இளமை புதுமை

நண்பர்கள் காதலுக்கு உதவலாமா?

ஆனந்த் கிருஷ்ணா

சமூகம் தன் நிர்வாக வசதிகளுக்காகக் குடும்பம் என்னும் அமைப்பில் பல உறவுமுறைக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. தாய், தந்தை, சகோதர சகோதரிகள், கணவன் மனைவி, மாமன், அத்தை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என்று பல உறவுகள். ஒவ்வோர் உறவுக்கும் அதற்கான பொறுப்புகள், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரம், இவற்றையும் அது தந்திருக்கிறது.

உறவுமுறை என்பது வேறு, அதைப் பயன்படுத்தும் நபர் வேறு என்னும் தெளிவு இல்லாமல் போகும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன. சமூகம் தந்த அதிகாரத்தைத் தன் சொந்த அதிகாரம் என்று பல பெற்றோர் நினைத்துவிடுகிறார்கள். அப்படிச் செய்யும்போது அவர்கள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். சமூகத்தின் இயக்கம் தடம் மாறிப் போகிறது. மனித உறவுகள் தனக்குள் இருந்து இயங்காமல் போய், சமூகத்தால் நிர்ணயிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிக்கல்கள்தான் இன்று பெரும் குழப்பங்களை விளைவித்திருக்கின்றன.

தனி மனிதனாகத் தனக்கான சொந்தப் பொறுப்பைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கும் நபர்கள்தான் சமூகப் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் சரியாகப் பயன்படுத்த முடியும். அப்போதுதான் சமூக உறவுகள் சீராக இயங்க முடியும். ஆனால் அம்மாதிரியான நபர்கள் உலகில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. இந்த நிலை மாற வேண்டும்.

நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவன். என் குடும்பத்தில் அப்பா, அம்மா, நான், மற்றும் தங்கை என நான்கு பேர் இருக்கிறோம். என் தங்கையும் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறாள். என் அம்மாதான் குடும்பத்தையும், எங்கள் படிப்பையும் கவனித்துக்கொள்கிறார். நானும் என் தங்கையும் வங்கியில் கடன் வாங்கித்தான் படித்துக்கொண்டிருக்கிறோம். என் அப்பா உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் எனத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கிக் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினையை உண்டாக்கிக்கொண்டிருக்கிறார். எங்களையும், அம்மாவையும் அடிப்பது, திட்டுவது என மிக மோசமாக நடந்துகொள்கிறார். அவர் வேலைக்கும் தொடர்ந்து செல்வதில்லை. எங்கள் அப்பாவால் நிறைய பணப் பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம். அப்பாவை எப்படிச் சமாளிப்பது?

உலகில் நான்கு விதமான மனிதர்கள் இருப்பதாக நான் எங்கோ படித்திருக்கிறேன். தனக்குத் தெரியாது என்பதை அறியாதவர்கள்; தனக்குத் தெரியாது என்பதை அறிந்தவர்கள்; தனக்குத் தெரியும் என்பதை அறியாதவர்கள்; தனக்குத் தெரியும் என்பதை அறிந்தவர்கள்.

இவர்களில் முதல் வகையினருக்கு யாரும் எதையும் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் தனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த வகையினர்தான் உலகில் பெரும்பலோர். உங்கள் தந்தையும் இது போன்றவர்தான் என்று தோன்றுகிறது. இவர்களின் செயல்கள் தமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. கணவர், தந்தை என்ற காரணத்தால் மட்டுமே இவரை நீங்கள் சகித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

எக்காரணம் கொண்டும் அவருக்குப் பணம் தர வேண்டாம் என்று உறவினர்களிடமும் தெரிந்தவர்களிடமும் கவுரவம் பார்க்காமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். அவர் செய்வது குடும்ப வன்முறை என்பதையும், அது சட்டப்படி குற்றம் என்பதையும் சொல்லுங்கள். தன்னை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் பயப்படாமல் சொல்லுங்கள். தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். உங்களை நீங்கள் மதிக்கும் பட்சத்தில் நீங்கள் மூவரும் செய்ய வேண்டியது இதுதான்.

நானும் என் தோழியும் பள்ளி, கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். இப்போது என் தோழி வேலை செய்துவருகிறாள். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என் தோழி ஒருவரைக் காதலித்தாள். அவர் எனக்கும் நல்ல நண்பர். அவர்கள் காதலுக்குத் தொடர்ந்து நான் உதவிவந்தேன். இப்போது அவர்கள் இருவருக்கும் பிரச்சினை. அதனால் பேசிக்கொள்வதில்லை. இருவரும் ஆரம்பத்திலிருந்தே அவர்கள் காதலில் வரும் பிரச்சினையை என்னிடம்தான் பகிர்ந்துகொள்வார்கள். இப்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிடுவார்கள்போல் தெரிகிறது. இது என்னைப் பாதிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்குத் தக்க இடைவெளி தேவை. இடைவெளி என்பதே இல்லாமல் அவர்கள் உறவில் நீங்கள் பங்குகொள்ளும்போது, உங்கள் கண்ணோட்டம் தவறாகப் போகிறது. உள்ளதை உள்ளபடி உங்களால் பார்க்க முடிவதில்லை.

தோழி என்னும் உறவின் வரையறைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களின் பிரிவு உங்களுக்கு வருத்தத்தைத் தரலாம். அது நியாயமானதுதான். ஆனால் அதனால் நீங்கள் பாதிக்கப்படுவது என்பது சரியல்ல. அது அவர்களின் வாழ்க்கை. இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழாமல் அவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றிப் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இது உங்களை வேதனைக்கு இட்டுச் சென்றுவிட முடியும். அவர்களின் முடிவு எதுவானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சொந்த அனுபவத்திலிருந்துதான் நீங்கள் வாழ்க்கை பற்றிக் கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

SCROLL FOR NEXT