இளமை புதுமை

உணர்ச்சிகள் என்னும் புதிர்

டி.எல்.சஞ்சீவி குமார்

பார்க்கும் போதெல்லாம் பாந்தமாகச் சிரித்த பக்கத்து வீட்டுக்காரர் திடீரெனத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அடுக்குமாடிக் குடியிருப்பையே அதிர வைக்கிறார். கணவனை மனைவி கொலை செய்கிறார். மனைவியைக் கணவன் கொல்கிறார். ஒரு குழந்தை கொலைசெய்யப்படுகிறது. சிலர் சிறுவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். மனித மனதின் குரூரங்களுக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது.

சிலருக்கோ தாங்கள் கோபக்காரன் என்று விளிக்கப்படுவதில் ஒரு கர்வம். அவர்களுக்குக் கோபம் என்பது கௌரவம் சார்ந்த விஷயமாகப் பதிவாகியிருக்கிறது. இயல்பாக இருப்பதாகத்தான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பதறவைக்கும் நிகழ்வுகளும் இவர்களாலேயே நடக்கின்றன.

இவையெல்லாம் புதியவை அல்ல. கற்காலத்திலிருந்தே நம்மிடம் இருக்கும் பழக்கம்தான். ஆனால் நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த இன்றைய காலகட்டத்திலும் இதெல்லாம் நடப்பது ஏன்?

இந்த குணங்களுக்கான வேர்கள் என்ன? இவை எப்படி உருவாகி வளர்ந்து கிளை பரப்புகின்றன?

உணர்ச்சிகளின் வேர் எது?

காதல், காமம், கோபம், வெட்கம், வேதனை, பொறாமை, தாய்மை, அன்பு, ஆவேசம், அபிநயம், நட்பு, நக்கல், எரிச்சல், எள்ளல், துள்ளல் ஆகிய உணர்ச்சிக் குவியல்களுகெல்லாம் அடிப்படை அறிவியல்தான். மனம் என்னும் மாயக்கிடங்கில் உற்பத்தியாகும் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதங்களில் தீர்மானமாகின்றன வாழ்வின் பயணங்கள். இவை எப்படி உருவாகின்றன என்பதைப் பற்றி யோசித்தால் அவற்றைக் கையாள்வது எளிதாகும். உணர்வுகளைக் கையாளத் தெரிந்துகொண்டால் வாழ்வை இனிதாக்கலாம். நோய்கள் உட்பட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் நம் அணுகுமுறையின் மூலம் எளிதாக்கலாம்.

காதலை எடுத்துக் கொள்வோம். அன்பை வெளிப்படுத்துவது எப்படி என்று தெரியாத இளைஞர்களால் கொலையுண்டவர்கள்தான் வினோதினியும் வித்யாவும். காதல் என்பது அன்பு. அன்புவயப்பட்ட மனம் எப்படிக் கொல்லத் துணிகிறது?

ஒருவரைப் பார்த்தவுடனே மூளையின் Pleasure centreஇல் (கிளர்ச்சி மையம்) Dopamine (டோபமைன்) என்கிற வேதிப் பொருள் பெருக்கெடுத்து சுரக்கத் தொடங்கினால் அதன் பெயர் காதல் ஈர்ப்பு. அதற்காக டோபமைன் என்பதைக் காதல் சுரப்பி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காதலுக்கு என்று தனி சுரப்பி எதுவும் இல்லை. அது ஒரு பரவசச் சுரப்பி. கிட்டத்தட்ட கோகைன் போதைப் பொருளை பயன்படுத்தும்போது ஏற்படும் பரவச நிலையைக் காதல் வயப்படும்போது டோபமைன் ஏற்படுத்துகிறது.

