இளமை புதுமை

இளமைத் துடிப்பு பெறும் உலகம்!

எம்.சூரியா

ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் தினம்

உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் இளைஞர்களே மிகப்பெரிய சொத்து. அந்த வகையில் உலகளவில் அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியாவும் சீனாவும் மனிதவள ஆற்றலில் சிறந்து விளங்கி வருகின்றன. ஐ.நா. சபை அறிவித்த இந்த இளைஞர்கள் பலத்தில், உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவுக்கு (26.9 கோடி) இரண்டாம் இடம்தான். உலக மக்கள் தொகையில் 24 வயதுகுட்பட்ட சுமார் 35 கோடி இளைஞர்கள் இருப்பது இந்தியாவில்தான். இதன் காரணமாகபே மிக இளமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

‘இளைஞர்களின் எண்ணங்கள்தான் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும்’ என்று அப்போதே சொல்லிவிட்டு சென்றார்கள் மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற தீர்க்கதரிசிகள். அன்று அவர்கள் கணித்த நம்பிக்கை, 21-ம் நூற்றாண்டில் சரியாகவே இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் மட்டுமல்ல, அந்த நாடு எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் இளைஞர்களே.

தீவிரவாதத்தின் புகலிடங்களில் ஒன்றான பாகிஸ்தானில், உலகிற்கே முன்னுதாரணமாக திகழும் யுவதியாக வலம் வருகிறார் மலாலா. ஐ.நா. சபை தொடங்கி உலகளவில் பிரபலமான எந்த ஒரு சர்வதேச அமைப்பும் அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. இதற்கு ஒரே காரணம், சமூக பாகுபாடுகளை புறம் தள்ளி, பெண்களும் கல்வி கற்க வேண்டும், சம உரிமை பெற வேண்டும் என்ற ஒற்றை விஷயத்தை மலாலா தனது உயிருக்கும் மேலான கொள்கையாக கடைப்பிடித்து வருவதுதான்.

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி மரணத்தின் விளிம்புவரை சென்றாலும், இளம்பெண்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்படும் மலாலா உலக இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். பாகிஸ்தானைப் போன்று, பயங்கரவாதத்தின் தாக்கம் அதிகமுள்ள ஒரு நாட்டில், இளைஞர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்பதற்கு மலாலாவைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?

மக்கள்தொகை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சம் தொட்டுள்ளது இந்த உலகம். சுமார் 180 கோடி இளைஞர்களுடன் இந்த உலகம் உத்வேகத்துடன் சுழன்றுக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களிலேயே காலத்தை கழிப்பதாகச் சொல்லப்பட்ட இளைஞர்கள், அதே இணையதளத்தை பயன்படுத்தி, இன்று பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் மூலம், லட்சக்கணக்கான இளைஞர்கள் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க சென்னை மெரினா கடற்கரையில் குவிந்ததை மறந்துவிட முடியாது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகக் கரம் கோத்த இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுவார்கள் என்று நம்பலாம்.

இளைஞர்களின் ஒற்றுமையும், இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும்தான் இன்று இந்தச் சமூகம் அவர்களிடம் எதிர்பார்க்கிறது. எதைச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர் இளைஞர்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் இளைஞர் சக்தியை உலகுக்கு உணர்த்திய வகையில், இந்த ஆண்டு சர்வதேச இளையோர் தினம் இளைஞர்களுக்கெல்லாம் ஸ்பெஷலானதுதான்.

SCROLL FOR NEXT