சே குவேரா. உலக அண்ணனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அமெரிக்காவை நடுங்க வைத்த பெயர். அமெரிக்காவுக்கு அருகிலேயே கியூபா என்ற குட்டித் தீவில் இருந்துகொண்டு அமெரிக்காவை நடுங்க வைத்த இன்னொரு புரட்சியாளரான ஃபிடல் காஸ்ட்ரோவின் சகாவாகச் செயல்பட்டவர்.
அவரை வெறும் டிஷர்ட் பிம்பமாகக் குறுக்கிவிட அமெரிக்கா முயன்றது. ஆனால், இன்றைக்கும் மார்க்சியத்தைக் கற்காதவர்களின் மனதில்கூடப் புரட்சியாளராகப் பதிந்தவர் சேகுவேரா. உலகின் மூலை முடுக்குகளில் எதிர்ப்பின் அடையாளமாக இருப்பவர். உலகில் அதிகமாக அறியப்பட்ட அரசியல் முகமும் சே குவேராதான்.
சாகச வாழ்க்கை
சே குவேராவின் மொத்த வாழ்க்கையையும் எளிமையாகத் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் படக்கதையாக வந்திருக்கிறது ஸ்பெயின் ரோட்ரிக்ஸின் காமிக்ஸ் நூல். இந்த நூல் தமிழில் பயணி வெளியீடாக வந்திருக்கிறது. படக்கதை வடிவில் ‘சே வாழ்க்கை வரலாறு’ என்ற இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இரா. செந்தில்.
சே குவேரா மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது, தன் நண்பருடன் தென்னமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிள் மூலம் எளிய சாகசப் பயணத்தைத் தொடங்கினாலும், பின்னால் பல நாடுகளின் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் புரட்சிகர அரசியல் சாகசமாக அவரது வாழ்க்கை உருவெடுத்தது.
படக்கதைப் பேழை
ஒரு புரட்சிகரத் தலைவரின் வாழ்க்கையை 100 பக்கங்கள் கொண்ட ஒரு படக்கதைப் பேழைக்குள் அடைப்பது மிகவும் கடினம். ஆனால், இந்தப் புத்தகம் அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறது. இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம் ஸ்பெயின் ரோட்ரிகஸின் சட்டென்று கவர்ந்துவிடக்கூடிய கோட்டோவியங்கள்.
அவரைப் பற்றித் துண்டு துண்டாக ஏற்கெனவே அறிந்தவர்களுக்கு இந்த நூல் புரிதலை மேம்படுத்தும். அதேநேரம், சே குவேராவைப் புதிதாக அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நூலில் உள்ள இடைவெளிகள்-தொடர்பற்று இருப்பது போலத் தோன்றும் பகுதிகள் - புரிதல் குறைபாட்டை ஏற்படுத்தலாம். ஆங்கிலத்தில் பல இடங்களில் சம்பவங்கள் தாவிவிடுகின்றன. தமிழில் அவற்றை விரிவாக விளக்கியிருக்கலாம்.
இந்த நூல் செழுமைப்படுத்தப்பட்டு, எளிமையாக்கப்படும் நிலை யில் பதின்மவயதினரும் படிக்கக்கூடிய முக்கியப் படைப்பாக மாறும்.
தொடர்புக்கு: 9445124576