இளமை புதுமை

பிறக்கட்டும் புது உத்வேகம்!

எஸ்.எஸ்.லெனின்

ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் தினம்

இந்தியா என்றால், மக்கள்தொகை எண்ணிக்கைதான் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு நினைவுக்கு வரும். ஆனால், அதே ஐ.நா.வின் அறிவிப்பின்படி, 2014-ம் ஆண்டின் இறுதியில் ‘உலகின் மிகவும் இளமையான நாடாக' இந்தியா அடையாளம் பெற்றது.

உலக மக்கள் தொகையில் 24 வயதிற்குட்பட்ட சுமார் 35 கோடி இளைஞர்களுடன் ‘மிக இளமையான நாடுகளின் பட்டியலில்' முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தப் பெருமைக்காகவே ‘சர்வதேச இளையோர் தினத்தை' இந்திய இளைஞர்கள் கொண்டாடலாம்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இளைஞர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சம் தொட்டுள்ளது. 180 கோடி இளைஞர்களுடன் இந்த உலகம் முன்னெப்போதும் இல்லாத உத்வேகம் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் ஒரு நாடு வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர்வது, அதன் இளைஞர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

ஐ.நா அறிவித்த இந்த இளைஞர்கள் பலத்தில், உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவுக்கு(26.9 கோடி) இரண்டாம் இடம்தான். இந்தோனேஷியா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் அடுத்த இடங்களில் பிந்தியிருக்கின்றன.

ஐ.நா. அழைப்பு

வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதன் இளைஞர்களின் கையில் இருப்பதால், அந்த இளைஞர்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் உரிமைகளுக்கு அதிகம் முன்னுரிமை வழங்குமாறு ஐ.நா., தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதேவேளை முன்பைவிட தீவிரவாதம், இன வேறுபாடு, போதைப் பழக்கம், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட எதிர்மறைச் சவால்களை இன்றைய இளைஞர்கள் அதிகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தச் சவால்களைத் தெளிவுடன் எதிர்கொண்டு மீளவும், விழிப்புணர்வு பெறவுமான, சர்வதேச இளையோர் தினம் (International Youth Day) 2000-ம் ஆண்டு தொடங்கி அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டின் இளையோர் தினக் கருப்பொருளாக ‘2030-ம் ஆண்டை நோக்கி: வறுமை ஒழிப்பு மற்றும் வளங்குன்றா வளர்ச்சி’ என்பதை ஐ.நா அறிவித்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டின் இளையோர் தினம் ‘இளைஞர்களின் மனநல ஆரோக்கியத்தை’ இலக்காகக் கொண்டிருந்தது.

உலக இளைஞர்களில் 20 சதவீதத்தினர் வருடத்தில் ஒரு முறையேனும் மனநல ஆரோக்கியம் குன்றுவதோடு, இளையோரின் மரணங்களுக்கான காரணிகளில் தற்கொலை 3-வது இடத்துக்கு முன்னேறியதைத் தொடர்ந்தும் இந்த இலக்கு தீர்மானிக்கப்பட்டது. 2015 இளையோர் தினம், இளைய வயதினரை அதிக அளவில் பொதுவாழ்வில் ஈடுபடுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்காக ‘இளையோர் குடிமையியல் மேலாண்மை' என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தத் தலைப்புகள் செறிவான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இளையோர் தினக் கொண்டாட்டங்கள் அவர்களுக்கான பாணியிலே துள்ளலும், உற்சாகமுமாகப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் களைகட்ட நடைபெறுகின்றன. உலகம் முழுமைக்குமான இந்தக் கொண்டாட்டத் துடிப்புகளை ட்விட்டரில் #youthday என்பதில் பின்தொடர்ந்து அறிந்துகொள்ளலாம்.

இந்த தினம் தொடர்பாக இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்

ச.ராஜகுமாரி,பா.சுஜாதா

ச.ராஜகுமாரி, கல்லூரி மாணவி

"முந்தைய தலைமுறையினருக்கு இல்லாத தொழில்நுட்பம் மற்றும் அதனுடைய அனுகூலங்கள் எங்களுக்குப் பெரும் வரப்பிரசாதம். இதனால் உயர்கல்வி, அதற்குப் பின்னரான வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் அவற்றை அடைவதற்கான வழிகளும் விரிந்திருக்கின்றன."

பா.சுஜிதா, மனநலத்துறை உதவிப் பேராசிரியர்

"சென்னை வெள்ள உதவிகளைப் போல சமூக ஊடங்களுக்கு வெளியே, உண்மையான சமூகச் சேவை செய்யும் குணம் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்திருப்பது ஆரோக்கியமானது. தங்கள் நண்பர்கள் தேர்வில் முதிர்ச்சியானவர்களை இளைஞர்கள் தக்க வைத்துக்கொள்வதும், தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் நண்பர்களாகப் பாவிப்பதும் இன்றைய இளைய‌ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நல்லது."

முகமது தாஜூதீன்,அருண் கண்ணன்

எம்.முகமது தாஜூதீன், கல்லூரி மாணவர்

"இந்தத் தலைமுறை இளைஞர்களை எப்போதும் கொண்டாட்ட நிலையில் வைத்திருப்பதில் சமூக ஊடகங்களுக்கே முதலிடம். எனவே நாங்கள் அதனை மிகவும் நேசிக்கிறோம். அதே சமயம் மிதமிஞ்சிய நிலையில் எப்போதும் ‘விர்ச்சுவல்' உலகிலேயே மிதக்கும் இளைஞர்களால், நிஜ உலகின் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாததும் நடக்கிறது."

அருண் கண்ணன், லயோலா தொழிற்பயிற்சி நிறுவன இயக்குநர்

"மனித வளமே நாட்டின் உற்பத்தியைத் தீர்மானிக்கும் அடிப்படை. ஆனால் சீனாவைப் போல உற்பத்தியை மையமாகக் கொண்ட தொழில்முனைவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது, சேவைத் தொழில்களைக் கண்மூடித்தனமாய் வளர விடுகிறோம். மாறாக, இளைஞர்களின் படைப்புத்திறன், தன்னம்பிக்கை, சுய சிந்தனை, ஆர்வம் ஆகியவற்றுக்கு அடித்தளமிடுவதாய் பாடத்திட்டங்களும், கற்பித்தல் முறைகளும் மாறியாக வேண்டும். இளைஞர்களும் ஃபேஸ்புக் முழக்கங்களைக் கடந்து, தங்களது நிதர்சனமான அரசியல் பொருளாதாரப் புரிதல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்."

SCROLL FOR NEXT