ஒரு மாநிலத்தின் முக்கிய உணவு வகைகள் இன்னொரு மாநிலத்தில் கிடைப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் சாலையோரங்களில் விற்கப்படும் எளிய உணவு வகைகள் சுவை மாறாமல் இன்னொரு மாநிலத்தில் கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், சென்னையைச் சேர்ந்த ஆஷ்ருத் ரங்கராஜன் என்ற 22 வயது இளைஞர் அதை சாத்தியமாக்கியிருக்கிறார். ஆமாம், பெங்களூரு சாலையோர உணவு வகைகளை சென்னையில் கிடைக்க செய்திருக்கிறார். இதற்காக சென்னை கீழ்பாக்கத்தில் 'ஈட்டிங் சர்க்கிள்ஸ்' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
காலை உணவு நேரம் முடியும் பத்து மணிவரை உணவகத்தில் கூட்டம் நிரம்பிவழிகிறது. கர்நாடகாவின் விதவிதமான தோசைகள், தட்டு இட்லி, சாபூதான பொங்கல் (ஜவ்வரிசி பொங்கல்), முந்திரி ரோஸ் மில்க் என பல வகைகள் இந்த உணவக த்தில் பரிமாறப்படுகின்றன. சென்னைவாசிகளுக்கு பெங்களூரு சாலையோர உணவகங்களின் சுவையான உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆஷ்ருத். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் உணவகத்தை நிர்வகித்தப்படியே இந்த உணவகம் ஆரம்பித்த பின்னணியைச் சொல்லத் தொடங்கினார் ஆஷ்ருத்.
“10 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக ஒரு விழாவில் தட்டு இட்லி யைச் சாப்பிட்டேன். அதிலிருந்துதான் கர்நாடக உணவின் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. கர்நாடகாவுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கே கிடைக்கும் விதவிதமான உணவு வகைகளின் சுவையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நண்பர்களுடன் பெங்களூரு செல்லும்போதெல்லாம் அங்கேயிருக்கும் சாலையோர உணவகங்களில் ருசித்து சாப்பிடுவேன். அப்போதுதான், சென்னையில் ஏன் இப்படி ஓர் உணவகத்தை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது.
தொடக்கத்தில் கர்நாடக உணவுக்கு இங்கே ஆதரவு இருக்குமா என்று யோசித்தேன். ஆனால், எனக்குத் தனிப்பட்ட முறையில் பெங்களூரு சாலையோர உணவுகள் மீது ஈர்ப்பு பிறருக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஹோட்டலை தொடங்கினேன்” என்று சொல்கிறார் ஆஷ்ருத். பி.காம். முடித்திருக்கும் இவர், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முதலீட்டு மேலாண்மை பிரிவில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இந்த உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார்.
கர்நாடக உணவைத் தேடி...
உணவகம் தொடங்கலாம் என்று முடிவுசெய்த பிறகு, அதற்கான களப்பணிகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் ஆஷ்ருத். கர்நாடக உணவு வகைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். அங்கேயிருக்கும் செஃப்களிடம் புதிய ரெசிபிகளைப் பற்றி கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார்.
“கர்நாடக உணவு வகைகளைப் பற்றி போதிய அளவுக்குத் தெரிந்து கொண்டபிறகும், உடனடியாக உணவகத்தைத் தொடங்கவில்லை. கிட்டத்தட்ட 45 நாட்கள் பல்வேறு கர்நாடக உணவு வகைகளை ‘டிரையல்’ செய்துபார்த்தோம். கர்நாடகாவில் கிடைக்கும் அதே சுவையைக் கொண்டுவருவதற்காக ஓர் உணவைப் பலமுறைக்கூட செய்துபார்த்திருக்கிறோம். அத்துடன், பெங்களூரு சாலையோர உணவகங்களின் வடிவமைப்பைப் பின்பற்றி ‘ஸ்டாண்ட்-அண்ட்-டைன்’ வகையிலேயே ஓட்டலை வடிவமைத்தோம்” என்கிறார் ஆஷ்ருத்.
என்ன சாப்பிடலாம்?
பொதுவாக பெங்களூரு சாலையோரங்களில் நீர் தோசை, சிவப்பரிசி தோசை, நெய் தோசை, ‘ஓபன்’ மசாலா தோசை, தட்டு இட்லி, ‘சாபூதான’ (ஜவ்வரிசி) பொங்கல் மிகவும் பிரபலம். இந்த உணவு வகைகள் எல்லாம் இந்த ஹோட்டலில் கிடைக்கின்றன. பெங்களூரு உணவைச் சுவைக்க விருப்பமிருக்கும் சென்னைவாசிகள் இந்த உணவகத்தை தைரியமாக முயற்சி செய்து பார்க்கலாம்.
தொடர்புக்கு: ஈட்டிங் சர்க்கிள்ஸ், 132, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை. நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 3.30 முதல் 10.30 மணி வரை.