ஒருவரைப் பார்த்தவுடனே மூளையின் Pleasure centreஇல் (கிளர்ச்சி மையம்) Dopamine (டோபமைன்) என்கிற வேதிப் பொருள் பெருக்கெடுத்து சுரக்கத் தொடங்கினால் அதன் பெயர் காதல் ஈர்ப்பு. அதற்காக டோபமைன் என்பதைக் காதல் சுரப்பி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காதலுக்கு என்று தனி சுரப்பி எதுவும் இல்லை. அது ஒரு பரவசச் சுரப்பி. கிட்டத்தட்ட கோகைன் போதைப் பொருளை பயன்படுத்தும்போது ஏற்படும் பரவச நிலையைக் காதல் வயப்படும்போது டோபமைன் ஏற்படுத்துகிறது.

காதலில் தோல்வி என்னும் எதிர் நிலையில் டோபமைன் முற்றிலுமாக வறண்டுவிடுவதுடன் ஏற்கெனவே சுரந்துக்கொண்டிருந்த செரடோனின் (Serotonin) என்கிற வேதிப் பொருளின் அளவும் வெகுவாகக் குறைந்துவிடும். இது மனச்சோர்வை ஏற்படுத்தும். இந்த மனச்சோர்வுதான் விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது.இந்த விபரீதங்களில் ஒன்றுதான் காதலித்தவரையே அழிக்க நினைப்பது. வினோதினி மரணம் நிகழ்ந்தது இப்படித்தான்.

காதலை Passionate என்கிறது உளவியல். அதாவது, கட்டுக்கடங்காத, மிக அதிகப்படியான விருப்பம் அல்லது காதல். இவ்வகை காதலின் கட்டுமானத்தை, காதல் மீதான வாழ்க்கைக் கட்டுமானத்தை முன்னதாகவே அந்த நபர் தீர்மானித்துவிடுகிறார். அதன் எல்லைகள், கோட்பாடுகள், விருப்பு வெறுப்புகள், ஊடல், கூடல் அனைத்துமே விதிமுறைகளாக முன்னதாகவே அந்த நபரின் மூளையில் வரையறுக்கப்பட்டுவிடுகின்றன. சிறப்பு ராணுவச் சட்டம்போன்ற தொரு மூளை நரம்பு மண்டல அமைப்பியல் அது.

காதலிக்கும் இருவருக்கும் இப்படியான மனநிலை அமைந்தால் அக்காதலில் விபத்து நேரிடும்பட்சத்தில் அவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் அமைந்தால் அதீத ஆபத்துதான். இதில் ஒருவர் பிரிய நேரும்போது அவர் இல்லாத உலகத்தை மற்றொரு வரால் கற்பனை செய்ய இயலாது. அதீத தனிமை மற்றும் வெறுமை உணர்வு ஏற்படும். காதல் என்னும் மெல்லிய உணர்வு அங்கு அதற்கு எதிரான கொலை உணர்வாக மாற்றம் எடுத்து, காதலித்தவரையே அழிக்கத் துணிகிறது.

ஆனால், காதலும் ஓர் வேதிவினையே என்கிற உண்மையை ஆழமாகவும் தெளிவாகவும் உணர்ந்தால் இதுபோன்ற சூழல்கள் நேரும்போது விபரீத முடிவுகள் எடுக்கத் தோன்றாது.

கட்டுக்கடங்காத ஈடுபாட்டைக் குறிக்கும் Passionate என்பதைப் பார்த்தோம். Compassionate என்னும் உணர்வும் இருக்கிறது. அறிவுபூர்வமான தெளிவு, அன்பு, பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, பாசம், நெகிழ்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை இவையே Compassionate காதலின் அம்சங்கள். ஆசைக்கு பதில் நெகிழ்வும் மரியாதையுள்ள ஈடுபாடு இருபாலருக்கிடையே வளர்ந்தால் காதலாலோ காதல் தோல்வியாலோ விபரீதங்கள் நிகழாது.

உதவி: மோகன் வெங்கடாசலபதி, மனநல மருத்துவர்.

SCROLL FOR NEXT