ச
ர்வதேசச் சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் வெல்வதற்காகவும் ஸ்பான்சர்களைத் தேடியும் ஒருசேரப் போராடிவருகிறார் கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி பிரியங்கா. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் போட்டியில், 15 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் பங்கேற்ற பிரியங்கா, 7-க்கு 5.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
மேலும், ஓபன் பிரிவிலும் பதக்கம் வென்றுள்ளார். செஸ் போட்டியில் பிரியங்கா தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தாலும், அவரது வசதியின்மை அவரை முன்னேற விடாமல் தடுக்கிறது.
கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யலாயாவில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார் மாணவி பிரியங்கா. 2012-ல் தந்தையை இழந்த அவர், தன் தாயார் மருதாம்பாளுடன் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்துவருகிறார். 3-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே செஸ் விளையாடும் பிரியங்கா, 2010-ல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் போட்டியில் 3-ம் இடம் பிடித்தார்.
அதே ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கமும் 2015-ல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சப்-ஜூனியர் போட்டியில் 3-ம் இடத்தையும் வென்றார். அதே ஆண்டில் தூத்துக்குடியில் நடைபெற்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியிலும், கோவையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓபன் செஸ் போட்டியிலும் பிரியங்கா முதலிடம் பிடித்தார்.
“ஹங்கேரியைச் சேர்ந்த சர்வதேச செஸ் வீராங்கனை ஜூடித் போல்கர்தான் எனது ரோல் மாடல். சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே எனது லட்சியம். எனினும், எனது முயற்சிகளுக்கு வறுமைதான் தடையாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செல்ல ஸ்பான்சர்களை நாட வேண்டியிருக்கிறது.
ரெகுலர் ஸ்பான்சர்கள் யாரும் இல்லை. பெரிய நிறுவனங்கள் எனக்கு ஸ்பான்சர் செய்தால், சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் வென்று, நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தருவேன்.
தற்போது என் பாட்டியும் தாய் மாமாவும் உதவி வருகிறார்கள். உரிய வசதிகள் கிடைத்தால் இன்னும் சாதிக்க முடியும்” என்கிறார் பிரியங்கா.
அடுத்து அபுதாபியில் நடைபெற உள்ள கிராண்ட் மாஸ்டர் ஓபன் போட்டியில் பங்கேற்க பிரியங்கா திட்டமிட்டிருக்கிறார்.
சதுரங்கப் போட்டியில் வெற்றிகளைக் குவித்தாலும், வாழ்க்கை என்னும் சதுரங்க விளையாட்டில் வெல்ல, பிறரின் தயவை நாடிக் காத்திருக்கிறார் இவர்.