாவுக்குள் வாய்ப்புகளைத் தேட குறும்படமெடுத்து அதை ‘விசிடிங் கார்டு’ போல் பயன்படுத்தும் உத்தி போன்றதுதான் இந்த காணொலி முயற்சியா என்று தினேஷிடம் கேட்டால், “ இல்லை, இசையை மாற்றத்துக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும் என்ற உந்துதல்தான் காரணம். என் தந்தை திரவியபாண்டியன் ஒரு சினிமா தயாரிப்பாளர்தான். சினிமா இயக்குவது இன்று எளிதில் நடந்துவிடக்கூடியதுதான். ஆனால், இசையையும் காட்சி ஊடகத்தையும் சமூகத்துக்காகப் பயன்படுத்த திரைப்படம்தான் வழி என்று கூறுவதை நான் ஏற்கமாட்டேன். இனவெறியை எதிர்த்துப் போரிட கறுப்பினச் சகோதரர்கள் கண்டறிந்த இசை ஆயுதம்தான் ‘ராப்’. ஆனால், அவர்கள் கண்டறியும் முன்பே ‘ராப்’ என்கிற இந்த ‘சொல்லிசை’யைத் தமிழர்களாகிய நாம் கண்டறிந்துவிட்டோம். கலிங்கத்துப்பரணியின் பல பாடல்கள் சொல்லிசையில் அமைந்தவைதான். உதாரணத்துக்குப் இந்தப் பாடலைக் கேளுங்கள் என்றபடி …
எடும்எடும் எடும்என எடுத்தோர்
இகல்வலி கடல்ஒலி இகக்கவே
விளைகனல் விழிகளின் முளைக்கவே
மினல்ஒளி கனலிடை பிறக்கவே
வளைசிலை உரும்என இடிக்கவே
- என்று கலிங்கத்துப் பரணி பாடல் ஒன்றின் சில வரிகளை கணீர் குரலில் ராப் இசையாகப் பாடிக்காட்டி அசத்துகிறார் தினேஷ். “ராப், பாப், நமது நாட்டுப்புற இசை போன்றவற்றை நல்ல தமிழ் வரிகளோடு இசையாக்கி அதையே சமூக மாற்றத்துக்கான ஊடகமாகப் பயன்படுத்த நினைத்தேன். அதற்கு என் நண்பர்களும் பங்களித்து வருகிறார்கள். முதலில் 2014-ல் தமிழர்கள் தங்கள் வரலாற்றுப்பெருமையை இழந்துவிட்டு ஏதோ வாழ்ந்தால் போதும் என்பதுபோல் திரிகிறார்கள் என்கிற பார்வையுடன் ‘தமிழ் எஸ்.ஓ.எஸ்’ என்ற பாடலை எழுதித் தயாரித்து, பாடி அதை இயக்கினேன். அந்த வரிசையில்தான் தற்போது ‘துப்பறிவு 2020’” என்கிறார்.
எப்படி இவரிடம் இத்தனை தமிழ் ஆர்வம்? “மதுரைதான் எனக்குச் சொந்த ஊர். என் தந்தை ‘தமிழ் தாங்கிச் சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதற்காக நிறைய தமிழ் அறிஞர்களும் தமிழ் எழுத்தாளர்களும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழ் வரலாறு குறித்து சிறுவயது முதலே கேட்டு வளர்ந்ததால் எனக்கு இயல்பாகத் தமிழ் வசமானது. எனக்கு ‘தமிழ் ஆப்தன்’ என்று புனைபெயர் வைத்ததும் ஒரு தமிழ் எழுத்தாளர்தான்” என்கிறார் தமிழ் ராப் இசைக்குள் உடைக்காமல் சொற்களை அடுக்கி இசைக் கட்டிடம் எழுப்பும் தினேஷ்.