இளமை புதுமை

கேர் ஆஃப் விவேகானந்தர் தெரு...

ம.சுசித்ரா

‘விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து’ என எழுதப்பட்ட வழிகாட்டிப் பலகைக்குப் பக்கவாட்டில் நிற்கும் ஒரு நபரின் ஒளிப்படத்தோடு கடந்த சில நாட்களாக ஒரு மீம்ஸ் வாட்ஸ் அப்பில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதைப் பார்த்துச் சிரித்துவிட்டு நண்பர்களுக்கெல்லாம் பகிர்ந்திருப்போம். இது குறும்புத்தனமான பொய். ஆனால் சிலர் உண்மையிலேயே அப்படியொரு தெரு துபாயில் இருப்பதாகக்கூட நம்பக்கூடும். அதை நம்புவதால் பாதகம் ஒன்றும் இல்லையே!

ஆனால் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் சில பொய்த் தகவல்கள், உண்மையைத் திரித்துக் கூறும் செய்திகள் போன்றவை சமூகத்தில் கடுமையான தாக்கத்தை விளைவித்துவருகின்றன. அசவுகரியம், பதற்றம் ஆகியவற்றில் தொடங்கி உள்ளூர் கலவரம்வரை அவை ஏற்படுத்தும் விபரீதம்... பயங்கரம்!

சுந்தர் பிச்சையின் பெயரால்…

அதில் சமீபத்தில் சிக்கியவர், ‘கூகுள் தமிழன்’ சுந்தர் பிச்சை. மாட்டுக்கறி தடை விவகாரம், இந்திய ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணி நீக்கப் பிரச்சினை, நீட் தேர்வு சிக்கல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களில் அவருடைய தலை உருட்டப்பட்டது. அதுவும் எப்படி?

‘எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. ஆனால் இந்தியாவில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழப்பதும் என்னை வருத்துகிறது. இந்தியா கவலைகொள்ள வேண்டியது மக்கள் நலன் குறித்துத்தான். அவர்களின் உணவுப் பழக்கம் குறித்து அல்ல. மாட்டுக்கறியோ அல்லது வேறு எந்த உணவுப் பண்டமோ எதைச் சாப்பிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தப்பட்டது. அதற்குத் தடை போட யாருக்கும் அதிகாரம் கிடையாது.

மக்களின் சுதந்திரத்தை மன்னர் தீர்மானிக்கும் இருண்ட காலத்தில் நாம் இல்லை. இந்தியா போன்ற ஒரு தேசம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதத்தை நோக்கிச் செல்லக்கூடாது. மதத்தை முன்வைத்து நகர்வது இந்தியாவின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். இங்கு நிலவும் மதரீதியான பதற்றமான சூழலினால்தான் ஏற்கெனவே பல பெரு நிறுவனங்கள் இங்கிருந்து விலகிப் போகத் தொடங்கிவிட்டன. இளம் பகுத்தறிவாளர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது’ – சுந்தர் பிச்சை, சி.இ.ஒ. கூகுள்

இப்படி ஒரு மீம்ஸ் சுந்தர் பிச்சையின் ஒளிப்படத்தோடும், ஒரு பிரபலப் பத்திரிகையின் இலச்சினையோடும் (லோகோ) வலம் வந்தது. இந்தப் பதிவின் நம்பகத்தன்மை சோதிக்கப்படாமலேயே பல லட்சம் பேர் அதைப் பகிர்ந்தனர். இதேபோல நீட் தேர்வை சுந்தர் பிச்சை கடுமையாக விமர்சிக்கும் பதிவு ஒன்றும் வாட்ஸ் அப்பில் உலவியது. போதாததற்கு சுந்தர் பிச்சை தமிழிலேயே எழுதிய பதிவு வேறு!

கண்டுபிடி கண்டுபிடி

சுந்தர் பிச்சையின் பெயரால் வந்த இந்தப் பதிவுகளை வைத்து வாட்ஸ் அப் குழுக்கள் பலவற்றில் பெரிய விவாதம் எழுந்தது. அவருடைய பார்வையை ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என இரண்டாகப் பலர் களம்கண்டனர். அதையும் தாண்டி இவ்விவகாரத்தில் சுந்தர் பிச்சை ட்விட்டரில் கடுமையாகச் சாடப்பட்டார். இந்திய விவகாரத்தில் மூக்கு நுழைப்பதை விட்டுவிட்டு அவருடைய வேலையை மட்டும் பார்க்கும்படி எச்சரிக்கப்பட்டார். பிறகு இவை அனைத்தும் ‘போலி (ஃபேக்) மீம்ஸ்’ எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு குழுவோ அல்லது தனிநபரோ தங்களுடைய கருத்தை மக்களிடம் பரப்ப சமூக வலைத்தளம் பிரம்மாண்டக் களமாக அமைகி றது. இதில் சிக்கல் என்னவென்றால் சில தகவல்களைப் பதிவேற்றுபவர்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்துக்கொள்கிறார்கள். அதற்குப் பதிலாகப் பிரபலங்களின் பெயரோடு, செய்தி சேனல்களின் இலச்சினையோடு பதிவிடுவது போன்ற உத்திகளைக் கையாள்கிறார்கள்.

தாங்கள் திணிக்க நினைக்கும் கருத்தை வேறொருவரின் முகத்தை முகமூடியாக அணிந்துகொண்டு செய்கிறார்கள். இதனால் பல குழப்பங்கள் விளைகின்றன. இப்படியாக, சுந்தர் பிச்சையின் பெயரில் பதிவுகளை உருவாக்கியவர் யாரோ. அதை படித்தவர்கள் எல்லாம் அந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என பஞ்சாயத்தில் இறங்கினார்களே தவிர நிஜமாகவே சுந்தர் பிச்சைதான் இதை எழுதினாரா என்கிற கேள்வியை யாருமே எழுப்பவில்லை.

இதேபோன்று நம் உள்ளங்கையில் வந்திறங்கும் பெரும்பாலான தகவல்களின் நம்பகத்தன்மையை முதலில் கேள்விக்குள்ளாக்கினாலே பிரச்சினை ஓரளவு தீர்ந்துவிடும். அதற்கும் மேலே அலசி ஆராய ‘Check4Spam’, ‘http://smhoaxslayer.com/’ போன்ற வலைத்தளங்கள் உள்ளன. இவற்றில் நமக்கு வரும் மீம்ஸை போஸ்ட் செய்தால் அவை போலியா உண்மையா என்பது கண்டுபிடித்துச் சொல்கிறது. பதிவான வார்த்தைகள் மட்டுமின்றி ஃபோட்டோஷாப் அல்லது மார்ஃப் செய்யப்பட்ட படங்களின் ஆதாரமும் தேடி வெளிக்கொணரப்படுகிறது.

இனியாவது, ‘நாளை பள்ளி விடுமுறை’ என்கிற சாதாரண மீம்ஸில் தொடங்கி ‘நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்ட கொலையாளிகளில் ஒருவன் இன்று விடுதலை. இவனை எங்கு பார்த்தாலும் எச்சரிக்கையாக இருங்கள்’ எனப் பதற்றம் ஏற்படுத்தும் மீம்ஸ் வரை அவற்றின் உண்மையைச் சோதிப்போம். ஏனென்றால் மெய்நிகர் தகவலால் நிஜ உலகம் ஆட்டம் காணலாமா?

SCROLL FOR NEXT