இளமை புதுமை

இவர்களை இணைத்தது இசை!

வி.பாரதி

ந்த இசைக் குழுவினரைக் கல்லூரி மேடைகள், மக்கள் அதிகம் கூடும் மால்கள், திருமண மேடைகள் என எங்கேயாவது பார்த்திருக்கக் கூடும். ‘சினெர்ஜி-தி பேண்டு’ (Synergy-The band) என்ற பெயரில் களைகட்டும் கச்சேரிகளை நடத்திக்கொண்டிருக்கும் இசைக் குழுவிலுள்ள எழுவரும் கல்லூரி நண்பர்கள். ஒவ்வொருக்கும் உள்ள தனித்தனி இசை ஆர்வத்தை ஒன்றாக்கி, தற்போது கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

சாய் விக்னேஷ், ரோஷன் (பாடகர்கள்), சதீஷ் (கீபோர்டு), ஆசிம் (கிடார்), ஆதித்யா கோபி (பாஸ் கிட்டார்), மொய்சன் (டிரம்ஸ்) எனக் குழுவாகச் செயல்படும் இவர்களை ஒன்றிணைத்தது ‘சினெர்ஜி’ என்றாலும், அதற்கு மூல காரணமாக அமைந்தது லயோலா கல்லூரிதான். இவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டது அங்கே படிக்கும்போதுதான். தன்னைப் போல் திறமையும் இசை ஆர்வமும் இருப்பவர்களைக் கண்டதும் இயல்பாகவே ஒரு குழுவாக இணைந்து செயல்படத் தொடங்கி உருவானதுதான் ‘சினெர்ஜி- தி பேண்டு’.

தொடக்கத்தில் இக்குழுவினர் தங்களது இசைத் திறமைக்கேற்ப தனி கவர் ஆல்பம் உருவாக்கி, அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவந்தனர். பிறகுதான் மேடைக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தனர். ஏராளமான மெல்லிசைப் போட்டிகளிலும் பங்கேற்று, பரிசுகளையும் வென்றிருக்கின்றனர். தற்போது தேசிய அளவிலான இன்னிசைப் போட்டிகளில் பங்கேற்க இவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். “உள்ளூர் போட்டிகளைவிட தேசிய அளவிலான போட்டிகளையே அதிகம் விரும்புகிறோம்.

போட்டி வலுவானதாக இருக்கும். அப்போதுதான் எங்கள் திறனை மேம்படுத்தவும் நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். போட்டியில் வெற்றி தோல்வி முக்கியம் அல்ல. நம் திறமையை வளர்க்கவும் நிரூபிக்கவும் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்” என்கிறார் பாஸ் கிடார் வாசிக்கும் ஆதித்யா கோபி.

இந்தக் குழு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்னும் இசையின் மீதுள்ள ஆர்வம் குறையாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. சினிமாவில் பாட ஆசை இல்லையா என்று கேட்டால், “முன்பைவிட இப்போது பாடுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். சொந்தமாகப் பாடல்களை எழுதுகிறார்கள். இணைய உதவியுடன் பாட்டை வீடியேவாகப் பதிவுசெய்து பதிவேற்றி, பார்வையாளர்களையும் பெறுகிறார்கள். இதனால் சினிமாவில் பாட கடும் போட்டி நிலவுகிறது. வாய்ப்பு கிடைத்தால் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம்” என்கிறார்கள் பாடகர்கள் ரோஷனும் சாய் விக்னேஷும்.

தமிழ்ப் பாட்டுகள் பாடுவதோடு நிற்காமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளைத் தழுவிய பாடல்களையும் பாடி வருகிறார்கள் இவர்கள். தங்களைப் போன்ற திறமைவாய்ந்த இசைக் கலைஞர்களைக் குழுவில் இணைத்து ஊக்குவிக்கத் தயாராகவும் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

அவர்களது முகநூல் பக்கம்: https://www.facebook.com/synergythemusicband

SCROLL FOR NEXT