ஆட்டிஸம் குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகக் கடந்த டிசம்பர் 21-ம் தேதி, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவக் கல்லூரியின் மாணவிகள் ஓர் ஒளிப்படக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ‘நீலத்தின் சாயல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் காட்சியை ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஒருங்கிணைத்திருந்தனர். கடந்த மாதம் சென்னையில் ‘வாய்ஸஸ் 2016’ என்ற தலைப்பில் இந்த மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ‘நீலத்தின் சாயல்’ ஒளிப்படக்காட்சியும் அதன் தொடர்ச்சிதான்.
உலகம் முழுவதும் ஆட்டிஸத்திற்கான நிறமாக நீலம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இந்த ஒளிப்படக் காட்சி நீல நிறத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. “ஒவ்வொரு ஆண்டும் சமூகத்தில் விழிப்புணர்வு தேவைப்படும் ஒரு பிரச்சினையைத் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றிய பிரச்சாரங்களை மேற்கொள்வோம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆட்டிஸத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுசெய்தோம். ஆட்டிஸம் குறைபாடு பற்றி மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் அதிக விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், சென்னை மக்களிடம் ஆட்டிஸம் பற்றிய சரியான புரிதல் இல்லை. அதனால்தான், ஆட்டிஸத்தை இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வுத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாணவி நிருபா சம்பத்.
இந்த ஒளிப்படக் காட்சியில் எண்பத்தெட்டுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் இடம்பெற்றிருந்தன. முதல் பரிசை வித்யா சங்கரும், இரண்டாவது பரிசை ஜெயக்குமாரும், மூன்றாவது பரிசை பாஸ்கரும் தட்டிச்சென்றனர். அத்துடன், பிரவீன் ராஜ் என்பவருக்குச் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. இந்த ஒளிப்படக் காட்சியில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி, பிரபல ஒளிப்படக் கலைஞர்கள் மார்ட்டின் தொன்ராஜ், என். தியாகராஜன் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.
- கனி