எங்கு நோக்கினும் ஒளிப்படங்களும் காணொளிகளும் குவிந்து கிடக்கும் உலகில் பயணிக்க ஆரம்பித்துவிட்டோம். நம் கணினியிலும் கைபேசியிலும் ஆயிரக்கணக்கில் காட்சிகள் வந்து கொட்டுகின்றன. ஆனால், எல்லாமே நம் மனதைத் தைப்பது இல்லை, நம் மனதில் ஊடுருவுவது இல்லை. அந்த ஆற்றலை ஒரு சில படங்களே கைவரப் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒளிப்படங்களுக்கு ‘உலகப் பத்திரிகை ஒளிப்பட விருது’ என்ற கௌரவம் கிடைக்கிறது.
இந்த உலக பத்திரிகை ஒளிப்படப் போட்டியை நெதர்லாந்து அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்துகிறது. எட்டுப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. துருக்கிக்கான ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லோவ் ஒரு கலைக்கூடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பவ இடத்தில் படங்களை எடுத்த புர்கான் ஓஸ்பிலிக்குக்குச் சிறந்த ஒளிப்படக் கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு கடந்த ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்ட 80,000 படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 சோறு பதங்கள் இங்கே:
உயிர்ப் பிச்சை
லிபியா இத்தாலி இடையிலான மத்திய தரைக்கடல் பகுதியில் கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்த இரண்டு அகதிகள் உயிர் பிழைக்க உதவி கோரி அழைத்தபோது. | படம்: மத்தேயு வில்காக்ஸ் / ஏ.பி.
ஓயாத கதறல்
ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தனது தந்தையின் உடலைப் பார்த்துக் கதறுகிறான் ஒரு சிறுவன். | படம்: செர்ஜெய் போனோமரேவ் / நியூயார்க் டைம்ஸ்
உலையில் இடப்பட்ட ஊர்
உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்கயா கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட வான்வழித் தாக்குதலில் தீப்பிடித்த வீட்டிலிருந்து உயிர் பிழைக்கத் தப்பி ஓடும் இருவர். அரசுத் தரப்பினருக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையிலான சண்டையில் இப்படி அப்பாவி மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். | படம்: வாலெரி மெல்நிகோவ்
தனியொருவள்…
அமெரிக்காவில் உள்ள லூசியானா நகரில் காவல் துறையின் அடக்குமுறையால் கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில், விலங்கு பூட்டப் பட்டுக் கைதாவதற்காகத் தனது கைகளை நீட்டுகிறார் செவிலியர் லெஷியா இவான்ஸ், தான் இருந்த இடத்தில் இருந்து சற்றும் நகராமல். | படம்: ஜோனதன் பாஷ்மன் / ராய்ட்டர்ஸ்
மாற்றத்தின் விளிம்பில்
கியூபத் தலைநகர் பழைய ஹவானாவில் ஒரு முடிதிருத்தும் கூடம். முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமானதற்குப் பிந்தைய காலம். | பாடம்: தாமஸ் முனிடா / நியூயார்க் டைம்ஸ்
இறுக்கும் சுருக்கு…
ஸ்பெயின் கானரி தீவுப் பகுதியில் டெனரிப் குடா அருகே மீன்பிடி வலையில் சிக்குண்டுத் தவிக்கும் கடல்ஆமை. | படம்: ஃபிரான்சிஸ் ஃபெரெஸ் / இ.பி.ஏ.
பந்துப் பாய்ச்சல்
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே குஸ்நெட்சோவுக்கு எதிராக ஃபிரான்ஸ் டென்னிஸ் வீரர் கயெல் மான்ஃபில்ஸ் காற்றில் பாய்ந்து பந்தை அடிக்க முயன்றபோது. | படம்: கேமரூன் ஸ்பென்சர் / கெட்டி இமேஜஸ்
இடைவேளை
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க ரக்பி அணியின் வீரர்கள் கலிஃபோர்னியா ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு இடையிலான இடைவேளையின்போது. | ஜே.எல். கிளென்டெனின் / லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்