‘நூறு நாட்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள் ஒரே வீட்டில். ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது, ஐ வில் பி வாட்சிங்’ எனச் சொல்லிச் சொல்லியே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டியது அதனுடைய முன்னோட்டம் (புரோமோ). திரைப்படங்களுக்குப் போஸ்டர், டிரெய்லர், டீஸர்போலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக் கவன ஈர்ப்பை ஏற்படுத்துபவை இத்தகைய முன்னோட்டங்கள்தான். அதேபோல பொருட்களை வாங்க ஈர்ப்பவை விளம்பரப் படங்கள். விளம்பரங்களாலும் புரோமோக்களாலும் ஈர்க்கப்பட்டுப் பொருட்களை வாங்குகிறோம், நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோமே தவிர அவற்றை உருவாக்குவது யார் என்று யோசித்திருக்கிறோமா? ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் உட்பட சமீபக் காலமாக நம்மைக் கவர்ந்த பல விளம்பரப் படங்களைத் தயாரித்தவர்கள் ‘கதை ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் (‘Kadhai Films’).
இந்நிறுவனத்தைக் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் நடத்திவருகிறார்கள், ஃபரூக் முகமது, ஜார்ஜ் ஆண்டனி, ஹரி உதயகுமார் ஆகிய இளைஞர்கள். “நாங்க வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவங்க, வெவ்வேறு விதமா யோசிக்கிறவங்க. எங்கள ஒண்ணு சேர்த்தது சென்னையும் தமிழும்தான்” என்கிறார்கள் கோரஸாக. மூன்று பேரும் முதலில் சந்தித்தது அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில். அங்கு முதுகலை ‘ஃபிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேஷன்’ படிக்கும்போது நண்பர்களானவர்கள் இப்போது பணித் துணையாகிவிட்டார்கள்.
திறமை இருந்தது ரூபாய் இல்லை!
“ஃபிலிம் கோர்ஸில் மூணு பேருமே டைரக்ஷன் படிச்சாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். ஜார்ஜ் திரைக்கதை எழுதுறதுல கில்லாடி, ஹரி கிராபிக்ஸ் டிசைனிங்குல அசத்துவார், எனக்கு ஃபோட்டோகிராஃபிதான் ரொம்ப பிடிக்கும். அதேபோல படங்கள் பார்க்குறதுலயும் மூணு பேரோட டேஸ்ட்டும் வேறவேற. என்னோட சாய்ஸ் இரானிய சினிமா, ஜார்ஜூக்கு ஹிட்ச்காக், குவிண்டின் டாரண்டினோ படங்கள், ஹரிக்கு மணிரத்னம் படங்கள். ஆனால் மூணு பேரும் நல்ல நண்பர்கள். கல்லூரி நாட்களிலேயே பல குறும்படங்கள் சேர்ந்து எடுத்தோம்.
படிச்சு முடிச்சதும் விளம்பரப் பட கம்பெனி ஆரம்பிக்கலாம்னு யோசனை வந்துச்சு. எனக்கும் ஜார்ஜூக்கும் சொந்த ஊரு மதுரை. ஆனால் நான் யு.ஜி. படிச்சது சென்னை கவின்கலைக் கல்லூரியில், ஜார்ஜ் படிச்சு வேலை பார்த்ததெல்லாம் மும்பையில். ஹரிக்கு சென்னை சொந்த ஊரு; ஆனால் அவர் படிச்சு வேலை பார்த்தது பெங்களூரூல. இப்படி ஊரு, விருப்பம், திறமைனு அத்தனையிலும் வெவ்வேறா இருந்த எங்களை முதல்ல ஒண்ணு சேர்த்தது தமிழ்தான். மும்பையில விளம்பர நிறுவனம் தொடங்கினால் அங்க பத்தோட பதினொன்னா காணாமப் போயிடுவோம். அதனால சென்னையிலேயே ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்தோம். எங்களுடைய நிறுவனத்துக்கு மூலதனம் எங்களுடைய அறிவும் திறமையும்தான். ஒரு ரூபாய்கூடக் கையில இல்லாமத்தான் ஆரம்பிச்சோம்” என்கிறார் ஃபரூக்.
வசனத்தைக் காட்சி ஆக்கினோம்!
விளம்பரப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ‘கதை ஃபிலிம்ஸ்’ என்கிற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், “எல்லார் கிட்டையும் சொல்றதுக்கு ஒரு கதை இருக்கும். அதை அழகா காட்டுறதுதான் எங்க வேலை. அதுக்கு இசை, ஆடை அலங்காரம், நிறக்கலவை, கலர் டோன் - மூட் இப்படிப் பல விஷயங்களைச் சரியான கலவைல தரணும். இது எல்லாமே கதைங்கிற வார்த்தையில அடங்கியிருக்கு” என்கிறார் ஜார்ஜ்.
“சும்மா ஒரு பொருள விக்கிறதுக்காக விளம்பரத்தை உருவாக்குறதுல எந்தச் சுவாரசியமும் இல்ல. எங்களை ஈர்க்கலைனா நாங்க புரோமோ, விளம்பரம் எதையும் ஒத்துக்க மாட்டோம். ‘பிக் பாஸூ’க்கு புரோமோ தயாரிக்கணும்னு எங்ககிட்ட சொன்னப்ப வெறுமனே செட்டுல நின்னுகிட்டு கமல் வசனம் பேசுற மாதிரி ஒரு ஐடியா மட்டும்தான் கொடுத்தாங்க. உடனே நாங்க மூன்று விதமான ‘விஷுவலைசேஷன் ஸ்கிரிப்ட்’ (‘Visualization Script’) எழுதினோம். அது நிகழ்ச்சிக்கான புரோமோஷனா மட்டும் இல்லாம பெரியதிரையில இருந்து சின்னத்திரைக்குக் கமல் முதல்முதலாக வரப்போறது, ரியாலிட்டி ஷோ என்கிற கான்செப்டல நேரடியா மக்களோட தொடர்புக்கு வரப்போறது இப்படிப் பல விஷயங்களைக் காட்சிப்படுத்தி எழுதினோம். அதிலிருந்து ரொம்ப பிடிச்சதை கமல் தேர்ந்தெடுத்து, நடிச்சார்” என்கிறார் ஜார்ஜ்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்காக நடிகர் சூர்யா, பிரபுதேவா, கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் உட்படப் பல பிரபலங்களை வைத்து 2016-ல் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ, சென்னை தினத்தைக் கொண்டாட ‘மெட்ராஸ் ஃபீட்ஸ்’, பிரீமியர் கிரிக்கெட் லீக்குக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஆந்தம் சாங்க்’-ஐ அனிருத் வைத்து வீடியோ பாடல் - இப்படி ‘கதை ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் ஒவ்வொரு வீடியோவும் பேச வைக்கிறது.
திரைப்பட இயக்கத்தை படித்துவிட்டு நேரடியாக இவர்கள் களத்தில் குதித்துவிட்டார்களா என்றால், “இல்லை. நாங்க மூணு பேருமே சில வருடங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தோம். நான் சில ஆண்டுகள் ஆமிர்கானோடு ‘சத்ய மேவ ஜெயதே’ நிகழ்ச்சியில கண்டண்ட் டெவலபராக இருந்தேன். இப்படி பல அனுபவங்கள் எங்களை செதுக்கியிருக்கு” என்கிறார் ஜார்ஜ்.
இதுவரை பிரபல நிறுவனங்களுக்கு விளம்பரப் படங்களைத் தயாரித்துவந்த கதை பாய்ஸியிடம் இப்போது சினிமாவில் கதை சொல்லத் திரைக்கதையும் தயாராம்!