சிறைக் கைதிகள் என்றால் சிறையில் வரிசையாக நின்று உணவைப் பெற்றுக்கொள்ளும் பிம்பம் நமக்கு ஞாபகம் வரும். ஆனால், சிம்லாவில் ஒரு ஹோட்டலில் சிறைக் கைதிகள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படாதீர்கள், அந்த ஹோட்டலையே அவர்கள்தான் நடத்துகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் நான்கு சிறைக் கைதிகள் சேர்ந்து சிம்லாவில் ஒரு புத்தக கஃபேவை தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வாரம், இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் இந்தப் புத்தக கஃபேவைத் தொடங்கிவைத்திருக்கிறார். இந்த கஃபேவுக்கு வரும் புத்தகப் பிரியர்கள் பீட்சாவையும் குக்கீஸையும் சுவைத்தபடி தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம்.
சிம்லாவின் புகழ்பெற்ற ஜக்கு கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கஃபேவில் நாற்பது பேர் அமர்வதற்கான வசதி இருக்கிறது. அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை இருபது லட்சம் ரூபாய் செலவில் இந்த முன்மாதிரி கஃபேவைத் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
சிம்லாவில் ‘கைத்து’ சிறையின் ஆயுள் தண்டனைக் கைதிகளான ஜெய் சந்த், யோக் ராஜ், ராம் லால், ராஜ் குமார் என்ற நான்கு பேர் இந்த கஃபேவைத் தற்போது நடத்திவருகின்றனர். இவர்களுக்கு சிம்லாவின் பிரபல உணவகம் ஒன்று குக்கீஸ் செய்யவும் பீட்சா செய்யவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. “சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இதை முன்னெடுத்திருக்கிறோம்” என்று சொல்கிறார் கைத்து சிறையின் பொது இயக்குநர் சோமேஷ் கோயல். இவர் கைதிகள் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகச் சிறையில் இசை வகுப்புகள் எடுப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்கு இந்த கஃபே எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறது” என்கிறார் ஜெய்சந்த்.
இந்த கஃபேவில் பணியாற்றும் மற்றொரு நபரான யோக் ராஜ், “நாங்கள் விடுதலையானதும் எங்களுக்கு வேலை கிடைப்பதற்கு இந்த அனுபவம் பெரிதும் உதவும். அத்துடன், நாங்கள் நால்வரும் முழு சுதந்திரத்துடன் இந்த கஃபேவில் இயங்குகிறோம். இங்கு வரும் வாடிக்கையாளர்களும் எங்களுடன் வித்தியாசமாக நடந்துகொள்வதில்லை. அதற்கு மாறாக, எங்களுடைய இந்த மாற்றத்தை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்” என்கிறார்.
இவர்கள் நான்கு பேரும் காலை பத்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கஃபேவில் பணியாற்றுகிறார்கள். அதற்குப் பிறகு, சிறைக்குச் செல்கிறார்கள்.
‘வைஃபை’ வசதியும், சிறந்த புத்தகங்களும் இருப்பதால் புத்தகப் பிரியர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஆரம்பித்த ஒரே வாரத்திலேயே இந்தப் புத்தக கஃபே பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது.
- கனி