ஓட்டல்களில் மனிதர்கள் உணவு பரிமாறிய காலம் போய், இப்போது ரோபோக்கள் உணவு பரிமாறும் நிலை வந்துவிட்டது. பாகிஸ்தானின் பிரபல நகரங்களில் ஒன்றான முல்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் ரோபோக்கள்தான் வாடிக்கையாளர்களை வரவேற்று உணவு பரிமாறுகின்றன.
அந்த ஓட்டலின் பெயர் ‘பீட்சா.காம்’. இந்த உணவகம் சமீபத்தில் ரோபோக்களை ஓட்டலில் களம் இறக்கியிருக்கிறது. ரோபோக்களை அறிமுகப்படுத்திய ஐந்தே மாதத்தில், இந்த பீட்சா உணவகம் அந்த ஊரில் பிரபலமான உணவகமாக மாறிவிட்டது. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ரோபோ பணியாளர்களின் டிரெண்ட் இப்போது பாகிஸ்தானுக்கும் பரவியிருக்கிறது.
ஒசாமா ஜஃப்ரி என்ற இளம் பொறியாளர் வடிவமைத்திருக்கும் இந்த 25 கிலோகிராம் ரோபோக்கள், வாடிக்கையாளர்களை வரவேற்று, பீட்ஸா பரிமாறுகின்றன. ‘ராபியா’, ‘ஜென்னி’, ‘அன்னி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோக்கள், ‘ஏப்ரனு’டன் வண்ண வண்ண கழுத்துக்குட்டைகளை அணிந்து பீட்ஸா பரிமாறுவது வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பலரும் ரோபோக்களுடன் செல்ஃபி எடுக்கவே இந்த உணவகத்துக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோக்களால் ‘பீட்ஸா.காம்’ உணவகத்தின் விற்பனை இரு மடங்கு அதிகரித்துவிட்டதாம். இந்த ரோபோக்களை வடிவமைத்த ஒசாமாவின் தந்தை அஸிஸ்தான் ‘பீட்ஸா.காம்’ உணவகத்தின் உரிமையாளர். “எங்களிடம் இதே மாதிரி இன்னும் மூன்று ரோபோக்கள் இருக்கின்றன. அதை வைத்து புதிய கிளை தொடங்கலாம் என்று நினைத்திருக்கிறோம். நான் பீட்ஸா மட்டும்தான் விற்றுகொண்டிருந்தேன். ஆனால், இப்போது பல உணவக உரிமையாளர்கள் என்னை ரோபோக்கள் விற்பனை செய்வீர்களா என அணுகத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று சொல்கிறார் அஸிஸ்.
பாகிஸ்தானில் வணிக நோக்கில் இயங்கும் முதல் ரோபோ இதுதான். இந்த ரோபோக்களை 5 கிலோ எடை வரையுள்ள உணவைத் தூக்க வைப்பது, தேவைப்படும் மேசைகளுக்கு அனுப்புவது போன்ற வேலைகளை வாங்க தொடக்கத்தில் சிக்கல்கள் இருந்திருக்கின்றன. இப்போது, அது போன்ற பெரும்பாலான பிரச்சினைகளைச் சரிசெய்துவிட்டது ஹோட்டல் நிர்வாகம்.
மொத்தமும் ரோபோமயமாக மாறாமல் இருந்தால் சரி!