மூலிகளைச் சாறு பிழிந்து குகைகளில் ஓவியம் தீட்டினான் ஆதி காலத்து மனிதன். கொஞ்சம் காலம் வரை உடலில் எழுத்துகளையும் ஓவியங்களையும் பச்சை குத்திக்கொண்டு திரிந்தான் நவீன காலத்து மனிதன். ஆனால், ஒட்டுமொத்த உடலையே வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசர வைத்துக்கொண்டிருக்கிறான் டிஜிட்டல் காலத்து மனிதன். இந்த வகையான ஓவியத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உலக உடல் ஓவியத் திருவிழா!
கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில் ஆஸ்திரியாவில் ‘உலக உடல் ஓவியத் திருவிழா’ நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூலை 1 முதல் 3 வரை கர்ந்தியாவில் நடைபெற்றது. இந்தத் திருவிழா விதவிதமாகக் கலைகளை நேசிக்கும் ஓவியப் பிரியர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மேக்கப் அப் பொருட்களுடன் ஓவியப் பிரியர்கள் ஆஸ்திரியாவில் ஆஜராகிவிடுவார்கள். இந்த ஆண்டு கொஞ்சம் கூடுதலாக இந்தியா உள்பட 50 நாடுகளிலிருந்து ஓவியர்கள், ஓவியப் பிரியர்கள் ஆஸ்திரியாவில் குவிந்திருந்தார்கள்.
தூரிகை, காற்றுத் தூரிகை, ஸ்பாஞ்ச் உதவியுடன் உடலில் வரையப்படும் ஓவியங்களுடன் யார் வேண்டுமானாலும் இந்தத் திருவிழாவில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் உலகப் புகழ் ஓவியர்கள் முதல் கத்துக் குட்டி ஓவியர்கள் வரை பலரும் கலந்துகொண்டார்கள். விசித்திரமான தோற்றங்கள், விதவிதமான ஒப்பனைகள், விநோதமான அலங்காரங்கள் என உடலில் வண்ணம் தீட்டிக்கொண்டு இவர்கள் அணிவகுத்து வந்தனர்.
விலங்குகள், வாகனங்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணக் குவியலால் ஆன ஓவியங்கள் என உடலையே ஓவியத் திரையாக்கி இளைஞர்களும் யுவதிகளும் மேடையில் வலம்வந்தபோது ஓவியத்துக்குக் கால் முளைத்து வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது. குறிப்பாக இருட்டாக்கப்பட்ட அரங்கில் புற ஊதாக் கதிர் செலுத்திய உடல் ஓவியங்கள் பார்வையாளர்களுக்குப் பரவசம் ஏற்படுத்துபவை. மேலும் ஓவியத் திருவிழாவையொட்டிப் போட்டியும் நடைபெற்றது. இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள உடல் ஓவியங்கள் போட்டியில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவைதான்.
ஓவியர்கள், ஓவியப் பிரியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் ஒருசேர ஈர்க்கும் இந்த உடல் ஓவியத் திருவிழாவுக்கு ஆஸ்திரியாவில் பலத்த வரவேற்பு இருக்கிறது. அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. குறிப்பாக உடலைத் திரைச் சீலையாக்கிப் பல வண்ணக் குவியல்களை உடலில் கொட்டுவதால் தோல் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
ஆனால், உடல் ஓவியங்கள் மூலம் உலகின் முக்கியப் பிரச்சினைகளைப் பேசுவது, மனித உரிமைகளைப் பேசுவது, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவது, வெற்றிகளைக் கொண்டாடுவது, உடல் பாகங்களின் வழியே வண்ண அழகியலைப் படைப்பது என்று உலகம் முழுவதும் உடல் ஓவிய கலை இன்று பிரபலமாகிவருகிறது. அதன் வழியாகவே ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் உடல் ஓவியத் திருவிழாவும் ஓவியர்களின் அங்கமாகவே மாறிவிட்டது. அதனால், மருத்துவ விளைவுகளைப் பற்றியெல்லாம் இவர்கள் யாரும் கவலைப்படுவதில்லை.
அதனால், வண்ணமயமான ஓவியங்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் உலக உடல் ஓவிய திருவிழாவும் ஆஸ்திரியாவில் மெருகேறிவருகிறது!