இளமை புதுமை

வேண்டும் ‘மாற்று விண்ணப்பம்!

வா.ரவிக்குமார்

மாற்றுப் பாலினம் சார்ந்தவர்களின் தொடர் முயற்சிகளாலும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களின் முயற்சிகளாலும், உச்ச நீதிமன்றத்தாலேயே மூன்றாம் பாலினத்தவர் என்னும் தீர்ப்பைப் பெற்றிருக்கின்றனர். ஆனாலும் பால் விருப்பம் சார்ந்த தனி மனித உரிமைக்கு எதிரான இந்திய சட்டப் பிரிவு 377 நீக்குவதற்குத் தொடர்ந்து போராடிவருகின்றது ‘மாற்றுப் பாலீர்ப்புச் சமுதாயம்’ எனும் அமைப்பு.

மாற்றுப் பாலினம் குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தின் பல பிரிவினருக்கும், குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கிவருகிறார் சந்திரமௌலி. அவரும் ஒரு ஐ.டி. பணியாளர்!

கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஓர்லாண்டோ நகரத்திலுள்ள மாற்றுப் பாலீர்ப்பு விருப்பம் உள்ளவர்கள் கூடியிருந்த ஒரு மதுக்கூடத்தில், கண்மூடித்தனமாக ஒருவர் சுட்டதில் 40-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அந்தச் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு வந்திருக்கும் சந்திரமெளலி, “இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் மாற்றுப் பாலினச் சமுதாயத்தினரோடு பொதுமக்களும் இணைந்து போராடினர். இதுபோன்ற ஒற்றுமை இந்தியாவில் வர வேண்டும்” என்கிறார். மேலும் எம்.என்.சி. நிறுவனங்களில் மாற்றுப் பாலினம் சார்ந்து செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கினார்.

“பன்னாட்டு நிறுவனங் களுக்கென இருக்கும் விதிமுறைகளை அலுவல கத்தில் நடைமுறைப்படுத்தச் சொல்கிறோம். அலுவலகத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை ‘இந்த விதிமுறைகள் நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கின்றன’ என்னும் தெளிவை, விழிப்புணர்வை உண்டாக்குகிறோம். பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

கொள்கைகளை நடைமுறைப்படுத்துங்கள்

ஒருவரின் நிறம், பால், பாலீர்ப்பு, சாதி முதலான அடையாளங்களால் ஒதுக்கப்படுவது குற்றம் என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் கொள்கையாக இருக்கும். அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாகத்தான் மாற்றுப் பாலீர்ப்புக் கொண்டவர்களும்/ பாலினத்தவர்களும் பயமின்றி நிறுவனங்களில் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியும் என்னும் உண்மையை நிறுவனத்தில் இருப்பவர்களுக்குப் புரிய வைக்கிறோம்.

மாற்றத்தின் பலன்

சமீபத்தில் பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் நடந்த மாற்றுப் பாலீர்ப்பு கொண்டவர்கள்/ பாலினத்தவர்கள் நடைப் பயணத்தில்கூட சில பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்தியாவின் பல மாநிலங்களின் நகரங்களிலும் நடைபெறும் மாற்றுப் பாலீர்ப்பு கொண்டவர்கள்/ பாலினம் சார்ந்தவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் பேரணிகளிலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் எங்களைப் போன்றவர்களின் முயற்சியால், தற்போது பல நிறுவனங்களே தாமாக முன் வந்து இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கின்றன.

பெயர்க் குழப்பத்துக்கு ஓர் ஆலோசனை

பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் தங்களின் பெயரை மாற்றிக் கொள்கின்றனர். உதாரணமாக, சில பெண்கள் திருமணத்துக்குப் பின் தங்களின் பெயரை மாற்றிக் கொள்கின்றனர். பெரும்பாலான விண்ணப்பங்களில் பெண் விண்ணப்பதாரரின் புதிய பெயரைத் தொடர்ந்து, அவரின் ‘மெய்டன் பெயர்’ (maiden name) என ஒரு பத்தி இருக்கும். அதன் மூலம் அவர்கள் தங்களது திருமணத்திற்கு முன்பு இருந்த பெயர்களில் உள்ள கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதுபோலவே, சான்றிதழ்களில் பெயர் மாற்றம் செய்ய முடியாத மாற்றுப் பாலினத்தவருக்குத் தங்களது பழைய பெயரிலுள்ள சான்றிதழ்களைப் பயன்படுத்தும்படி விண்ணப்பங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். சான்றிதழ்களில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு அவர்களது பழைய பெயரைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என அறிவிக்கலாம்.

நிறுவனங்களின் பணி நியமனங்களில் ஏற்படும் இந்த மாற்றம், தங்களின் புதிய பெயரை எல்லாச் சான்றிதழ்களிலும் மாற்றுவதற்கு வழியில்லாத, மாற்றுப் பாலினம் சார்ந்தவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். அப்போதுதான் பணியின் எல்லா மட்டங்களிலும் மாற்றுப் பாலினம் சார்ந்தவர்களுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்” என்கிறார் சந்திர மௌலி.

SCROLL FOR NEXT